தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், மகளிர் இல்லங்கள் உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம் உள்ளிட்ட 10 சேவைகளை இணைய வழியில் விரைவாகவும், எளிய நடைமுறையிலும் பெறும், ‘எளிமை ஆளுமை’ (Simple Gov) திட்டத்தை தொடங்கி வைத்துள்ளார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 29ம் தேதி நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ், தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எளிமை ஆளுமை தமிழ்நாடு அரசால் வழங்கப்படும் சுகாதார சான்றிதழ், மகளிர் இல்லங்கள் உரிமம், முதியோர் இல்லங்கள் உரிமம், பொது கட்டிட உரிமம், சொத்து மதிப்பு சான்றிதழ், வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல், புன்செய் நிலங்களை விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு பயன்படுத்த தடையின்மை சான்றிதழ், பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம், நன்னடத்தை சான்றிதழ், அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ் ஆகிய பத்து சேவைகளின் நடைமுறைகள் எளிமையாக்கப் பட்டுள்ளன.
தற்போது இந்த 10 சேவைகளில் நடைமுறையில் உள்ள விபரங்களை ஆராய்ந்து, அவற்றில் உள்ள முக்கிய விதிமுறைகளைச் சீர் செய்து, இந்தத் திட்டம் இணையவழியில் மக்கள் எளிதாக பயன்படுத்தும் வகையில் இந்த ஆப் உருவாக்கப்பட்டுள்ளது. அதனைக் குறிக்கும் வகையில்தான், ‘எளிமை ஆளுமை’ என இந்த ஆப்பிற்கு பேர் வைக்கப்பட்டுள்ளது.
முக்கிய 10 சேவைகள் Simple Gov திட்டத்தின் முதற்கட்டமாக, பின்வரும் 10 சேவைகள் எளிமையாக்கப்பட்டுள்ளது.
1.சுகாதார சான்றிதழ் (Sanitation Certificate):
முன்னதாக சுகாதாரச் சான்றிதழ் பெற மூன்று மாதங்கள் வரை மக்கள் காத்திருக்க வேண்டி இருந்தது. தற்போது அதனை எளிமையாக்கி ஒரே நாளில் மக்கள் பெற்றுக் கொள்ளும்படி இந்த ஆப் மூலம் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன.
- பொது கட்டிட உரிமம் (Public Buildings License):
3 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த பொது கட்டிட உரிமச் சான்றிதழ் தற்போது, கட்டிடத்தின் உறுதித்தன்மை சான்றிதழில் குறிப்பிடப்பட்ட காலம் வரை உரிமம் செல்லுபடியாகும்படி, மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த சான்றிதழ் பெற 3 முதல் 6 மாதங்கள் வரை ஆகும். தற்போது இதனையும் QR குறியீட்டுடன் இணையதளத்தில் ஒரே நாளில் பெற இயலும். - முதியோர் இல்லங்கள் உரிமம் (Registration of Old Age Homes):
முதியோர்களை பராமரிக்கும் வகையில், புதிய முதியோர் இல்லங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் புதிய முதியோர் இல்லங்களை உருவாக்க முன்வருவதை ஊக்குவிக்கும் வகையில், பதிவு செயல்முறை தற்போது முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. முன்னதாக இதன் உரிமம் பெற 6 முதல் 8 மாதங்களாக இருந்த அளவை தற்போது, ஒரே நாளில் பெற்றுக் கொள்ள முடியும். - பணிபுரியும் மகளிருக்கான தங்கும் விடுதிகள் உரிமம் மற்றும்
- மகளிர் இல்லங்கள் உரிமம் (Registration of Homes for Women)
பணிபுரியும் மகளிருக்கான விடுதிகள் உரிமத்திற்கான கால வரம்பு 3 ஆண்டுகளில் இருந்து 10 ஆண்டுகளாக நீட்டிக்கப்பட்டு QR குறியீட்டுடன் இணையதளத்தில் உடனடியாக வழங்கப்படுகிறது. முன்னதாக இந்த உரிமம் பெற 6 மாதங்கள் முதல் 1 வருடம் வரை என இருந்த நிலையை மாற்றி, தற்போது இதனையும் ஒரே நாளில் பெற்றுக் கொள்ளலாம். - சொத்துமதிப்பு சான்றிதழ் (Solvency Certificate):
பெரும்பாலும் நிலத்தின் மதிப்பை அடிப்படையாகக் கொண்டே சொத்துமதிப்பு சான்றிதழ் வழங்கப்படும். வங்கி இருப்புநிலை அறிக்கை, பட்டயக்கணக்கர் சான்றிதழ் (Auditor’s Certificate), வருமானவரி தாக்கல் போன்ற பல்வேறு மாற்று வழிகள் தற்போது உள்ள நிலையில் சொத்துமதிப்பு சான்றிதழ் நீக்கப்படுகிறது. - வெள்ளை வகை தொழிற்சாலைகள் பட்டியல் விரிவாக்கம் (List of White Category Industries under TNPCB)
மாசுபடுத்தாதவை அல்லது குறைந்த மாசுபடுத்தும் தொழிற்சாலைகளாக வெள்ளை வகையின் கீழ் வகைப்படுத்தப்பட்ட தொழிற்சாலைகள் அங்கீகரிக்கப்படுகின்றன. முன்பு இந்த வெள்ளை வகை பட்டியலில் 37 தொழிற்சாலைகள் மட்டுமே இருந்தன. இது தற்போது 609 ஆக விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலைகளுக்கு சுற்றுச்சூழல் அனுமதி மற்றும் வழக்கமான ஆய்வு சுமைகளிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது. இது நிலையான தொழில்துறை வளர்ச்சியை பெரிதும் ஊக்குவித்து, வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. - விவசாயம் அல்லாத செயல்பாட்டிற்கு புன்செய் நிலங்களை பயன்படுத்த தடையின்மை சான்றிதழ்
புன்செய் நிலத்தை விவசாயம் அல்லாத பிற தேவைகளுக்கு பயன்படுத்த, வேளாண்மைத் துறையிடம் தடையின்மை சான்றிதழ் (NOC) பெறுவது கட்டாயமாக இருந்தது. இது தற்போது இணையவழியில் (end-to-end digital process) மாற்றப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் சுய சான்றளிக்கப்பட்ட ஆவணங்களை இணையவழியில் தாங்களாகவே சமர்ப்பிக்கலாம். - நன்னடத்தை சான்றிதழ்
நன்னடத்தை மற்றும் பின்னணி சரிபார்ப்பு சான்றிதழ் நடைமுறைகள் எளிமையாக்கப்பட்டுள்ளன. முன்பைவிட விரைவாக இந்த சான்றிதழ்களைத் தற்போது இணையவழியில் விண்ணப்பித்து பெற்றுக் கொள்ள முடியும். - அரசாங்க ஊழியர்கள் கடவுச்சீட்டு பெறுவதற்கான தடையின்மை சான்றிதழ்
அரசு ஊழியர்கள் பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்கும் போது முன்பு பல்வேறு நடவடிக்கைகள் புழக்கத்தில் இருந்தன. தற்போது இதனை எளிமையாக்கி, முன்பு இருந்தவைகளில் ஏதேனும் ஒன்றை மட்டும் பூர்த்தி செய்தால் போதும் என்றும், சம்பந்தப்பட்ட துறையின் மேல் அதிகாரிகள் முன் தகவல் கடிதம் அளிக்கும் முறை மட்டும் பின்பற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவைகள் மட்டுமின்றி, நடப்பு ஆண்டில் மேலும் பல சேவைகள் எளிமையாக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 குழுக்கள்
Simple Gov திட்டத்தின் செயல்பாடுகளைத் துரிதப்பட்ட அரசு இரண்டு குழுக்களை அமைத்துள்ளது. அதில் Screening Committee எனப்படும் முதல் குழு, மூத்த அதிகாரிகளை கொண்டு படிப்படியாக வருகின்ற முன்மொழிவுகளை ஆராய்ந்து ஆலோசிக்கும். பின்பு, Empowered Committee எனப்படும் இரண்டாவது குழு சட்டத்தை பின்பற்றி எவ்வாறு அதனை எளிமைப்படுத்த முடியுமோ அவ்வாறு உத்தரவுகளையிட தலைமைச் செயலாளரின் தலைமையில் இயங்குகிறது. இவ்வாறு உத்தரவுகளின் அடிப்படையில் திருத்தி அமைக்கப்பட்ட முடிவுகளை முதலமைச்சர் அவர்களின் ஆலோசனைகளை பெற்று அரசாணைகள் பிறப்பிக்கப்படுகிறது.
கடந்த 2021ம் ஆண்டு, ஜூன் 21ம் தேதி தமிழக சட்டசபையில், ‘இணைய வழியில் அரசு சேவைகளை மக்கள் உடனுக்குடன், வெளிப்படைத்தன்மையுடன் பெறுவதற்கான அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு’ அறிவிக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்தாண்டு நிதிநிலை அறிக்கையில், ‘எளிமையான நிர்வாகம்` (Simple gov) திட்டத்தின் கீழ், 8 அரசுத் துறை சான்றிதழ்கள் மற்றும் ஆவணங்களை மக்கள் எளிதாக பெறுவதற்கான வழிமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்பட்டது.
இது வரும் ஆண்டில் பல்வேறு துறைகளில் 159 சேவைகளாக விரிவு செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. தற்போது நடைமுறையில் உள்ள நேரடி ஆய்வுகள், ஆவண சரிபார்ப்பு போன்றவற்றிற்கு மாற்றாக சுய சான்றிதழ், இணைய வழி – KYC மற்றும் டிஜிட்டல் கையொப்பம் போன்ற இன்னும் பல வழிமுறைகள் இந்த எளிமை ஆளுமையின் மூலமாக அறிமுகப்படுத்தப்படுகின்றன. இதன்மூலமாக பொதுமக்களும், தொழில் நிறுவனங்களும் எளிமையாக்கப்பட்ட சேவைகளை விரைவாக பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
