நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கோவை ஆட்சியர் அலுவலகத்தில் வங்கியாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
வங்கிகளில் வழக்கத்திற்கு மாறாக மற்றும் சந்தேகத்திற்கிடமான முறையில் பணம் எடுத்தல், ஒரு வங்கிக் கணக்கிலிருந்து பலரின் கணக்குகளுக்கு RTGS மூலம் வழக்கத்திற்கு மாறான பணப்பரிமாற்றம் செய்தல், ஒரு மாவட்ட தொகுதியில் உள்ள நபர்கள் அத்தகைய இடமாற்றத்தின் முன்மாதிரி இல்லாமல் ரொக்கமாக ஏதேனும் வைப்புத்தொகை செலுத்துதல், பணம் எடுத்தல் உள்ளிட்ட செயல்கள் செய்தால் அது சந்தேகத்திற்கிடமான பணப் பரிவர்த்தனைகளாக கருதப்பட வாய்ப்புள்ளது.
இப்படி பட்ட பணபரிவார்த்தை மூலம் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்கப் பயன்படுத்தப்படலாம் என்று சந்தேகம் இருந்தால் வங்கிகள் அதுதொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ள பறக்கும் படைக்கு தகவல் அளிக்கலாம் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் வங்கியாளர்கள், அமலாக்கத்துறை அலுவலர்கள், தேர்தல் செலவின பார்வையாளர்கள் பங்கேற்ற ஆலோசனை கூட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
நடைபெறும் பரிவர்த்தனைகள் சந்தேகத்திற்கிடமானதாக இருந்தால் அதை சரிபார்ப்பு செய்த பிறகு தேவையான நடவடிக்கை மேற்கொள்ளலாம். இருப்பினும், ரொக்க வைப்புத் தொகை அல்லது திரும்பப் பெறுதல் தொகை ரூ.10 இலட்சம் இருந்தால், வருமானத்தின் கீழ் தேவையான நடவடிக்கை எடுப்பதற்காக, வருமான வரித் தகவல் அனுப்பப்பலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் சந்தேகத்திற்கிடமாக பரிவர்த்தனைகள் செய்யப்படுகின்றனவா என்பதனை தொடர்ந்து முறையாக கண்காணித்திடவேண்டும் என வங்கியாளர்கள் மற்றும் அமலாக்கத்துறை அலுவலர்களுக்கு செலவின பார்வையாளர்கள் அறிவுறுத்தினர்.
கோவை செலவின பார்வையாளர்களான கீது படோலியாய், உம்மே ஃபர்டினா அடில் மற்றும் பொள்ளாச்சி செலவின பார்வையாளர்களான ஆஷிஷ் குமார், சௌரப் குமார் ராய், நீலகிரி செலவின பார்வையாளரான சந்தீப் மிஸ்ரா ஆகியோர் தலைமையில் இந்த ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் கோவை மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்திகுமார் பாடி, பொள்ளாச்சி தேர்தல் நடத்தும் அலுவலர் / மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, வட்டாட்சியர்(தேர்தல்) தணிகைவேல் மற்றும் வங்கியாளர்கள் பலர் கலந்துகொண்டனர்.