எந்த வகையான சொத்துக்களை வாங்குவதாக இருந்தாலும், அதற்கு பட்டா ஆவணங்கள் கண்டிப்பாக தேவை.. இந்த பட்டாவில்தான், நிலம், வீடுகளின் உரிமையாளரின் பெயர், சர்வே எண், நில வகை, நிலம் அமைந்துள்ள பகுதி போன்ற விவரங்கள் அதிகாரப்பூர்வமாக பதிவாகியிருக்கும்..
இந்த அளவுக்கு முக்கிய ஆவணமாக கருதப்படும் இந்த பட்டாவில், மோசடிகள் நடப்பது பெருகி கொண்டே வருகிறது. குறிப்பாக போலியான பத்திரங்களை தயார் செய்து, நிஜ பத்திரங்களை போலவே உருவாக்கி மோசடிகள் பெருகி வருகின்றன..
இதனை களைவதற்கான முயற்சியில் தமிழக பதிவுத்துறை தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதேபோல, போலி பத்திரங்கள் நடமாட்டத்தை குறைக்கவும், லஞ்ச நடமாட்டத்தை குறைக்கவும் தமிழக அரசு பல்வேறு முயற்சிகளையும் முன்னெடுத்து வருகிறது. ஆனாலும் லஞ்சம் வாங்கும் அதிகாரிகளின் எண்ணிக்கையும் பெருகி வருகிறது.. இவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கைதாகியும் வருகிறார்கள்.
இதில் பெண் அதிகாரிகள் அதிக அளவில் லஞ்சம் வாங்கி கைதாகி அசிங்கப்படுவது அதிகரித்து வருகிறது.. அந்தவகையில், கடந்த சில நாட்களாகவே அதிர்ச்சியை ஏற்படுத்தியவர் மைதிலி என்ற பெண் அதிகாரி ஆவார்.
திருப்பூர் முத்தனம்பாளையம் கிராமம் ரங்கேகவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் ஜீவா.. 28 வயதான ஜீவா, ஒரு காய்கறி வியாபாரியாவார்..
இவரது அப்பா ராஜேந்திரனை, கடந்த பிப்ரவரி 16ம் தேதி மர்ம நபர்கள் கொலை செய்துவிட்டார்கள். எனவே, இந்த குடும்பத்தினருக்கு முதலமைச்சர் நிவாரண நிதி வழங்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்கு தேவையான ஆவணங்களை வருவாய்த்துறை அலுவலகத்தில் வாரிசு சான்றிதழ் உள்ளிட்டவற்றை சமர்ப்பிக்க வேண்டியதாயிருக்கிறது. இவரிடம் வாரிசு சான்றிதழ் இல்லாததால், திருப்பூர் தெற்கு தாலுகா, நல்லூரில் உள்ள வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்து இருந்தார்.
இதற்காக நல்லூர் வருவாய் ஆய்வாளரான மைதிலி என்பவரிடமும் அணுகியிருக்கிறார்.. ஆனால், வாரிசு சான்றிதழ் வழங்க வேண்டுமானால், 2,000 ரூபாய் லஞ்சம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார் மைதிலி.. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த ஜீவா, திருப்பூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.
அவர்களது யோசனையின் பேரில், வருவாய்த்துறை அலுவலகத்தில், வருவாய் ஆய்வாளர் மைதிலியிடம், லஞ்ச ஒழிப்பு போலீசார் அளித்த ரசாயனம் தடவிய 2 ஆயிரம் ரூபாயை லஞ்சமாக ஜீவா கொடுத்தார். அப்போது மறைந்திருந்த போலீசார், மைதிலியை கையும் களவுமாக கைது செய்துவிட்டனர்.
ஈரோடு மாவட்டம், பெருந்துறையை சேர்ந்த மைதிலிக்கு 43 வயதாகிறது.. முதலில் வாரிசு சான்றிதழ தருவதற்கு ஜீவாவிடம் 7 ஆயிரம் லஞ்சம் கேட்டாராம்.. ஒருபோதும் லஞ்சம் தர மாட்டேன் என்று ஜீவா சொல்லவும்தான், படிப்படியாக லஞ்சப்பணத்தை பேரம் பேசி, ரூ.2 ஆயிரமாக குறைத்தாராம்.
இந்த சம்பவம் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், துறை ரீதியாகவும் எதிரொலிக்க துவங்கிவிட்டது.. இதையடுத்து, மைதிலியை பணியிடை நீக்கம் செய்து திருப்பூர் மாவட்ட வருவாய் அதிகாரி அதிரடியாக உத்தரவிட்டிருக்கிறார். இத்தனை வருட காலம் ஒரு பொறுப்பு மிக்க உயர்பதவியை வகித்துவிட்டு, வெறும் 2 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கி, பொதுவெளியில் அசிங்கப்பட்டுள்ளார் இந்த 43 வயது பெண் அதிகாரி..!