தஞ்சாவூர் கீழவாசல் பகுதியைச் சேர்ந்தவர் முகமது ரபீக்கின் மனைவி பைஜான் பேகம். இவரது கணவர் தஞ்சாவூரிலுள்ள ஓட்டலில் பணிபுரிகின்றார். இவரது செல்போன் எண்ணிற்கு ஒரு அழைப்பு வந்துள்ளது.
மறுமுனையில் பேசியவர் தான் சென்னையில் உள்ள பிரபலமான நிதிநிறுவனத்தில் பணிபுரிபவராக தெரிவித்துள்ளார். குறைந்த வட்டியில் 4 இலட்சம் வரை கடன் வழங்கப்படும் என்றும் அதற்கு அவரது வங்கி கணக்கில் குறைந்தபட்சமாக 20 ஆயிரம் வரை இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். பைஜான் பேகமோ தனது கணக்கில் 10 ஆயிரம் மட்டுமே இருப்பதாக தெரிவித்துள்ளார். மறுமுனையில் பேசிய மர்மநபர் அதற்கு ரூபாய் 3 லட்சம் மட்டுமே கடன் தரமுடியும் என்ற கூறியுள்ளார். அதற்கு அந்தப் பெண் ஒப்புக்கொண்டதும் OTP அனுப்பியுள்ளார். கடன்தொகையை செயலாக்கம் செய்வதற்கு அந்த OTP ஐ தெரிவிக்குமாறு கூறியுள்ளார். அந்தப் பெண் OTPஐ தெரிவித்ததும் அடுத்த 10 நிமிடத்தில் அவரது வங்கி கணக்கிலிருந்து 10 ஆயிரம் மாயமாகிவிட்டது. அதிர்ச்சி அடைந்து அந்தப் பெண் மர்மநபரின் செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்டபோது இணைப்பு கிடைக்கவில்லை. தான் ஏமாற்றப்பட்டது தெரிந்து தஞ்சை சைபர் கிரைமில் புகார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூடுதல் மாவட்ட சைபர் கிரைம் காவல் கண்காணிப்பாளர் திரு.முத்தமிழ்செல்வன் அவர்களிடம் பேசியபோது, கடந்த 2023ம் வருடம் சைபர் கிரைம் குற்றம் தொடர்பாக மொத்தம் 1716 புகார்கள் பெறப்பட்டு அதில் 1324 புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 1200 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டு அதிலிருந்து 1.92 கோடி தொகையானது பாதிக்கப்பட்டவர்களின் வங்கி கணக்கிற்கு மாற்றப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் மக்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக எங்களுடைய பிரிவு சார்பாக துண்டு பிரசுரங்களை வெளியிட்டுள்ளோம். அதனை பொதுமக்கள் அதிகம் நடமாடும் இடங்களில் விநியோகித்து வருகிறோம். பொதுமக்கள் சைபர் கிரைம் குற்றங்களில் பாதிக்கப்பட்டால் கட்டணமில்லா தொலைபேசி எண் 1930 மற்றும் www.cybercrime.gov.in என்ற வலைதள முகவரிக்கு தாமதமில்லாமல் தெரிவிக்க வேண்டும் என்றார்.