வீட்டில் இருந்து முத்துவை அழைத்துக் கொண்டு வெளியே வந்த ஜான் கடை தெருவை நோக்கி நடக்க ஆரம்பித்தார். முத்துவும் ஏதோ ஜான் சாதாரணமாக தான் கடைத்தெருவுக்கு கூப்பிடுகிறார் என்று அமைதியாக ஜானுடன் நடந்தார். இரண்டு நிமிடம் வரை அமைதியாக நடந்து வந்த முத்துவிற்கு மூன்றாவது நிமிடத்தில் பொறுக்க முடியவில்லை “என்ன ஆச்சு சார்? அமைதியா நடந்து வரீங்க! எங்க போறோம்? நான் வரும்பொழுது கடை தெரியல நிப்பாட்டி எல்லாமே வாங்கிட்டு வந்துட்டேனே இப்ப என்ன வாங்க போறோம்?” என்றார் ஜானை பார்த்து.
அமைதியாக முத்துவை பார்த்த ஜான் “எதுவும் வாங்க போல முத்து, சும்மா அப்படியே ஒரு அஞ்சு நிமிஷம் நடக்கலாம் போல இருந்துச்சு, அதான் உங்களை கூட்டிட்டு வந்தேன். தினமும் வேலைக்குப் போகும்போது கூட ஒன்னும் தெரியவில்லை ஆனால் தற்போது வேலையில் இருக்கிறோம் என்ற பேரில் வீட்டில் இருப்பது தான் மிகவும் கடினமாக இருக்கிறது. வேலை என்ற பெயரில் வீட்டை கவனிக்க மறந்து விட்டோமோ? என்ற குற்ற உணர்ச்சி அதிகமாக வருகிறது. அதிலும் இப்போதெல்லாம் அடிக்கடி வருகிறது. என் மகள் அவருடைய கடைசி சில நிமிடங்களை என்னுடன் பகிர்ந்து கொண்ட நினைவு, அதுபோல பல நிமிடங்களில் என்னுடன் பகிர்ந்து கொள்ள விரும்பியிருப்பாலோ? நான் அதை கவனிக்க தவறி விட்டேனோ? என்ற ஒரு கேள்விக்கு இனிமேல் விடை தெரியவே தெரியாது என்று நினைக்கும்போது சில சமயங்களில் என்னை அறியாமல் எனக்குள் பலவிதமான மாற்றங்கள் ஏற்படுகிறது. அது எப்படி கூறுவது என்று கூட எனக்கு தெரியவில்லை. கண்டிப்பாக அதை நான் கிறிஸ்டினாவிடம் பகிர்ந்து கொள்ள போவதில்லை..
இது ஒரு புறம் இப்படி இருக்க கிறிஸ்டினாவுடன் செலவிடும் நேரங்கள் மிகவும் கடினமாக இருக்கிறது. எங்கள் இருவரின் வாழ்க்கைக்கான அர்த்தமே என் மகள் தான். ஆனால் அவளும் தற்போது இல்லை என்பதால் எதற்காக வாழ்கிறோம் இந்த வாழ்க்கையின் அர்த்தம் தான் என்ன? என்று பலவிதமாக யோசனைகள் என்னை வாட்டி வதைக்கிறது” என்று ஜான் முத்துவிடம் கூறிக் கொண்டிருக்கையில் குறுக்கிட்ட முத்து” சார் நீங்களே இப்படி பேசலாமா? ஏஞ்சல் இல்லை என்பதை சில ஆண்டுகள் பழகிய எங்களாலே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அப்படி இருக்க உங்களுக்கு மனநிலை எப்படி இருக்கும் என்பதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இருப்பினும் நீங்கள் கிறிஸ்டினாவே உங்கள் கருத்தில் மையப்படுத்த வேண்டும்.
உடன்பிறவாமல் இருந்தாலும் எனது சகோதரி தான். ஒருவேளை உடன்பிறப்பில் சகோதரி இருந்திருந்தால் கூட இப்படி என் மீது அக்கறை கொண்டிருப்பார் என்பது எனக்கு சந்தேகம் தான். நீங்கள் எல்லாம் புராணக் கதைகளில் இடம்பெறும் நல்ல மனிதர்கள் போல அறிதனும் அறிதாக காணக்கூடிய மனிதருள் மாணிக்கங்கள். உங்களுடன் பழகுவதற்கு வாய்ப்பளித்த இறைவனுக்கு நான் நன்றி கூறிய நாட்களும் உங்களிடமிருந்து பெறப்பட்ட ஆலோசனைகள் மற்றும் அறிவுரைகள் மூலம் வாழ்நாளில் பல இடங்களில் என்னையும் என் குடும்பத்தாரையும் சிக்கலுக்கு உள்ளாக இருந்த சூழ்நிலையில் இருந்து நான் காப்பாற்றிய நாட்களில் உங்கள் குடும்பத்திற்காக நான் பிரார்த்தனை செய்த நாட்களும் பல உள்ளன”. என்று கூறிய முத்துவை பார்த்து விரக்தியில் சிரித்த ஜான் “அதுதான் முத்து இங்க பிரச்சனையே நல்லவர்களுக்கு இங்கு காலமே கிடையாது”.
“தயவுசெய்து என்னை நல்லவன் என்று கூறாதீர்கள். நான் எனது குடும்பத்தை காக்க தவறிய ஒரு பொறுப்பற்றவன். என் மகள் இறந்து ஓராண்டு காலம் முடியப் போகும் தருவாயிலும் இன்றளவும் என் மகளைப் பற்றி முழுமையாக தெரிந்து கொள்ளாத ஒரு பொறுப்பற்ற தகப்பன். எனக்கு என்னென்ன வேண்டும் என்று பார்த்து பார்த்து என்னை கவனித்துக் கொள்ளும் என் மனைவியை திரும்பிப் பார்த்து ஒரு புன்னகைக்க தவறிய ஒரு தகுதியற்ற கணவன். ஒரு தகப்பனாகவும் ஒரு கணவனாகவும் நான் தோற்றுவிட்டதாகவே உணர்கிறேன். என் மகளைப் பற்றி எனக்கு யார் என்று தெரியாத ஒரு பாதிரியார் என்னிடம் பெருமையாக பேசும் போது ஒரு தகப்பனாக பெருமிதமும், சந்தோஷமும் பட வேண்டிய நான் அவருக்குத் தெரிந்த அளவு கூட எனக்கு என் மகளைப் பற்றி தெரியவில்லையே என்பது எண்ணி கூனிக்குறுகி வெட்கப்படுகிறேன்”.
“கிறிஸ்டினா என்று கிறிஸ்துவை தனது பேரில் வைத்திருப்பதாலோ என்னவோ என் மனைவி இன்றளவும் அனைத்தையும் பொறுத்துக் கொண்டு எதையும் பொருட்படுத்தாமல் புன்னகையும், அன்பையும் தவிர வேறு எதையும் என்னிடம் காட்டாமல் இருக்கிறாள். மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்று தமிழில் படித்திருக்கிறோம். ஆனால் நான் தற்போது உணர்கிறேன். இதற்கு முன் பல நேரங்களில் உணர தவறி இருக்கிறேன்.” என்று கூறிய ஜானிடம் என்ன பதில் கூறுவது என்றே தெரியாமல், ஜானை எப்படி ஆறுதல் படுத்துவது என்றும் புரியாமல் தயக்கத்துடன் குழம்பி போனார் முத்து.
இருப்பினும் ஏதாவது ஒன்று சொல்ல வேண்டும் என்பதற்காக பேசத் தொடங்கிய முத்து “ஜான் சார், நாமெல்லாம் காவலர்கள். நம்முடன் இருப்பவர்கள் மட்டும் நமது குடும்பம் அல்ல என்பது நீங்களே பல முறை என்னிடம் சொல்லி இருக்கிறீர்கள். இந்த மொத்த சமூகமும் நமது குடும்பம் தான். இந்த சமூகத்தை சமூகவிரோதிகளிடமிருந்து காக்கும் ஒரு நல்ல காவலராக நீங்கள் உங்கள் பணியில் தோற்றதில்லை. முதலில் நீங்கள் தோற்று விட்டீர்கள் என்பதை எந்த இடத்திலும் கூறாதீர்கள். உங்களுக்கென்று நமது மொத்த சராக காவல் படையிலும் தனி மரியாதை உண்டு. உங்களுக்கு ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன் அந்த காலத்தில் எல்லாம் இப்போது இருக்கும் அதிகப்படியான காவலர்கள் போல் அப்போது கிடையாது. எப்போதுமே காவலர்களுக்கு பஞ்சம் தான். இருப்பினும் நீங்கள் பல நேரங்களில், பல இடங்களில் தனி ஆளாக இந்த சமூகத்தின் நன்மைக்காக போராடி இருக்கிறீர்கள். நான் கூற விரும்பவில்லை என்றாலும் எடுத்துக்காட்டாக கூறுகிறேன்: நீங்கள் உங்கள் மகள் ஒரு ஏஞ்சலை தவற விட்டதற்காக வருத்தப்படுகிறீர்கள். பல ஏஞ்சல்களை சமூகவிரோதிகளிடமிருந்து காப்பாற்றி அவர்களுக்கு நல்வாழ்வழித்த தந்தை என்பதை மறந்து விட வேண்டாம். ஆண்டு தவறாமல் துப்பாக்கி சுடும் போட்டியில் முதல் பரிசு பெறும் நீங்கள் இன்று வரை தப்பித்து செல்ல முயற்சி செய்த ஒரு சமூக விரோதியை கூட துன்புறுத்தியதில்லை.
எப்போதும் உங்கள் அன்பால் மட்டுமே அனைவரையும் வென்று இருக்கிறீர்கள். இதை நான் ஒரு சிறந்த சமூக பண்பும் அக்கறையும் கொண்ட சீர்மிகு அகிம்சை வழியில் நின்று போராடும் ஒரு சமூகப் போராளியாகவே உங்களை பார்க்கிறேன். அதனால் என்னை பொறுத்தவரை நீங்கள் ஒரு சிறந்த காவலர் சிறந்த சமூகப் போராளி மற்றும் சிறந்த தந்தை உங்கள் வாழ்க்கையின் அர்த்தம் உங்கள் வீட்டில் வளர்ந்த ஏஞ்சலோடு நின்று விடவில்லை உங்களால் காப்பாற்றப்பட்ட ஏஞ்சல்கள் அனைவரின் பிரார்த்தனைகளிலும் வாழ்த்துகளிலும் உள்ளது உங்கள் வாழ்க்கையின் அர்த்தம். பட்டப்படிப்பின்மை என்று ஒரு காரணத்தால் மட்டுமே நீங்கள் பதவி உயர்வு பெறவில்லை என்பதை நினைத்துக் கொள்ள வேண்டும். புதிய சட்ட திட்ட மாறுதல்கள் ஒருவேளை இன்று கொண்டு வரப்படாமல் இருந்திருந்தால். உங்களுடைய ஆற்றலுக்கும் அனுபவத்திற்கும் அறிவு கூர்மைக்கும் இந்நேரம் பல உயர் பதவிகள் உங்களைத் தேடி வந்திருக்கும் என்றார் முத்து.
(தொடரும்…)