பத்திரப்பதிவு நாளிலேயே, தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதில், தமிழக பதிவுத்துறை மீண்டும் ஒரு அதிரடியை கையில் எடுத்துள்ளது.. இது பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும், நம்பிக்கையையும் தந்து கொண்டிருக்கிறது.
பொதுமக்களின் சிரமத்தை குறைக்கும் வகையில், தமிழக அரசு சார்பில் வீட்டு மனைபட்டாவுக்கு, “தமிழ் நிலம்” (https://tamilnilam.tn.gov.in), என்ற புதிய செயலி அறிமுகப்படுத்தப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகிறது.
அங்கீகரிக்கப்பட்ட வீட்டு மனைகளுக்கான உட்பிரிவுகளை மொத்தமாக உருவாக்குதல், இந்த மனைகளுக்காக பட்டா மாற்றுதல் உள்ளிட்ட பணிகளுக்காவும், மாநகராட்சி மற்றும் நகராட்சியின் வருவாய் தொடர் பணிகளுக்காகவும் இந்த செயலி உருவாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் பத்திரம் பதிவு செய்யப்பட்ட சில நிமிடங்களில் தானியங்கி பட்டா மாறுதல் முறையில், வாங்கியவரின் பெயரில் பட்டா மாற்றப்படும்.
இதற்காக பொதுமக்கள் தனியா விண்ணப்பம் கொடுக்கவோ, அல்லது வட்டாச்சியர் அலுவலகத்திற்கு நேரில் வரவோ தேவையில்லை.
மேலும் இந்த செயல்முறை மூலம் தனியாக பட்டா வேண்டி விண்ணப்பம் செய்ய தேவையில்லை.
பட்டா வேண்டி மனைப்பிரிவு சார்ந்த பெறப்படும் மனுக்கள் பெருமளவு குறைவதுடன், அரசு நிலங்கள் ஆக்கிரமிப்பு செய்வதும் தடுக்கப்படும். அத்துடன் மோசடி செய்து நிலங்களை விற்பனை செய்வதும் வெகுவாக தவிர்க்கப்படும்.
தானியங்கி முறையில் பட்டா பெயர் மாற்றத்தில், உட்பிரிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லாத நில கிரையங்களில் பதிவுத்துறையில் பதிவு செய்யப்பட்டதுமே, பட்டா மாற்றம் தானியங்கியாக மேற்கொள்ளப்படுகிறது..
அந்தவகையில், தானியங்கி முறையில், பத்திரப்பதிவு விபரங்கள் அடிப்படையில், பட்டா பெயர் மாற்றும் திட்டம் அனைத்து தாலுகாக்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது..
தானியங்கி முறை: பத்திரப்பதிவின்போது, சார் – பதிவாளர் நிலையில், இதற்கான சரி பார்ப்பு முடிந்ததுமே, தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டுவிடும்..
பதிவுத்துறையில், “ஸ்டார் 2.0 சாப்ட்வேர்” வாயிலாக, சார் – பதிவாளர்கள் இதற்கான பணிகளை செய்யலாம்..
எனினும், சரிபார்ப்பு முடிந்தும், பட்டா பெயர் மாற்றம் நடக்கவில்லை என்று ஆங்காங்கே புகார்கள் எழுந்துவருகிறதாம்..
இதனை களையவே பதிவுத்துறை அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
இதற்காகவே, தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்ற பணிகளை, விரைவாக செய்ய வேண்டும் என்று நில அளவை மற்றும் நில வரி திட்டத் துறை இயக்குனர் சமீபத்தில் உத்தரவு ஒன்றையும் பிறப்பித்திருந்தார்..
இதன் அடிப்படையில், தானியங்கி பட்டா மாறுதல் பணிகளை கண்காணிக்க, சிறப்பு வசதி தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ளதாம்.
பதிவுத்துறை: அதாவது, இதுவரை, தமிழ் நிலம் இணையதளத்தில், வருவாய்த் துறை அதிகாரிகள் மட்டுமே, இந்த விபரங்களை பெறக்கூடிய சூழல் இருந்த நிலையில், இப்போது பதிவுத்துறை அதிகாரிகளும், தினசரி எத்தனை பட்டாக்களுக்கு, தானியங்கி முறையில் மாறுதல் செய்யப்பட்டது என்பதை பார்க்க முடியுமாம்.
ஒவ்வொரு சார் – பதிவாளர் அலுவலகத்திலும், கோப்புகள் நிலை என்ன என்பதை, பதிவுத்துறை அதிகாரிகளே நேரடியாக கண்காணிக்க முடியும்..
இதனால், பதிவுத்துறை நிலையில், பட்டா மாறுதலுக்கு எந்த தாமதமும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
பத்திரப்பதிவு நாளிலேயே, தானியங்கி முறையில், பட்டா பெயர் மாற்றம் செய்வதை, தினசரி கண்காணிக்க, பதிவுத்துறை எடுத்துள்ள இந்த நடவடிக்கையானது பொதுமக்களின் கவனத்தை பெற்று வருகிறது.
பட்டா, சிட்டா பார்வையிட, சரிபார்க்க, பதிவேடு, புறம்போக்கு நிலவிவரம், புலப்படம்/நகர நிலஅளவை வரைபடங்கள் ஆகியவற்றை இலவசமாக பார்வையிட, பதிவிறக்கம் செய்ய மற்றும் பட்டா மாறுதல் விண்ணப்ப நிலை விவரங்களை அறியும் இணையவழி சேவை www.eservices.tn.gov.in இணைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.