கோவை கலெக்டர் அலுவலக வளாகத்தில், மாவட்ட விவசாயிகளுக்காக மண் பரிசோதனை மற்றும் விழிப்புணர்வு முகாம்களை ஒவ்வொரு கிராமத்திலும் நடத்துவதற்காக புதிய நடமாடும் மண் பரிசோதனை ஆய்வக வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது. தேசிய வேளாண்மை வளர்ச்சி திட்டத்தின் 2025 2026 நிதியாண்டின் கீழ் இந்த முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளது.
கலெக்டர் பவன் குமார் கிரியப்பனவர், வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்து, அதன் மூலம் நடைபெறும் மண் பரிசோதனை செயற்பாடுகளை நேரில் பார்வையிட்டு, வேளாண்மைத் துறை அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
மண் வள மேம்பாடு, சரியான உர பரிந்துரை மற்றும் பயிர் விளைச்சலை அதிகரிக்க இந்த நடமாடும் ஆய்வகம் முக்கிய பங்கு வகிக்கிறது. ரூ.75 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள இந்த வாகனத்தில் மண் மாதிரிகளை சேகரித்து அதனை மொபைல் ஆய்வகத்திலேயே பகுப்பாய்வு செய்து, அன்றைய தினமே விவசாயிகளுக்கு மண்வள அட்டைகள் வழங்கப்படும். ஒவ்வொரு மாதிரிக்காக ரூ.30 சேவைக்கட்டணம் பெறப்படும்.
இந்த வாகனம் திட்டமிட்ட கிராமங்களுக்குச் சென்று, மண் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்யும். அதன் அடிப்படையில் பயிர்சார்ந்த பரிந்துரைகள் வழங்கப்படும்.
2025 -26 ஆண்டின் கலைஞரின் அனைத்து கிராம வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் உள்ள கிராமங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் 12 முகாம்கள் (வாரம் 3) நடத்தப்படும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், வட்டார வேளாண்மை மையங்கள் வழியாக விவசாயிகளிடம் முன்னறிவிப்பு மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
இந்நிகழ்ச்சியில் இணை இயக்குநர் (வேளாண்மை) கிருஷ்ணவேணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் ஆனந்தகுமார், துணை இயக்குநர் புனிதா, உதவி இயக்குநர் சக்திவேல் (தொண்டாமுத்தூர்), மண் பரிசோதனை அலுவலர் சுபப்பிரியா உள்ளிட்டோர் மற்றும் பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் பங்கேற்றனர்.
