மக்களவைத் தேர்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளையும் திமுக கூட்டணி கைப்பற்றியுள்ளது. அதிமுக, பாஜக அணிகள் ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. நாம் தமிழர் கட்சியும் தோல்வியைச் சந்தித்துள்ளது. கடந்த மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் ஒரு தொகுதியில் தோல்வியைத் தழுவி, 38-இல் வென்ற நிலையில், இந்தத் தேர்தலில் அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றிக் கனியைப் பறித்துள்ளது.
தமிழகத்தில் மொத்தமுள்ள 39 தொகுதிகளில், அதிமுக 28 இடங்களிலும், பாஜக 11 இடங்களிலும் இரண்டாவது இடத்தைப் பிடித்தன. விருதுநகர், தருமபுரி போன்ற சில தொகுதிகளில் திமுக அணி வேட்பாளர்களுக்கு எதிர்க்கட்சி வேட்பாளர்கள் கடுமையான சவாலை அளித்தனர்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கோயம்புத்தூர் தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் வெற்றிக் கோட்டைத் தொட்டபடியே இருந்தார். ஒரு கட்டத்தில் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வேட்பாளர் கே.அண்ணாமலையை முந்திச் சென்றார்.
இதே சுவாரஸ்யம் தருமபுரி தொகுதியிலும் நடைபெற்றது. பாஜக அணியில் இடம்பெற்ற பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணிக்கும், திமுக வேட்பாளர் ஏ.மணிக்கும் இடையே பலத்த போட்டி ஏற்பட்டது. இருவரும் மாறி மாறி முன்னிலை பெற்று வந்த நிலையில், பிற்பகலில் முடிவுகள் தெளிவாகின. திமுக வேட்பாளர் மணி இலக்கை நோக்கி முன்னேறி வெற்றி பெற்றார்.
தமிழகத்தின் நட்சத்திர தொகுதிகளில் ஒன்றான விருதுநகர் தொகுதியிலும் தேமுதிக (அதிமுக அணி), காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு இடையே கடும் இழுபறி ஏற்பட்டது. காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை எதிர்த்துப் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் பல சுற்றுகளில் முந்திச் சென்றார். முதல் சுற்றிலேயே விஜய பிரபாகரனுக்கு வெற்றி கிட்ட, அது தொடர்ந்து கொண்டே சென்றது. ஆனால், எட்டாவது சுற்றில் இருந்து இருவரும் மாறி மாறி முந்திச் செல்ல, 12-ஆவது சுற்றில் இருந்து வெற்றிப் படிக்கட்டுகளில் ஏறி முன்னேறத் தொடங்கினார் மாணிக்கம் தாகூர். முதல் முறை வேட்பாளர் என்ற போதும் கடுமையான போட்டியை ஏற்படுத்தினார் விஜய பிரபாகரன்.
அதிமுக, பாஜக வேட்பாளர்களில் பலர் கவனத்தை ஈர்த்தாலும், இரண்டு கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளால், ஓரிடத்தில்கூட வெற்றி பெற முடியவில்லை. விருதுநகர், தருமபுரி தொகுதிகளில் வெற்றிக் கோட்டை எட்ட முயன்றபோதும், அதை காங்கிரஸ், திமுக கட்சிகள் தட்டிப் பறித்து குறைந்த வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன. தனித்துக் களம் இறங்கிய நாம் தமிழர் கட்சி, ஈரோடு, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, கள்ளக்குறிச்சி ஆகிய தொகுதிகளில் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்று பிரதான கட்சிகளை அசைத்துப் பார்த்தது கவனிக்கத்தக்க அம்சமாகும்.
தஞ்சையில் வெற்றி வாகை சூடிய திமுக வேட்பாளர் முரசொலி!
திமுக சார்பில் வேட்பாளராக முரசொலியும், அவரை எதிர்த்து அதிமுக சார்பில் கூட்டணி கட்சி வேட்பாளராக தேமுதிகவை சேர்ந்த சிவநேசன், பாஜக சார்பில் எம்.முருகானந்தம், நாம் தமிழர் கட்சி சார்பில் ஹுமாயூன் கபீர் ஆகியோர் போட்டியிட்டுள்ளனர்.
தஞ்சாவூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் முரசொலி 3 லட்சத்து 19 ஆயிரத்து 583 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதையடுத்து திமுக ஒன்பதாவது முறையாக தஞ்சையை தனது கோட்டையாக மாற்றி உள்ளது.