தென்காசி மற்றும் நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் உள்ள பேரூராட்சி மற்றும் நகராட்சிகளில் பணியாற்றி வந்த பலர் மாற்றுத்திறனாளி எனக்கூறி போலி சான்றிதழ் வழங்கி பணிக்கு சேர்ந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது தொடர்பாக ஒருவர் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு ஒன்றையும் தொடர்ந்தார்.
இந்த வழக்கின் அடிப்படையில், உயர் நீதிமன்ற நீதிபதி இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிட்ட நிலையில், குற்றம் சாட்டப்பட்ட நபர்களுக்கு மருத்துவ பரிசோதனையானது நடைபெற்றது.
இந்த பரிசோதனையில் அவர்கள் மாற்றுத்திறனாளிகள் இல்லை என்பது தெரிய வரவே, இந்தப் பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்கவும், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்து விளக்கம் அளிக்கவும் உயர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்த நிலையில், தற்போது தென்காசி மாவட்டத்தில் உள்ள புதூர், வடகரை, அச்சன்புதூர், கீழப்பாவூர், சிவகிரி, ராயகிரி, இலஞ்சி உள்ளிட்ட பேரூராட்சிகள் உள்பட நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட நெல்லை மண்டலத்தில் உள்ள பேரூராட்சிகளில் 78 பேர் மாற்றுத்திறனாளி எனக்கூறி போலி சான்றிதழ் கொடுத்து பணியாற்றி வந்த நிலையில், தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த பணி நீக்கமானது அந்தந்த பேரூராட்சி செயல் அலுவலர்கள் மூலம் அந்த பணியாளர்களுக்கு கொடுக்கப்பட்டதாக கூறப்படும் நிலையில், பல வருடங்களாக போலி சான்றிதழ் கொடுத்து அரசு பணியில் பணியாற்றி ஊதியம் பெற்று வந்த பலர் தற்போது டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ள சம்பவம் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.