பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் உதவியாளராக பணிபுரியும் பொன் மணிகண்டன் சமீபத்தில் சால்வெண்சி என்று கூறப்படும் ஒரு நிலத்தின் மீதான கடன் அளிப்பு அல்லது விடுவிப்பு தொடர்பான செயலுக்கு லஞ்சம் பெற்று உள்ளார். அதாவது பாளையம் என்னும் இடத்தில் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான இடம் தொடர்பான சால்வன்சிக்கு வட்டாட்சியருக்கு ஒரு லட்ச ரூபாயும் தனக்கு தனியாக 50,000 ரூபாயும் வேண்டும் என்றும் கராராக பேசி தொகையைப் பெற்றுக் கொண்டு இவரே அந்த இடம் தொடர்பாக அரசுக்கு செலுத்த வேண்டிய தொகை செலுத்தி அந்த இடம் தொடர்பான ஆவணங்களை முடித்து வைத்துள்ளார். மேலும் லஞ்சமாக பெற்ற பணத்தை கொண்டு புதியதாக கல் பதித்த மோதிரம் ஒன்று வாங்கி கொண்டுள்ளார் என்பது பல நம்ப தகுந்த வட்டாரங்களில் இருந்து செய்திகளாக தெரிய வருகிறது.
வழக்கமாக ஒரு அதிகாரி வாங்கும் லஞ்சப் பணத்தை மேஜைக்கு கீழ் என்பார்கள். அதுவே ஆள் வைத்து வாங்கும் லஞ்சப் பணத்தை புரோக்கர் என்பார்கள். ஆனால் அதிகாரிக்கே தெரியாமல் அவர் பெயரில் வாங்கப்படும் பணத்தை என்ன சொல்வது என்று இனி தான் கண்டுபிடிக்க வேண்டும். வங்கியில் கடன் பெற்றும், குருவி போல் சிறிது சிறிதாக சேர்த்தும் காணி நிலம் வேண்டும் என்ற தமிழ் கூற்றை கனவாகக் கொண்டு அதை கஷ்டப்பட்டு நினைவாகும் சாமானிய பொதுமக்கள் பொன் மணிகண்டனுக்கு கட்டாயமாக பணம் கொடுத்தால் மட்டுமே அடுத்த கட்டமாக நிலம் தொடர்பான பட்டா, சிட்டா போன்ற மனுக்களுக்கு தாசில்தாரை பார்க்க முடிகிறதாம். இவருக்கு பணம் கொடுக்காமல் பொதுமக்கள் எவரையும் இவர் தாசில்தாரை பார்க்க விடுவது இல்லையாம். கற்றறிந்த படிப்பறிவு காரணமாக அதிகாரிக்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு, ஆனால் அந்த அதிகாரியின் உடன் செல்லும் உதவியாளருக்கு சென்ற இடமெல்லாம் செழிப்பு என்பது தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் தான் நடைபெறுகிறது.
தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சி.பி.எஸ்.சி தரச் சான்றிதழ் பெற்ற பள்ளிகளுக்கு வட்டாட்சியர் ஆய்வுக்கு சென்றால் வாகன எரிபொருளுக்காக ரூபாய் 5000 மற்றும் அரசு அலுவலக மேம்பாட்டிற்காக ரூபாய் 5000 என்று வாங்கும் வட்டாட்சியரின் உதவியாளர் பொன் மணிகண்டன், வட்டாட்சியர் அலுவலகத்திற்கு கட்டாயமாக பொருள்கள் வாங்கிதரவேண்டும் என்று கரார் செய்கிறாறாம். இவற்றை அதிகாரிக்கு தெரிந்து வாங்குகிறாரா அல்லது தெரியாமல் வாங்குகிறாரா என்பது நமக்கு தெரியவில்லை, தெரியாமல் வாங்குகிறார் என்றே நாம் நம்புவோம். ஒருவேளை தற்போது இருக்கும் தாசில்தார் பெயரில் ஏற்கனவே அரசு அலுவலக கட்டிட மேம்பாட்டிற்கு பொதுமக்களிடம் பணம் கேட்டதாக எழுப்பப்பட்ட புகாரை மையப்படுத்தி தனக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டு அதிகாரியின் பெயரில் பணம் வாங்குகிறாரா என்பதும் நமக்கு புலப்படவில்லை. இத்தனைக்கும் இவர் வகிக்கும் பதவி இவர் தந்தை இறந்ததால் இவருக்கு கருணை அடிப்படையில் கிடைக்கப் பெற்றதாம். இவரது தந்தை பொ.செல்லன் புனல்வாசல் கிழக்கு கிராம உதவியாளராக பணியில் இருந்த போது இறந்ததாகவும், அதன் வழியாக கிடைக்கப்பெற்ற உதவியாளர் பணியில் தான் பொன் மணிகண்டன் தற்போது இருப்பதாகவும் தெரிய வருகிறது.
மேலும் மனைச்சான்று வாங்குவதற்கு வட்டாட்சியரை சந்திக்க வந்தால் இவர் பேரம் பேசுகிறார். பொதுமக்களிடம் கட்டாயமாக பணம் பெறுவதோடு அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களிடம் பல காரணங்களை கூறி மிரட்டியும், பொய்கள் கூறியும் பணம் பெறுவதோடு பணத்தைக்கொண்டு வேலை நேரத்தில் வேலைக்கு வராமல் மது அருந்திவிட்டு ரோட்டில் கிடந்ததாகவும், அதனைத் தொடர்ந்து துறைரீதியாக நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஒவ்வொரு முறையும் இவரது உறவினர்கள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் நஷ்டப்பட்ட பணங்களை பட்டுவாடா செய்தும் வேலையை தக்கவைத்து கொடுத்து இருப்பதாகவும் தெரிய வருகிறது. பட்டுக்கோட்டை வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரிந்த போது பொதுமக்களுக்காக அரசு வழங்கிய இலவச வேட்டி சேலைகளை மூட்டைகளாக தனது உறவினர்களுக்கு வழங்கியது தெரிய வந்து திருடப்பட்ட மூட்டைகளுக்கான பணத்தை அரசுக்கு தண்டனையாக செலுத்தியதும் குறிப்பிடத்தக்கது. மேலும் பொன் மணிகண்டன் வட்டாட்சியரின் கை பாவையாக செயல்படுவதாகவும் அதனால் அதிகாரிகள், இடைத்தரகர்கள் என அனைவரும் இவரை வைத்து காரியங்கள் சாதித்துக் கொள்வதாகவும் பரவலாக நமக்கு கிடைக்க பெறும் செய்தி.
மேலும் சமீபத்தில் அரசியல் ஒற்றன் இதழில் அக்கினி ஆற்று படுகையில் மணல் திருட்டு சம்பந்தமாக கிராம நிர்வாக அலுவலர் முதல் காவல்துறை அதிகாரி வரை லஞ்சம் பாய்ந்து உள்ளதாகவும் விரிவான தகவல்களுடன் அதிகாரிகளின் பெயர்கள் அடுத்த இதழில் வெளியிடப்படுவதாக வந்த செய்தி குறிப்பில் வெளியிடப்பட போகும் அதிகாரிகளின் பெயர் பட்டியலில் இவருடைய பெயர் முக்கிய பங்கு வகிக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
கருணை அடிப்படையில் வந்தவர் என்பதால் இதுவரை இவர் மீது கருணை கொண்ட அதிகாரிகள் இவர் கருணை இல்லாமல் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் நடவடிக்கைக்கு மேலும் செவி சாய்த்து கருணை கொள்வார்களா அல்லது காட்டிய கருணை போதும் என்று கடமையை செய்வார்களா என்று பொறுத்திருந்து பார்ப்போம். கடமையை செய்வாரா அல்லது கருணை கொள்வாரா தஞ்சை மாவட்ட ஆட்சியர்.