சென்னை மக்களிடையே நீரின் தேவை மற்றும் அதனை சிக்கனமாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இந்தியன் பிளம்பிங் அசோசியேஷனின் சென்னை பிரிவு “நீராத்தான்” என்ற மாரத்தான் ஓட்டப் போட்டியை நடத்தியது. இந்த நிகழ்வில் 3,000-க்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர்.
எஸ்.ஆர்.எம் பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் சிவகுமார் மற்றும் அவரது மகன் இணை இயக்குநர் நீரஞ்சன் ஆகியோர் போட்டியை துவக்கி வைத்தனர். இந்த நிகழ்வு 3 கிலோமீட்டர், 5 கிலோமீட்டர், 10 கிலோமீட்டர் என மூன்று பிரிவுகளாக நடைபெற்றது.
ஒவ்வொரு போட்டியின் முன்பாகவும், சுமார் 1,000 பேர் நீர் பாதுகாப்பு குறித்த 15 அம்சங்கள் கொண்ட உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். பங்கேற்பாளர்கள் அனைவருக்கும் டி-சர்ட், பதக்கம் மற்றும் உணவு வழங்கப்பட்டது. மேலும், கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
மொத்தம் 36 பிரிவுகளில் பரிசுகள் வழங்கப்பட்டன. ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் என பல பிரிவுகளில் தலா மூன்று பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பம்சமாக, சுமார் 20 மாற்றுத்திறனாளிகள் இந்த ஓட்டத்தில் பங்கேற்றனர், அவர்களில் மூவருக்கு பரிசு வழங்கப்பட்டது.
மொத்தம் ரூ.1,60,000 பரிசுத் தொகை வெற்றி பெற்றவர்களுக்கு வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் பதக்கம் மற்றும் மின்னணு சான்றிதழ் வழங்கப்பட்டது.
ஓட்டம் சென்னை ஆல்காட் மெமோரியல் பள்ளியில் தொடங்கி, மலர் மருத்துவமனை, நேப்பியர் பாலம் வழியாக கூவம் நதி வரை நடைபெற்றது.
சென்னையைச் சேர்ந்த ரன்னர்கள் மட்டுமல்லாமல், வெளிமாநிலங்களான ஹைதராபாத் மற்றும் வட இந்தியாவில் இருந்தும் தொழில்முறை மாரத்தான் ஓட்ட வீரர்கள் கலந்து கொண்டனர்.
இந்தியன் பிளம்பிங் அசோசியேஷன் சென்னை பிரிவு தலைவர் டாக்டர் எஸ்.வீரப்பன், துணைத்தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் சங்கர், இணைச் செயலாளர் மனோகர், பொருளாளர் ஜி.ஜெயப்பிரகாஷ் நாராயணன் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து நிகழ்வை சிறப்பாக நடத்தினர்.
ஸ்ருஷ்டி கம்யூனிகேஷன்ஸின் திரு. ரமேஷ் அனைத்து ஏற்பாடுகளையும் சிறப்பாக செய்திருந்தார். தமிழ்நாடு காவல்துறையினர் அதிகாலை முதலே சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருந்தனர். தன்னார்வலர்கள், சைக்கிள் ஓட்டிகள், ஓட்ட வீரர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
இது இரண்டாவது ஆண்டு நிகழ்வாகும். அடுத்த ஆண்டும் இந்நிகழ்வை தொடர்ந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.