கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி பகுதியை சேர்ந்த கணேசன் மகன் நாகராஜ் என்பவர் பெயிண்ட் கடையை நடத்தி வருகிறார். கடைக்கு வந்த கருவூரை சேர்ந்த சாய் ஸ்ரீ அவரது கணவர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி ஆகியோர் அவரைப் பற்றி விசாரித்து அவர் மகன் வேலையில்லாமல் இருப்பதை அறிந்து நாகராஜிடம் தனது மகனுக்கு அரசு வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறியுள்ளனர். மேலும் அரசு வேலையில் சேர்வதற்கு அதிகாரிகளிடம் பணம் கொடுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.அதனை நம்பி நாகராஜ் அவர்களிடம் ரூ.1,60,000/- பணத்தை கொடுத்துள்ளார். ஆனால் அவர் மகனுக்கு வேலை வாங்கி கொடுக்காமல் ஏமாற்றியது தெரிய வந்தது.
இதுகுறித்து நாகராஜ் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் அளித்ததின் பேரில் கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.பத்ரிநாராயணன், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் படி மாவட்ட குற்றப்பிரிவில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, மேற்படி வழக்கில் தொடர்புடைய நபர்களை கைது செய்ய தனிப்படைகள் அமைத்து மோசடி செய்த நபர்களை தேடி வந்த நிலையில் 30.05.2024 அன்று சாய் ஸ்ரீ, அவரது கணவர் கிருஷ்ணகுமார் மற்றும் அவரது மாமா பெருமாள்சாமி ஆகியோர்களை கைது செய்து அவர்களிடம் விசாரணை செய்ததில் அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி கோவை மாவட்டத்தில் மேலும் 9 நபர்களிடம் மொத்தம் ரூ.22,55,000/- ஏமாற்றியது தெரியவந்தது. இது மட்டுமன்றி பிற மாவட்டங்களிலும் பலரை ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்தது. எனவே மேற்படி மூன்று நபர்களை கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
மேலும் இதுபோன்ற அரசு துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறினால் பொதுமக்கள் யாரும் பணத்தை கொடுத்து ஏமாற வேண்டாம் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் அறிவுரை வழங்கினார்.