சென்னை, மெட்ரோ ரயில் நிலையங்களில், வாகனம் நிறுத்தும் இடங்களிலுள்ள காலி இடம் நிலவரங்களை தெரிந்து கொள்ளும் வசதியை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சி.எம்.ஆர்.எல்., மொபைல் செயலியில் கொண்டுவந்துள்ளது.
சென்னையில் தற்போது இரு வழித்தடங்களில், 54 கி.மீ., தூரத்திற்கு மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணியர் இருசக்கர வாகனங்கள், கார்களில் மெட்ரோ ரயில் நிலையத்திற்கு வந்து, அங்கிருந்து மெட்ரோ ரயில்களில் பயணிக்கின்றனர்.
இதற்கேற்ப சென்ட்ரல், எழும்பூர், விமான நிலையம், கோயம்பேடு, வடபழனி, வண்ணாரப்பேட்டை உள்ளிட்ட 41 ரயில் நிலையங்களிலும், வாகனம் நிறுத்தும் வசதி செய்யப்பட்டுள்ளது.
இதில், 28 மெட்ரோ ரயில் நிலையங்களில் கார்களை நிறுத்தும் வசதி உள்ளது.
சில இடங்களில், வாகன நிறுத்தம் பற்றாக்குறையால், பயணியர் அவதிப்படுகின்றனர். இதனால், கூடுதல் பார்க்கிங் வசதி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், பயணியர் சிரமத்தை போக்க, வாகனம் நிறுத்தும் இடங்களில் உள்ள காலி இடங்களின் நிலவரங்களை தெரிந்து கொள்ளும் வசதி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் சி.எம்.ஆர்.எல்., செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: சென்னையில் மெட்ரோ ரயில் பயணியர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, கூடுதல் வாகன நிறுத்தம் வசதிக்கு ஏற்பாடு செய்து வருகிறோம்.
ஆலந்தூர், சென்ட்ரல், விமான நிலையம் உள்ளிட்ட பல்வேறு மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகன நிறுத்தம் காலையிலேயே நிரம்பி விடுகிறது.
இதனால், பயணியர் வாகனம் நிறுத்தும் இடத்திற்கு வந்து ஏமாற்றத்துடன் செல்கின்றனர். எனவே, மெட்ரோ ரயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களில் காலியாகவுள்ள இடங்கள், வாகன வகை வாரியாக பயணியர் அறிந்து கொள்ளும் வகையில், சி.எம்.ஆர்.எல்., மொபைல்போன் செயலியில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதை பார்த்து கொண்டால், பயணியர் வீண் அலைச்சலை தவிர்க்க முடியும்.
இருப்பினும், கூடுதல் வாகனம் நிறுத்தும் வசதி கொண்டுவர, மெட்ரோ ரயில் நிலையங்களுக்கு அருகில் காலியாக உள்ள இடங்களை தேடி வருகிறோம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.