பட்டா என்பது நிலத்தின் உரிமையை சொல்லும் ஒரு ஆவணமாகும். அதாவது இன்னார்தான் நிலத்தின் உரிமையாளர் என சொல்லும் ஒரு ஆவணமாகும். இந்த சான்று வருவாய்த் துறை வழங்குகிறது. நாம் வைத்திருக்கும் நிலங்களுக்கு உரிய பட்டா இருந்தால்தான் அந்த இடம் நமக்கு சொந்தம்.
அது போல் ஒரு இடத்தை விற்கும் போதும் வாங்கும் போதும் பட்டா யார் பெயரில் இருக்கிறது என்பதை அறியலாம். இந்த பட்டாவில் நிலத்தின் ஓனர் யார், நிலத்தின் சர்வே எண், இந்த நிலம் எந்த வகையை சேர்ந்தது, எந்த பகுதியில் அமைந்துள்ளது உள்ளிட்ட விவரங்களுடன் இந்த ஆவணம் தரப்படும்.
உங்கள் பெயருக்கு பட்டா மாற்றும் முறை குறித்து டாப் இன்பார்மர் எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது: வீடுகளில் பத்திரம் இருக்கும். ஆனால் பட்டா யார் பெயரில் இருக்கும் என தெரியாது. அப்படி பட்டா பத்திரம் இரண்டும் ஒன்றாக இல்லை என்றால் அந்த சொத்து இருந்தும் எந்த பிரயோஜனம் இல்லை. பட்டாவை மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும்.
முதலில் பத்திரம் இருக்கும், பட்டா இருக்காது. இதில் உங்கள் பெயரை புதிதாக சேர்க்க என்ன செய்ய வேண்டும். இதற்கு கிரய பத்திரம், மூலபத்திரம், யார் பெயரில் இருக்கிறதோ அந்த பட்டா காப்பி ஒன்று, ஆதார் கார்டு, புகைப்படம், இந்த சொத்துக்கு 40 வருடம் அல்லது 50 வருடங்களுக்கு வில்லங்கம் போட்டு பாருங்கள், அந்த ஆவணத்தையும் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த ஆவணங்களுடன் ஒரு இசேவை மையத்திற்கு செல்லுங்கள். கிரய பத்திரம் யார் பெயரில் இருக்கிறதோ அந்த ஆதார் அட்டையுடன் மற்ற ஆவணங்களுடன் கொடுத்தால் அதை ஸ்கேன் செய்துவிட்டு ஆங்கிலத்திலும் தமிழிலும் ஒரு விண்ணப்பத்தை கொடுப்பார்கள்.
அந்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்துவிட்டு அதில் உங்கள் போட்டோவை ஒட்டி செல்போன் எண்ணை குறிப்பிடுங்கள். எத்தனை சென்ட், என்ன இடம் போன்ற தகவல்களை கேட்டிருப்பார்கள். அதையெல்லாம் நிரப்பியதும் அதையும் ஸ்கேன் செய்துவிடுவார்கள். உங்கள் பகுதிக்கு எந்த விஏஓவோ அந்த பகுதியின் பெயரை போடுங்கள்.
நீங்கள் கொடுத்த தகவல்கள் எல்லாம் ஆன்லைனில் ஏறிவிடும். அதன் பிறகு உங்களை 60 ரூபாய் கட்டணம் செலுத்த சொல்வார்கள். அதற்கு ஒரு ரசீதும் தருவார்கள். அதை வாங்கி பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். சம்பந்தப்பட்ட விஏஓவுக்கு அது தானாக போய்விடும். அங்கு போனதும் நீங்கள் கொடுத்த போன் நம்பருக்கு உங்கள் கோப்பு சரி செய்யப்பட்டுள்ளது என ஒரு மெசேஜ் வரும்.
உங்களுக்கு விஏஓவிடம் இருந்து அழைப்பு வரும். நீங்கள் ஏற்கெனவே ஸ்கேன் செய்த எல்லா அசல் ஆவணங்களையும் கொண்டு செல்லுங்கள். அந்த விஏஓ உங்களை விசாரிப்பார். உங்களிடம் ஒரு உறுதிமொழியை எழுதி வாங்குவார். அவர் உங்களை வட்டாட்சியர் அலுவலரிடம் அனுப்புவார். அங்கு இருக்கும் ஒரு அதிகாரி சரி பார்த்தவுடன் உங்கள் பெயருக்கு பட்டா வந்துவிடும்.
நீங்கள் எந்த இ சேவை மையத்தில் ஸ்கேன் செய்தீர்களோ அந்த மையத்தில்தான் பட்டா காப்பியை வாங்க முடியும். இவ்வளவு ஆவணங்களையும் சரி பார்த்து ஒரு சொத்தை வைத்திருந்தால்தான் உங்கள் குடும்பத்தினர் பிற்காலத்தில் அந்த சொத்தை அனுபவிப்பார்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.