புதுக்கோட்டை மாவட்டத்தில் சமூக ஆர்வலர்களால் போராடி அல்லது உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து அது மூலம் மீட்கப்பட்ட ஏராளமான குளங்களும், நிலங்களும் அதிகாரிகள் பாதுகாத்து பராமரிக்க தவறியதால் பழையபடி மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு வருகிறது என குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதுகுறித்து எழுத்தாளர் துரை குணா கூறுவது..
புதுக்கோட்டை மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளில் நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக் கோரிய மனு மீது இதுவரை எத்தனை உத்தரவுகள் உயர்நீதிமன்றம் பிறப்பித்துள்ளது என தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியரிடம் கேட்கப்பட்ட தகவலுக்கு மாதங்கள் 6 ஆகியும் இன்று வரை பதில் இல்லை.

பெரும்பாலும் உயர்நீதிமன்ற உத்தரவுகளை அதிகாரிகள் மதிப்பதில்லை. உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க எவ்வளவு செலவாகும் எவ்வளவு நாட்கள் ஆகும் என்பது உங்களுக்கு தெரியும்? எனது போராட்டத்தால் கந்தர்வகோட்டை கரம்பக்குடி தாலுகா மீட்கப்பட்ட குளங்கள் இன்று வரை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி குளமாக்கப்படவில்லை.
இதனால் மீண்டும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு வருகிறது. கந்தர்வகோட்டை தாலுகாவில் புஷ்பராஜ் என்பவர் அரசுக்கு சொந்தமான 1.5 ஏக்கர் நிலத்தை மீட்டு மக்கள் பயன்பாட்டு கொண்டுவர வேண்டுமென உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார்.நீதிமன்றம் வட்டாட்சியர் தலைமையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என உத்தரவு பிறப்பித்தது ஆனால் 29.05.2025 தேதி துவார் கிராமம் கெண்டையன்பட்டிக்கு ஆக்கிரமிப்புகளை அகற்ற வந்த தலையாரி, விஏஓ, ஆர்ஐ மூன்று பேரும் சேர்ந்து ஒரு ஜேசிபி வாகனத்தை வரச் சொல்லி அந்த இடத்தில் போட்டோ எடுத்துக் கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றி விட்டதாக மாவட்ட ஆட்சியருக்கு அறிக்கை கொடுத்திருக்கிறார்கள்.
காசிராஜா என்பவர் குளத்தூர் தாலுகாவில் ஊரணியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர் நீதிமன்றத்தில் கொடுத்த வழக்கில் ஏழரை ஏக்கர் ஆக்கிரமிப்புகளை மட்டும் அகற்றிவிட்டு ஒரு தனியார் பள்ளி ஆக்கிரமிப்பு காம்பௌண்ட் சுவர்களை அகற்றாமல் விட்டு விட்டார்கள். இப்படி அதிகாரிகள் நீதிமன்ற உத்தரவுகளை மதிக்காமல் ஆக்கிரமிப்பாளர்களிடம் கையூட்டு பெற்றுக் கொண்டு சொகுசாக வலம் வருகிறார்கள்.அதோடு அல்லாமல் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதற்கான கணக்குகளை எழுதி (அறிக்கைகள்) அதிலும் தில்லாலங்கடி வேலைகளை செய்து வருகிறார்கள்.
தனி நபர்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் உழைப்பும் அக்கறையும் வீண் போகிறது. இதை நாங்கள் இதுபோன்ற அனைத்து தகவலையும் திரட்டி நீதிமன்றத்தில் முறையிடுவதை தவிர வேறு வழி தெரியவில்லை என்கிறார்.
