தமிழ்நாடு முழுவதும் உள்ள micro பைனான்ஸ் எனப்படும் நுண் நிதி நிறுவனங்கள், வங்கி அல்லாத நிதி நிறுவனங்கள் Non Banking Financial Company (NBFC) குறு நிதி நிறுவனங்கள் இந்திய கம்பெனிகள் சட்டம் 2013 கீழ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் 81 ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா அனுமதி வழங்கி உள்ள போதிலும் 2017 நவம்பர் 9க்கு பிறகு இந்திய ரிசர்வ் வங்கி மேற்படி நிதி நிறுவனங்களின் செயல்பாடுகள் சேவைகள் வேலைகள் எவ்வாறு இருக்க வேண்டும் என (அவுட் சோட்சிங்) கோடிட்டு காட்டியுள்ளது. அதனுடன் கடன் கொடுத்தல்/ வசூலித்தல் போன்ற முக்கிய மேலாண்மை செயல்பாடுகளை வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ள போதிலும், அவற்றை எல்லாம் நூல் அறுந்த பட்டங்களாக தனியார் நிதி நிறுவனங்கள் காற்றில் பறக்க விட்டு வருகின்றன.
ஒருபுறம் இந்நிதி நிறுவனங்கள் இதற்கு முன்பு இந்த நிறுவனங்கள் போன்று அரசு பொதுத்துறை வங்கிகளோ அல்லது தனியார் வங்கிகளோ பெண்களின் முன்னேற்றத்திற்காக எளிதில் குறைந்த வட்டிக்கு கடன்கள் சிறுகுறு தொழில்கள் துவங்க வழங்காததால் பெண்கள் மாற்று வழியின்றி தனி நபர்கள் வழங்குகின்ற கேட்டவுடன், எளிதில் கிடைக்கக்கூடிய தாராள பிரபுக்களாக கண்ணுக்குத் தெரியும் கந்து வட்டிக்காரர்கள் பலரும் 10 பைசா, 20 பைசா அவசரம் என்றால் 30 பைசா வட்டிக்கு கூட உடனடி கடன் தரும் குபேரர்களாக இதனையே நிரந்தர தொழிலாக 24ஙீ7 செயல்படும் வகையில் உள்ளதாலும், இவர்களில் பலர் சமுதாயத்தின் போர்வையில் சிலர் எளியவர்களாகவும், பக்திமானாகவும் வாரி வழங்கும் வள்ளலாகவும், சமுதாய ஜாதி தலைவர்களாகவும் மத தலைவர்களாகவும் இருந்து கொண்டு உடல் உழைப்பின்றி வயிறு வளர்க்கும் கூட்டங்களாக வாழ்ந்து வருகிறபடியால், இவர்களிடத்தில் வேறு வழியின்றி சிக்கி இன்று தென்காசி நெல்லை, போன்ற மாவட்டங்களில் குறிப்பாக பெண்களுக்கு என பீடி சுற்றுதல் கிராமப்புற ஊரக வேலை வாய்ப்பு திட்டம் மற்றும் நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம், கைத்தறி கட்டுமான தொழில் கையாள், மீன் சுத்தம் செய்யும் பணி, வீட்டு வேலை என அடிப்படை பணிப்பாதுகாப்பு அற்ற வேலைகளை செய்து குடும்ப பொருளாதார நெருக்கடிக்கு ஏற்ப பெண்களும் குடும்ப சுமைக்கு வேண்டி தாராளமயமாக்கப்பட்ட கடன் நிறுவனங்களால் வீடு தேடி வந்து ஒருவருக்கு எட்டு பத்து குழுக்கள் மூலம் கடன் வழங்கப்படுகிறது.
இதற்கு முன்னால் கந்து வட்டி, ராக்கெட் வட்டி, மீட்டர் வட்டி, குதிரை வட்டி, வார வட்டி என கழுதைக்குப் பெயர் முத்துமாலை என்பது போல பலரகமான பெயர்களில் பெண்களின் உயிரைக் குடிக்கும் கந்து வட்டி கடன்காரர்களின் அரக்க பிடியில் இருந்து விடுபட வேண்டி தற்போது நவீனமாக உலகத்தில் புற்று ஈசல்கள் போல் வளர்ந்து நிற்கும் நுண் நிதி நிறுவனங்களை கண்மூடித்தனமாக ஆதரித்து கடன் வாங்கி “ஆட்டை தூக்கி குட்டியில் போட்டு குட்டியை தூக்கி ஆட்டில் போடுவார்கள் என்பார்கள். “அதுபோல அவர்களிடமிருந்து தப்பிக்க இவர்களை நோக்கி ஓடிய பெண்கள் முடிவில் எல்லா குழுக்களிலும் கடன் பெற்று இறுதியில் எதனையும் கட்ட முடியாமல் திணறிப் போயும் இதற்கிடையில் உடல் நல பிரச்சனையோ அல்லது வேலை கிடைக்காத சூழலிலோ, வேலை இழப்பு சமயத்திலோ கூட கடன் அடைக்க முடியாத சிலர் மேற்படி நிதி நிறுவன ஊழியர்களின் மரியாதை அற்ற அருவருக்கத்தக்க வார்த்தைகளுக்கும் பணம் வசூலிக்க புதிய புதிய யுத்திகளை கடன் வாங்கும் பெண்களின் குடும்ப சூழல் புரிந்து பணம் வசூலிக்க தெருவில் உள்ள பலருக்கும் தெரிய அவரவர் வாசலில் அமர்ந்து கொள்வது வீட்டில் அத்துமீறி நுழைவது, அவர்களின் குழந்தைகள் மற்றும் கணவர் முன்பு வைத்தே திட்டுவது எதிர்த்து கேட்கும் பெண்களிடத்தில் மீறி வேறு தவறான தொழில் செய்து கூடபணம் பெற்று வந்து கடனை திரும்ப செலுத்து என கடின வார்த்தைகளால் வற்புறுத்துவது, அதற்கு மாற்றாக இவர்களே புரோக்கர்களாக மாறி தனக்கு வேண்டிய பெரிய புள்ளிகளுக்கு கடன் கட்ட முடியாத குடும்ப பெண்களை பயன்படுத்தி விபச்சார அழகிகளாக சப்ளை செய்யும் நிகழ்வுகளும் இந்த மாவட்டங்களில் அப்பட்டமாக நடைபெற்று வருவது வேதனைக்குரிய விஷயம்…
இதனை ஏற்காத பெண்களில் சிலர் கடன் சுமையால் தவறான பாதைக்கு செல்ல மனமின்றி கணவரிடமும் சொல்ல வழி இல்லாது அவமானத்தால் கூனிக்குறுகி தற்கொலை முயற்சிசெய்தும் இதனால் பெற்றோரை இழந்து மனைவியை இழந்து பரிதவித்து வரும் ஏராளமான வீடுகள் பெருகி வருவது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற அச்சத்தில் ஒரு சில பெண்களும் குமுறுவதை கேட்க முடிகிறது.
இதில் பல பெண்கள் மனநோயாளிகளாக மாறி வருவதும் நிர்பந்த மூலம் மாற்றப்படுபவர்களும் சொல்லிக் கொள்ளாமல் ஊரை காலி செய்து விட்டு ஓடும் நிலைக்கு தள்ளப்பட்ட குடும்பங்களும் உண்டு.. மேலும் இதில் வேதனையான விஷயம் குழு கடன்களை கட்டவும் மேலும் கடன்களை பெற்று வர கணவரே தனது மனைவியை தவறான வழிக்குச் சென்று கூட கடன் பெற்று வர வற்புறுத்தும் கலாச்சார சீரழிவுக்கு கடன் சுமைகள் பெண்களை வாட்டி வதைக்கிறது.
இதனால் சில குடும்பங்களில் விவாகரத்து வரை சென்று விடுவதை பார்க்க முடிகிறது. இது போன்ற சமூகம் எதிர்காலத்தில் மோசமான நிலைக்கு மார கந்து வட்டிக்காரர்களை ஒருபுறம் ஒடுக்குவதிலும், இதுபோன்ற கட்டவிழ்த்து விடப்பட்ட நுண்நிதி நிறுவனங்களின் மூலம் தங்குதடையற்ற கடன்கள் வழங்கப்பட்டு அதனை வசூலிக்க ஊழியர்களைக் கொண்டு நிறுவன ஊழியர்களைக் கொண்டு அமலாக்கப்படும் அத்துமீறல்களை அடக்கவும் ஒரு சில காவல் நிலையங்கள் இது பற்றிய புகார்களுக்கு செவி சாய்க்காமல் அலட்சியமாகவும் கிராமப்புற நகர்ப்புற பெண்களின் கடனுக்காக உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் துன்புறுத்தப்படுபவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்க தயாராக இல்லை என்றும் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களின் பின்னணியை பார்த்தால் சாதி ஆதிக்க சாதி பண பலம், அதிகாரபலம், ஆள்பலம் ஆட்சியாளர்களின் உதவி. இதில் அரசு ஊழியர்கள் மற்றும் காவல்துறையில் சிலரும் கூட இத்தொழிலில் ஈடுபட்டு வருவது மனச்சங்கடத்தோடு பார்க்க வேண்டிய அவசியமாகிறது.
கந்துவட்டிக்காரர்களும் நுண் நிதி நிறுவன ஊழியர்களும் அவரவர் கணவர்களிடமிருந்து பூர்த்தி செய்யப்படாத காசோலைகளை பெறுவது, ஆதார் அட்டைகளை பறித்து வைத்துக் கொள்வது, குழந்தைகளை கடத்தி விடுவோம் என மிரட்டுவது, அதிக சத்தத்தோடு வசை பாடுவது, என்ற மன உளைச்சலுக்கு உள்ளாகும் பெண்கள் இறுதியாக காவல் நிலையங்களின் கதவுகளையே தட்ட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு உள்ளாகிறார்கள்.
பாதிக்கப்பட்டவர்களின் புகாரை வாங்கி நடவடிக்கை எடுக்கவும் கண்ணியத்துடனும் நேர்மையுடனும் காவல்துறை நடந்து கொள்ள வேண்டும் என 2003இல் சட்டம் கொண்டுவரப்பட்டாலும் ஏட்டுச்சுரைக்காய் கறிக்கு உதவாது என்பது போல் மட்டுமே உள்ளதாக தெரிகிறது. ஆகவே இது போன்ற பிரச்சனைகளில் சிக்கித் தவிக்கும் பெண் சமூகத்தை பாதுகாக்க முக்கிய பங்காற்ற காவல்துறையால் மட்டுமே ஓர் அளவுக்கு முடியும் என்பதாலும் ஆராய்ந்து உளப்பூர்வமாக அந்தந்த மாவட்ட Real Hero க்களாக உள்ள காவல்துறை கண்காணிப்பாளர்கள் உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இப் பிரச்சினைக்கு தீர்வு காண முடியும் என்பது அறிவு ஜீவிகளின் பெருங்கருத்தாக பிரதிபலிக்கிறது.
இதற்காக சில நாளிதழும் ஊடகங்களும் பாதிக்கப்பட்டவர்களோடு நிற்பதில் பாராமுகம் காட்டி இப் பிரச்சனைகளை வெளி உலகத்திற்கு கொண்டு வருவதிலும் சுயநல சிக்கல்கள் உள்ளதாக தெரிகிறது… ஆனால் கடன் பிரச்சனையால் தற்கொலை செய்தால் மட்டுமே பரபரப்பு செய்தியாக்க ஊடகங்கள் அனைத்தும் கூட்டாக வந்து அரைகுறை செய்திகளை பரபரப்பு செய்திகளாக வெளியிடுகிறது. உண்மை செய்திகளை வெளியிட மறுக்கும் இந்திய அரசியலமைப்பில் நான்காவது தூணாக உள்ள ஊடகங்களே கைகட்டி வேடிக்கை பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது மேலும் வேதனைக்குரிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இவ்வாறு கடன்களில் சிக்கி தவிக்கும் பெண்களின் உண்மை நிலை பற்றி அறிய தென்காசி, நெல்லை மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சென்று பெண்களுக்காக போராடுகின்ற அமைப்பாக இருக்கக் கூடிய அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் நடத்திய ஆய்வில் இன்னும் பல அதிர்ச்சிகரமான சம்பவங்களும் வெளிவந்துள்ளது. இவற்றை கையில் எடுத்த பெண்கள் அமைப்புகள் அதற்கான போராட்டங்களையும், ஒன்றிணைத்த குரல்களாக ஒலிக்கவும் அதன் மூலம் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டு வருவது சற்றே ஆறுதலான விஷயமாக பார்க்க வேண்டியுள்ளது.
கந்து வட்டிக்காரர்கள் மீதும், அத்துமீறும் நுண் நிதி நிறுவன ஊழியர்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வழிகாட்டுமா.. மாவட்ட காவல்துறை நிர்வாகம்…?
– R.பூவையா, தென்காசி