சேதுபாவாசத்திரம் மீனவர் காலனி மக்கள் மழைக்காலங்களில் அவதிப்படுவதாகவும், மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டத்துக்குட்பட்ட, கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும், சேதுபாவாசத்திரம் ஊராட்சி மீனவர்கள் அதிகம் வசித்து வரும் பகுதியாகும். இங்குள்ள மீனவர் காலனி கடலோரத்தை ஒட்டியுள்ளது.
இப்பகுதியில் மூன்று தெருக்கள் உள்ளன. பல்வேறு சமுதாய மக்கள் வசித்து வருகின்றனர். மழைக்காலங்களில் மூன்று தெருக்களிலும் சாலைகள், வீடுகளுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள், குழந்தைகள் நடமாட முடியாத நிலை உள்ளது. சாலை அமைத்து பத்து வருடங்களுக்கும் மேலான நிலையில், கப்பிகள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளதால், மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று இருசக்கர வாகனங்களில் செல்வோர் தடுமாறி விழுகின்றனர்.
எனவே புதிய தார்ச்சாலை அமைத்து தர வேண்டும். தண்ணீர் தேங்காமல் இருக்க, மழைநீர் வடிகால் வாய்க்கால் வசதி ஏற்படுத்த வேண்டும். கொசுக்கடி அதிகமாக இருப்பதால் புகை மருந்து அடிக்க வேண்டும். மின் விளக்கு வசதி ஏற்படுத்தி தர வேண்டும். குடிநீர் குழாய் அருகில் சாக்கடை தேங்கி நிற்பதால், குடிநீர் துர்நாற்றம் வீசுகிறது. எனவே பாதுகாப்பான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும், 15 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சுனாமி குடியிருப்புகள் சேதமடைந்து வீடுகளுக்குள் தண்ணீர் கசிவதாகவும், மேற்கூரை சிமெண்ட் பூச்சு இடிந்து கீழே விழுவதால் அச்சத்துடன் வசிக்கின்றனர். சுவர்களில் தண்ணீர் கசிவதால், மின் இணைப்புகளுக்குள் தண்ணீர் புகுந்து அடிக்கடி மின்சாரம் கசிந்து ஆபத்து ஏற்படுவதாக தெரிவிக்கின்றனர்.
அரசு அலுவலர்கள் ஒவ்வொரு முறையும் மழைக்காலங்களில் வந்து பார்வையிட்டு, சாலையை அளந்து செல்வதோடு சரி, எந்த பணிகளும் நடைபெறுவதே இல்லை என்று கூறும் பொது மக்கள், ஊராட்சி மன்றத் தலைவர் வாக்கு கேட்டு வந்ததுதான். அதன்பிறகு எதற்குமே வருவதில்லை, எதையும் கண்டுகொள்வதில்லை என்றும் தெரிவிக்கின்றனர். குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சாலை வசதி அமைத்து தர வேண்டும். சுனாமி காலனி வீடுகளை இடித்துவிட்டு புதிதாக கட்டித் தர வேண்டும், அல்லது அரசு செலவில் பழுது பார்த்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.