கோவை அருகே கிருஷ்ணா நகர் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான ரூ.3 கோடி மதிப்பிலான 16 சென்ட் இடம் மீட்கப்பட்டுள்ளது.
கோவை மாநகராட்சி கிழக்கு மண்டலத்துக்குட்பட்ட 51-வது வார்டில் கிருஷ்ணா நகர் என்ற குடியிருப்பு பகுதி உள்ளது. இப்பகுதி கடந்த 1980ம் ஆண்டு 7 ஏக்கர் பரப்பளவில் 100 மனைகளாக பிரிக்கப்பட்ட இடம் ஆகும். இதில் நான்கு இடங்கள் அதாவது 16 சென்ட் பொது ஒதுக்கீட்டு இடமாக அப்போது ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 2007ம் ஆண்டு பொது ஒதுக்கீட்டு இடத்தை வரன்முறை செய்து அந்த இடத்தை வேறு நபருக்கு இடத்தில் உரிமையாளர் விற்பனை செய்து விட்டார். இதற்காக அந்த இடத்தில் இருந்த கிணறும் மூடப்பட்டது.
இது குறித்து அறிந்த சமூக செயல்பாட்டாளர் தியாகராஜன் கடந்த 2019ம் ஆண்டு மாநகராட்சி மற்றும் வட்டாட்சியர் அலுவலகங்களில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் ஆக்கிரமிப்புதாரருக்கு மாநகராட்சி சார்பில் நோட்டீஸ் அளிக்கப்பட்டது. மூன்று முறை நோட்டீஸ் வழங்கப்பட்டும் அவர் நேரடியாக விசாரணைக்கு வரவில்லை. இதைத் தொடர்ந்து மேற்கண்ட இடத்தை ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க மாநகராட்சி நிர்வாகத்தினர் முடிவு செய்தனர்.
அதன்படி மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் உத்தரவின் பெயரில் உதவி நகரமைப்பு அலுவலர் புவனேஸ்வரி தலைமையிலான நகரமைப்பு பிரிவு அதிகாரிகள் கிருஷ்ணா நகர் பகுதிக்குச் சென்று பொது ஒதுக்கீட்டு இடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். அந்த இடத்தில் இருந்த இரும்புத் தகடுகள் அகற்றப்பட்டன. தொடர்ந்து அங்கிருந்த முட்புதர்கள் அகற்றப்பட்டன. பின்னர் அந்த இடத்தில், “இந்த இடம் மாநகராட்சிக்கு சொந்தமான பொது ஒதுக்கீட்டு இடம்” என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. 40 வருடங்களுக்கு பிறகு ஆக்கிரமிப்பில் இருந்து இந்த இடம் மீட்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த இடத்தின் தற்போதைய மதிப்பு மொத்தம் ரூ.3 கோடி ஆகும்.