தற்போது இருக்கும் நிலைமையில் கிராமப்புறங்களில் அனைவருக்கும் வெகுவான அளவில் தெரிந்த உயர் அதிகாரி வருவாய் வட்டாட்சியர் (ரெகுலர்) அவர்கள் மட்டும்தான் அதற்கான காரணம் அரசு முத்திரை பதித்த வாகனத்தில் சீறிப்பாய்ந்து வந்த இறங்கும் தோரணையினால் தான். ஆனால் வருவாய் வட்டாட்சியருக்கு நிகராக அவரவர் துறைகளில் அதிகாரம் படைத்தவர்கள் அதே அலுவலகத்தில் வேலை செய்கிறார்கள் என்பது பல பேருக்கு தெரியாத ஒரு உண்மை. எடுத்துக்காட்டாக கூற வேண்டும் என்றால் தேர்தல் நடத்தும் அதிகாரி நலத்துறை அதிகாரி, வட்ட வழங்கல் அதிகாரி, ஆதிதிராவிடர் நலத்துறை வட்டாட்சியர் என்பது போன்ற அதிகாரிகளும் பெரும்பாலான இடங்களில் ஒரே கட்டிடத்தில் வெவ்வேறு பகுதிகளை அலுவலகமாக கொண்டு தான் வேலை செய்கிறார்கள்.
ஒரு தீர்வு கோரப்படும் இடத்திற்கு வருவாய் வட்டாட்சியர் அலுவலக வாகனத்தில் சென்று இறங்கினால், அவருக்கு உண்டான மரியாதை வேறு. அந்த அதிகாரிக்கு நிகரான அல்லது அதே அதிகாரி வேறுதுறைக்கான பதவிக்கு மாற்றப்பட்டு, அலுவலக வாகனம் இல்லாமலும் அங்கு சென்றால் அவருக்கு கிடைக்கும் மரியாதை வேறு. எதனால் இந்த பாகுபாடு இருவரும் ஒரே நிலையிலான அதிகாரிகள் தான்.
பெரும்பாலான இடங்களில் வாகன பற்றாக்குறை காரணங்களால் வருவாய் வட்டாட்சியர் அவர்களுக்கு மட்டுமே வாகனம் வழங்கப்படுகிறது. வட்டாட்சியருக்கு நிகரான மற்ற அதிகாரிகளுக்கு வாகனங்கள் வழங்கப்படுவதில்லை. இதனால் ஒரு சோதனைக்கு செல்லும் இடத்தில் அவர்களுக்கு உரிய மரியாதை கிடைத்தது இல்லை என்பதோடு அவர்களின் பேச்சுக்கு மரியாதை கிடைப்பதும் பெரும்பாடாக உள்ளது.
சமீபத்தில் கூட வேளாண் துறைக்கு ஒதுக்கப்பட்ட தற்காலிக திட்டத்தை செயல்படுத்திய இயக்குனர்களுக்கு தனியாக வாகனங்கள் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் திட்டம் முடிவடைந்த நிலையில் அந்த வாகனங்களை உபயோகப்படுத்தாமல் நிறுத்தி வைத்துள்ளனர். மேலும் அந்த வாகனங்களுக்காக தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஓட்டுநர்களும் ஒப்பந்தம் முடிக்கப்பட்டு அனுப்பப்பட்டனர்.
இந்த நிலையில் இயக்குனர்களுக்கு அடுத்தபடியாக இயங்கி வரும் மாவட்ட அளவிலான துணை இயக்குனர்கள், வேளாண் பண்ணைகளை ஆய்வு செய்ய செல்லும்போது, சொந்த வாகனம் அல்லது பொது போக்குவரத்தை மட்டுமே உபயோகப்படுத்த வேண்டி இருக்கிறது. மேலும் இதற்காக எந்தவித சலுகைகளும் அரசால் அவர்களுக்கு தரப்படுவதில்லை. இப்படி கையிருப்பில் இருக்கும் வாகனங்களை இது போன்ற அதிகாரிகளுக்கு உபயோகப்படுத்த கொடுத்தால் மீதம் இருக்கும் கொஞ்ச நஞ்ச மரியாதையாவது காப்பாற்றப்படும் என்று புலம்புகிறார்கள் அதிகாரிகள்.