தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அலகு&1 தனி வட்டாட்சியர் நகர நில வரி திட்டத்தில் பணிபுரியும் நில அளவையர் லதா என்பவர் அந்தோணி என்னும் இடைத்தரகர் மூலம் ஆவண முறை கேட்டில் ஈடுபடுவதாக தெரிய வருகிறது.
பட்டுக்கோட்டை நகர நிலவரித் திட்டம் ஏ பகுதி மற்றும் பி பகுதியில் மனுக்கள் பெற பெற்றல் அரசு வருவாய் துறை நில அளவையர் சென்று அந்த இடங்களை அளப்பதில்லை. மாறாக மனுக்களில் குறிப்பிடப்பட்டுள்ள இடங்களுக்கு அந்தோணி என்னும் இந்த இடைத்தரகர் சென்று அங்கீகரிக்கப்படாத நில அளவைராக செயல்பட்டு இடங்களை அளந்து கொண்டு வந்து நகர அளவையர் லதாவிடம் வழங்குவார் என்றும் அவ்வாறு பெறப்பட்ட அளவை அடிப்படையாகக் கொண்டு சம்பந்தப்பட்ட இடத்திற்கு பட்டா வழங்குவதற்கு உண்டான ஆவணங்கள் தயார் செய்யப்படுவதாகவும் நம்ப தகுந்த வட்டாரங்கள் மூலம் தெரிய வருகிறது.
இவ்வாறு இவர் அளந்து கொண்டு வரும் இடங்களுக்கு அரசுக்கு வருவாய் இழப்பீடு ஏற்படுத்தும் வகையில் போலியான ஆவணங்கள் மூலம் பட்டா பெறுவதற்கு உண்டான வேலைகள் அரங்கேற்றப்படுகிறது என்றும் பல தொண்டு நிறுவனங்களுக்கு சொந்தமான இடங்களை இவ்வாறு முறைகேடாக கூட்டு பட்டா பெறவும் உட்பிரிவு ஆவணங்கள் தயார் செய்யப்பட்டு தனி நபர் பெயர்களில் பட்டா வாங்கி கொடுக்க லட்சங்களில் பேரம் பேசப்பட்டு பண பரிவர்த்தனையின் மூலம் ஆவண செய்யப்படுவதாகவும் தெரியவருகிறது.
மேலும் இந்த அந்தோணி என்பவர் நில அளவைக்கு தேவையான அரசால் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியும் பெறாமல் நில அளவை மேற்கொள்ள எந்த விதமான தகுதியும் இல்லாமல் அரசுத்துறை சார்பாக நில அளவை மேற்கொள்வது குறித்து நாம் அறிந்த போது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடியதாக இருந்தது. மேலும் அந்தோணி போன்று பல இடைத்தரகர்கள் வட்டாட்சியர் அலுவலகத்தை சுற்றி உள்ளேயும் வெளியேயும் நிரம்பி இருப்பதாகவும் இவர்களுக்கு ஒரு சில அலுவலர்கள் தங்கள் அலுவலக அறைக்குள் நாற்காலி மரியாதை கொடுப்பதாகவும் பெரும்பாலான நேரங்களில் எந்தவித பொதுமக்களுக்கும் இந்த மரியாதை கிடைப்பதில்லை என்றும் நமக்கு செய்திகள் வரப்பெறுகிறது.
மேலும் இந்த பணி இடத்திற்கு அளவையர் லதா அவர்கள் லட்சங்களில் வரிக்கொடுத்திருப்பதாகவும் செய்திகள் நமக்கு கிடைக்கப்பெறுகிறது. அரசு வருவாய் துறையில் அரசுக்கு வருவாயை ஏற்படுத்துவதற்கு பதிலாக சுயநல கணக்கில் வருவாய் பெருக்கிக் கொள்ளும் அதிகாரிகளை தட்டிக் கேட்க வேண்டிய பொறுப்பு மேலதிகாரிகளுக்கு தான் உள்ளது. கேட்பார்களா இயக்குனர்கள் திரு சிவகரனும், திரு கண்ணபிராணும். கவனத்தில் கொள்வாரா நில அளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரக இயக்குனர் திரு மதுசூதன் ரெட்டி இஆப என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். தவறு நடந்திருக்கும் பட்சத்தில் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே நியாயமாக இருக்கும்.
லஞ்சம் மற்றும் ஊழலை ஒழிக்க எத்தனை சட்ட திட்டங்கள் போட்டாலும் அதை நடைமுறைப்படுத்துவது என்னவோ அதிகாரிகளின் கைகள் தான் உள்ளது. திருடராய் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்று கவிஞர் கூறிய வார்த்தைகள் தான் நம் நினைவிற்கு வருகிறது. ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருக்கும் அரசியல்வாதிகளை ஊழல்வாதிகள் என்று சாடும் இந்த சமூகத்தில் பல ஆண்டுகள் பணிபுரிந்து தவறான செயல்களுக்கு துணை போகும் அதிகாரிகளை பற்றி பேசுவதற்கு சமூகத்தில் ஆட்கள் மிகக் குறைவு.
ஒருவேளை அரசியல்வாதிகள் ஐந்தாண்டுகளுக்கு உட்பட்டவர்கள் என்பதாலும் லட்சக்கணக்கில் அரசு இருக்கும் அதிகாரிகளை ஒப்பிடுகையில் குறைந்த எண்ணிக்கையில் உள்ளவர்கள் என்பதாலும் அவர்களை எளிதில் அரசியல் விமர்சனங்கள் பண்ணுகிறார்களோ! என்னவோ? காரணம் சரியாக புலப்படவில்லை என்றாலும். இவர் போன்று அரசு இயந்திரத்தில் இருக்கும் அதிகாரிகள் ஒவ்வொருவரும் ‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’ என்று அவர்கள் அலுவலகத்தில் இருக்கும் வார்த்தைகளை வெறும் வார்த்தைகளாக கடந்து செல்லாமல் வாழ்க்கை வழிமுறையாக கையில் எடுத்து பின்பற்றினால் மட்டுமே எதிர்கால சமூகம் தரம் மிகுந்ததாக இருக்கும் என்று நாம் எண்ணுகிறோம்.