

சென்னை, திருவல்லிக்கேணி பகுதியில் ரிஷ்வானாபேகம், பெ/59, க/பெ.முகமது ஷாகீர் என்பவர் வசித்து வருகிறார். கடந்த 03.02.2024 அன்று அடையாளம் தெரியாத நபர் ரிஷ்வான பேகத்தை கைப்பேசியில் தொடர்பு கொண்டு, சுங்கத்துறையில் இருந்து பேசுவதாகவும், உங்களது பெயரில் போதைப்பொருள் பார்சல் வந்துள்ளது, இதன் விபரத்தை காவல் துறைக்கு தெரிவித்து விட்டோம், காவல்துறையிலிருந்து தொடர்பு கொள்வார்கள் என்று கூறி இணைப்பை துண்டித்துள்ளார்.
வேறு ஒரு எண்ணில் வாட்ஸ் ஆப் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்ட நபர் ஒருவர் காவலர் சீருடையில் மேற்படி ரிஷ்வான பேகம் மற்றும் அவரது மகனிடம் டிஜிட்டல் கைது செய்வதாக கூறி மிரட்டியுள்ளார். மேல் நடவடிக்கை எடுக்காமல் இருக்க பணம் அனுப்பும் படி கூறியுள்ளார். இதனை நம்பிய ரிஷ்வான பேகம் பல தவணைகளாக ஆன்லைன் மூலம் ரூ.1.16 லட்சம் பணபரிவர்த்தனை செய்துள்ளார். சில நாட்களுக்கு பின்னர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ரிஷ்வான பேகம் இது குறித்து D-1 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
D-1 திருவல்லிக்கேணி காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் திருவல்லிக்கேணி காவல் மாவட்ட சைபர் கிரைம் போலீசாருடன் ஒருங்கிணைந்து தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட1.வெங்கடேஷ், வ/42, த/பெ.தியாகராஜ், ஸ்வேதா நகர், கும்பகோணம், தஞ்சாவூர் மாவட்டம் 2.முகமது யூனிஸ் வ/37, த/பெ.அப்துல் காதர், வெள்ளைகல் கூட் ரோடு, மேடவாக்கம், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 3 செல்போன்கள் மற்றும் 1 லேப்டாப் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் முகப்பேரை சேர்ந்த அவரது நண்பருடன் சேர்ந்து சென்னை, துரைப்பாக்கத்தில் Man Power Agency நடத்தி வந்ததாகவும், அதில் நஷ்டம் ஏற்பட்டதால் நண்பர் கம்போடியா சென்றுவிட்டதாகவும், அவர் வெளிநாட்டிலிருந்து டெலிகாலிங் மூலம் பொதுமக்களை தொடர்பு கொண்டு டிஜிட்டல் கைது செய்வதாக கூறி பணம் பறித்துள்ளதும், பறித்த பணத்தை வெளிநாட்டிலிருந்து மேற்படி வெங்கடேஷ் வங்கி கணக்கிற்கு அனுப்பியுள்ளதும், வெங்கடேஷ் அந்தப்பணத்தை வெவ்வேறு வங்கி கணக்குகளுக்கு மாற்றி பணப்பரிவர்த்தனை செய்து கொடுத்துள்ளதும் தெரியவந்தது. மேலும் வெங்கடேஷ், கம்போடியாவில் வசிக்கும் நண்பர் கேட்டு கொண்டதின் பேரில் மேற்படி முகமது யூனிஸ் உடன் சேர்ந்து டெலி காலிங் மொபைல் ஆப் தயார் செய்து அனுப்பியுள்ளதும் தெரியவந்தது.
மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளியை தனிப்படை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.
விசாரணைக்குப்பின்னர் கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
