மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் புருஷோத்தமன் தலைமையிலான போலீசார், சில நாட்களுக்கு முன்பு பல்லாவரம்-துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வேகமாக வந்த ஒரு ஆட்டோவை மடக்கி சோதனையிட்டபோது, அதில் பயணித்த நபரின் கைப்பையில் 6.5 கிலோ கஞ்சா இருந்தது. இதனையடுத்து அந்த நபரை கைது செய்து மடிப்பாக்கம் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தியதில், அவர் நங்கநல்லூரைச் சேர்ந்த சீனிவாச ராகுல் (29) என்பதும், பெருங்களத்தூரில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதும் தெரிந்தது. பெங்களூருவில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஷேக் இப்ராஹிம் (29) என்பவர் தனக்கு கஞ்சாவை வாங்கி அனுப்பியதாக சீனிவாச ராகுல் தெரிவித்தார். இதனையடுத்து திருச்சி, மன்னார்புரம் புதிய காலனியில் ஷேக் இப்ராஹிம் பதுங்கியிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீசார் அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.