தஞ்சை மாவட்டம் அம்மாபேட்டை யிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது மலையபுரம் கிராமம். இங்கு வசிக்கும் திரு.M.S.ஆனந்தன் அவர்கள் கூட்டுறவு வீட்டுவசதி சங்கத்தில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர் தற்போது தன்னால் இயன்ற அளவிற்கு கல்வி மற்றும் பொதுசேவைகளை செய்து வருகின்றார். அருகாமையில் உள்ள கிராமத்தில் கேட்டாலும் அவரது வீட்டை சரியாக அடையாளம் காட்டுகிறார்கள். கல்விக்கு உதவ வேண்டும் என்ற எண்ணம் எப்படி வந்தது என்று கேட்டபோது அவர் அளித்த பதில், நான் ஏழ்மையான விவசாய குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் உயர்கல்வியை அடையமுடியவில்லை. என்னை போன்றவர்களின் நிலையை நம்மால் முடிந்தவரை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் எனக்குள் ஏற்பட்டது. அதன்விளைவாக ஆரம்பத்தில் கல்விக்காக சிறுசிறு உதவிகளை செய்து வந்தேன். கடந்த சில வருடங்களில் சுமார் 30 மாணவ மாணவிகளுக்கு பள்ளி முதல் கல்லூரி வரை படிப்பதற்கு உதவியுள்ளேன்.
கொரோனா காலகட்டத்தில் சுமார் 14 மாணவர்களை தஞ்சையில் உள்ள தொழிற்பயிற்சி (ITI) நிலையத்தில் ஒரு தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் படிக்க வசதி செய்துள்ளேன். கஜா புயலின்போது வேதாரண்யம் சென்று அங்குள்ள மக்களுக்கு வேட்டி, சேலை, போர்வை மற்றும் உணவுகளை என்னால் இயன்றவரை செய்துள்ளேன். 16.12.2023 அன்று நடைபெற்ற 21ம் ஆண்டு கிறிஸ்துமஸ் நலத்திட்டம் வழங்கும் விழாவில் 300 நபர்களுக்கு வேட்டி 600 நபர்களுக்கு புடவை மற்றும் போர்வை வழங்கியுள்ளேன். நான் யாரிடமும் நிதி கேட்பதில்லை. அவர்களாக முன்வந்து வழங்கும்போது பயனாளிக்கு தேவையான பொருட்களாக பெறுவேன் என்கிறார்.
மேலும் சுற்றுச்சூழல் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட வேண்டும் என்று 16.12.2023 அன்று நடைபெற்ற விழாவில் 1000 நபர்களுக்கு மா, பலா, தேக்கு மரக்கன்றுகளை வழங்கியுள்ளேன். எனது கல்வி மற்றும் பொதுசேவை கூட்டுறவு சங்கத்தில் பணியிலிருக்கும் போது தொடங்கிவிட்டேன். எனது செயல்பாட்டிற்கு மிகவும் உறுதுணையாக இருப்பவர் எனது மனைவியே. நான் பிறருக்கு உதவி செய்வதால் தான் நானும் எனது குடும்பமும் மனநிறைவோடு இருக்கின்றோம்.
இவரது மனைவி M.A.கற்பகமேரி குழந்தைகள் நல ஊட்டச்சத்து மேற்பார்வையாளராக பணிபுரிந்து பணி ஓய்வு பெற்றவர். மகன் நவீன்குமார் பொறியியல் பட்டதாரி. தற்போது பெங்களூரில் ஆராய்ச்சியாளராக பணியாற்றுகிறார். மகள் ஜெனிபர் M.A., B.Ed., M.Phil பட்டம் பெற்றவர். கல்லூரி பேராசிரியராக பணிபுரிகின்றார். தற்போது ஆனந்தன் அவர்கள் தஞ்சை மறைமாவட்டத்தில் SC/ST பணிக்குழுவின் பொருளாளராக பொறுப்பு வகிக்கின்றார். இவரது சமூகசேவை பணியை கௌரவப்படுத்தும் விதமாக இவருக்கு அகில இந்திய ஆயர்பேரவை (இந்தியா முழுவதும் உள்ள மறைமாவட்ட ஆயர்கள் சங்கம்) டாக்டர் B.R.அம்பேத்கார் வாழ்நாள் சாதனையாளர் தேசிய விருது வழங்கியுள்ளது.
இவரது சேவை தொடர வாழ்த்துகள்.