சென்னையை அடுத்த தாம்பரம் மாநகராட்சியில் மழை நீர் வடிகால் பணிகளால் சாலைகள் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பம்மல் மற்றும் அனகாபுத்தூரில் கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணிகளால் சாலைகள் மோசமாக சேதமடைந்துள்ளது. சாலைகளை மேம்படுத்த வேண்டும் என பல மாதங்களாக மக்கள் போராடி வருகிறார்கள். இந்நிலையில் சாலைகளை சீரமைக்க 75 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
சென்னையை அடுத்துள்ள தாம்பரம் மாநகராட்சியில் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளில், மழை நீர் வடிகால் பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதனால் சாலைகள் பல இடங்களில் தோண்டப்பட்டுள்ளது. குறிப்பாக பம்மல் மற்றும் அனகாபுத்தூர் பகுதிகளில் சாலைகள் எதுவும் பயணிக்கவே முடியாத அளவிற்கு மாறிக்கிடக்கிறது. இந்த பகுதிகளில் உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதற்காக நீண்ட நாட்களாக மக்கள் போராடியும் வந்தார்கள். ஒரு வழியாக இவர்களின் குரல், மாநகராட்சிக்கு கேட்டு விட்டது. இந்த பகுதிகளில் சாலையை சீரமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக தாம்பரம் மாநகராட்சி கமிஷனர் எஸ்.பாலச்சந்தர் கூறுகையில், “தாம்பரம் மாநகராட்சிக்கு உள்பட்ட பம்மல் பகுதியில் உள்ள பசும்பொன் நகர், நல்லதம்பி பிரதான சாலை ஆகியைவற்றையும், அனகாபுத்தூரில் உள்ள ஜேஎன் சாலை, சர்வீஸ் சாலை உள்ளிட்டவற்றையும் சீரமைக்க முடிவு செய்துள்ளோம். இந்த இடங்களில் புதிய சாலை அமைக்கும் பணி ஓரிரு வாரங்களில் நடைபெறும்“ என்றார்.
இதனிடையே பம்மல், அனாபுத்தூர் பகுதிகளில் மழை நீர் வடிகால் பணிகள் காரணமாக புதிதாக போடப்பட்ட சாலைகளையும் அதிகாரிகள் தோண்டியதால் சேதமடைந்துள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் தினசரி போக்குவரத்துக்கு சிரமப்படுகிறார்கள் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதால் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை இருக்கிறது. பள்ளமான சாலைகள் காரணமாக வாகனங்களும் பழுதாகும் நிலை ஏற்படுகிறது. ஒரு பாதுகாப்பான பயணம் என்பதை இந்த பகுதி மக்களுக்கு கேள்விக் குறியாக உள்ளது. குழந்தைகளை காலையில் பள்ளிக்கு விடுவதற்கு கூட முடியாமல் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறார்கள். பள்ளிக்கு எதிரே பிரதான சாலையிலும் குழிகள் தோண்டப்பட்டுள்ளதால், பீக் ஹவர்ஸில் மக்கள் தவித்து போகிறார்கள்.
இந்நிலையில் பல நாட்களாக மக்கள் வைத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டாலும், சாலைகள் முறையாக சீரமைக்கப்படுவதை மாநகராட்சி உறுதி செய்ய வேண்டும் என்று மக்கள் வலியுறுத்தியுள்ளனர். பெயருக்கு சாலை போட்டு விட்டு செல்லக்கூடாது என்றும், ஏனெனில் சாலைகள் அப்படி அமைத்தால், அடுத்த ஒரு மாதம் கூட தாக்கு பிடிக்காமல் மீண்டும் பள்ளத்தில் சிக்கிக் கொள்கிறது.. அதேபோல் புதிய சாலை அமைத்த பின்னர், எந்த காரணம் கொண்டும், குடிநீர் பைப், மழை நீர் வடிகால் பைப், மின்சார வாரிய லைன் என எதற்காகவும் குழி தோண்டக்கூடாது என்றும் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்த கருத்தை ஏற்றுக் கொண்ட மாநகராட்சி அதிகாரிகள், அனைத்து பைப்லைன் பணிகள் முடிந்ததும் சாலை அமைக்க வேண்டும் தொழிலாளர்களிடம் வலியுறுத்தியுள்ளார்கள். மேலும் வேலையின் தரம் குறைவாக இருப்பதாக மாநகராட்சிக்கு அதிக புகார்கள் வந்துள்ளதாக கூறிய மாநகராட்சி அதிகாரிகள், சாலைகளை சரிபார்த்து முறையாக சீரமைப்போம், அனைத்து கட்டுமானப் பணிகள் முடிவடைந்தவுடன், சாலைகளை சீரமைக்க நெடுஞ்சாலைத் துறையிடம் வலியுறுத்துவோம் என்றார்கள்.
அனாபுத்தூர் மற்றும் பம்மல் பகுதிகளில் உள்ள சாலைகளை சரி செய்யும் பணிகள் மற்றும் கழிவுநீரை சுத்தம் செய்வதற்கான வடிகால் அமைப்புகள் ஏற்படுத்தும் பணிகள் ஆகியவை சரியாக செய்து முடித்தால், அப்பகுதியின் ஒட்டுமொத்த உள்கட்டமைப்பை மேம்படும் என்றும் அதிகாரிகள் கூறினார்கள்.
அனகாபுத்தூரில் 389 தெருக்களில் 50 கி. மீட்டர் தூரத்துக்கும், பம்மலில் 877 தெருக்களில் 100 கிமீ தூரத்துக்கும் 2021-ம் ஆண்டு முதல், குழாய் பதிக்கும் பணியை தாம்பரம் மாநகராட்சி செய்து வருகிறது. இதுதவிர பம்மலில் 2, 212 இடங்களிலும், அனகாபுத்தூரில் 768 இடங்களிலும் மேன்ஹோல்களை சுத்தம் செய்ய இயந்திரங்கள் பொருத்தி உள்ளார்கள். கடந்த ஓராண்டாக தாமதமாகி வந்த பாதாள சாக்கடை அமைக்கும் பணி தற்போது முடியும் தருவாயில் இருக்கிறது. எனவே பணிகள் முடிந்தால் சாலைகள் பழையபடி சீரமைக்கப்படும் என்பதால் தாம்பரம் பகுதி மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.