மனிதன் ஜெயிக்காத ஒரு விஷயம் மரணம் மட்டும்தான். ஒரு பிறந்தநாள் கூட்டத்தின் நீளம் அவன் பெற்ற அங்கீகாரத்தை சொல்லும். ஒரு இறந்த நாள் கூட்டத்தின் நீளம் அவன் வாழ்ந்த வாழ்க்கையை சொல்லும். வாழ்க்கை தத்துவம் கடவுளுக்கு புரிந்தது.
இருக்கின்றபோது இல்லாத மரியாதை இல்லாத போது இருக்கிறது. மயானம் வந்தது நேற்றைய சவத்தை நாளைய சவங்கள் சுமந்து சென்றனர். கடவுள் யோசித்தான். இறப்பு என்று ஒன்று இல்லாமல் இருக்குமானால் இந்நேரம் மனிதன் கடவுளையே கொன்று இருப்பான்.
பாவம் ஆடிய மனிதர்கள் உறங்குவதற்கு செய்த ஆடாத தொட்டில்தானே மயானம். வந்த வேலை முடிந்து சென்றது கூட்டம். இது ஆறறிவு ஓய்ந்து ஆடுகின்ற ஆட்டம். கடவுள் யோசித்தான் உயர்ந்த ஜாதியினருக்கும் தாழ்ந்த வகுப்பினருக்கும் தனித்தனியே மயானங்கள் மதங்கள் ரீதியில் மயானத்தில் பிரிவுகள் சாம்பல் மேட்டில் கூட சன்மார்க்க பிரச்சனைகள்.
ஹா.. ஹா.. என்ன மனிதன் இவன் அரைஞான் கயிறை அறுத்துக் கொள்ளும் வேலையிலும் அடங்க மறுக்கிறானே. இந்த மனிதன் அங்கிருந்து கிளம்ப புறப்பட்டான். ஆவிகள் சில அடையாளம் கண்டுகொண்டனர். யார் நீ என்றான் இறைவன் நேற்று வரை நான் முதலாளி இன்று என் விலை எனக்கே தெரியவில்லை. 80 வயதில் இந்த இடம் தேவைதானா என்றது ஒரு ஆவி. ஆண்டவன் சொன்னார் எத்தனை காலம் வாழ்கிறாய் என்பது அல்ல வாழ்க்கை.. எப்படி வாழ்ந்தாய் என்பதுதான் வாழ்க்கை…
இறைவா இங்கு ஏன் படைத்தாய் இந்த சிறைக்குள்ளே அடைத்தாய் என்று கேட்டது ஒரு ஆவி. அதற்கும் பதில் சொன்னான். ஒரு அரசியல் ஆவி ஆண்டவா இங்கு இடைத்தேர்தலே வராதா இன்னும் நீ திருந்தவே இல்லையா என்று கேட்டான் கடவுள். ஒரே அழுகை சத்தம் பெண்ணாகப் பிறந்தது போதுமடா சாமி என்றது ஒரு ஆவி. ஆண்டவன் அருகில் வந்து காதோரம் சொன்னான் ஆணாகப் பிறந்து பார் அதை விட கஷ்டம் என்றான்.
இறைவா நான் செய்த பாவம் என்ன என்று அழுதது குழந்தையின் ஆவி. பாவிகள் நிறைந்த உலகத்தில் பிறந்தது தானடா நீ செய்த பாவம் என்றான் ஆண்டவன்.
சரி நல்லவர்களை எல்லாம் சீக்கிரம் அழைத்து கொள்கிறாய்.. கெட்டவர்களை நீண்ட நாள் வாழ வைக்கிறாயே… இது என்ன உன்னுடைய நீதி என்றான். நல்லவர்களை விட்டு வைத்தால் அவர்களும் கெட்டவர்கள் ஆகிவிடுவார்கள். மலர் படைத்தாய் மனம் படைத்தாய் பின்பு ஏன் இந்த உலகத்தில் மதம் படைத்தாய் என்று கேட்டது ஒரு ஆவி. ஆண்டவனுக்கும் அடி சரக்கும் என்றான் ஒரே சிரிப்பு சத்தம் நல்ல வேலை தற்கொலை செய்து செய்து கொண்டது நல்லதாய் போயிற்று. போதுமடா சாமி என்றது ஆவி கோழைகளோடு நான் பேசுவதில்லை என்றான் கடவுள்.
அது சரி எல்லா உயிர்களும் பிறக்கின்றன இறக்கின்றன உனக்கு மட்டும் சாவே கிடையாதா என்றது ஒரு ஆவி. யார் சொன்னது எனக்கு மரணம் உண்டு மழலைகள் சிரிக்கும் போது நான் பிறக்கிறேன் மனிதர்கள் இதுபோல் செய்யும்போதெல்லாம் ஒவ்வொரு கணமும் இறக்கிறேன் என்றான்.