புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை, கரம்பக்குடி தாலுகாக்கள் வழியாக அக்னி ஆறு கடலில் சென்று கலக்கிறது. ஒரு 30 ஆண்டுகளுக்கு முன்பு இந்த காட்டாற்றில் மழைக்காலங்களில் பெரும் வெள்ளமாக கரை புரண்டு ஓடும்,அதன் பிறகான காலங்களில் போதிய மழைகள் இல்லாததால் இந்த ஆற்றில் வந்து கலக்கக்கூடிய கிளை வரத்து வாரிகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டதால் நீர்வரத்து குறைந்துவிட்டது. இதனால் ஆற்று இருகரைகளிலும் ஆக்கிரமிப்புகளும் மணல் கொள்ளைகளும் மிக ஜோராக நடக்கத் தொடங்கியது..
கடந்த வாரம் கந்தர்வகோட்டை தாலுகா ஆத்தங்கரைவிடுதி கிராமத்திற்கு உட்பட்ட அக்னி ஆற்று கரையில் முத்தரையர் சமூகத்தினர் பயன்படுத்தி வந்த சுடுகாட்டையும், இடுகாட்டையும் அப்புறப்படுத்தி விட்டு மணல் கொள்ளையில் ஈடுபட்டு உள்ளார்கள். இதனால் எரிமேடை உள்ளிட்ட இடங்கள் சரிந்து பெரும் பள்ளமாக கிடந்ததை பார்த்த அப்பகுதி மக்கள் மிக அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளார்கள்.

தாசில்தார், கந்தர்வகோட்டை
நீர் நிலைகளை மற்றும் கனிம வளங்களை பாதுகாத்து பராமரிக்கக் கூடிய அதிகாரிகள் தான் இங்கே மணல் கடத்தலில் முன் நின்று செய்கிறார்கள். பொதுப்பணித்துறை, வருவாய்த்துறை, காவல்துறை என மாதம், வாரம், ஒரு நாள் ஒன்றுக்கு என்ற அடிப்படையில் பணம் பட்டுவாடா நடக்குது.மணல் கடத்தல் செய்பவர்கள் துணிச்சலாக இதை தொழிலாக செய்து வருகிறார்கள். ஒருவேளை மணல் கடத்தலில் ஈடுபடுபவர்கள் இதை கைவிட்டால் கூட, அதிகாரிகள் அவர்களை விட மாட்டார்கள் ஏனென்றால் அதிகாரிகள் இதை வருமானமாக பார்த்து பழகி விட்டார்கள். எப்பொழுது மண் அள்ள வேண்டும்? எங்கே பதுங்க வேண்டும் எப்போது ஓட்ட வேண்டும் என்பதை காவல்துறை வியூகம் வகுத்து கொடுப்பதுதான் இதில் ஹைலைட்.

மணல் கடத்தலால் அக்னியாறு மிகப்பெரும் பள்ளத்தாக்குகளாக மாறிவிட்டது.மழைக்காலங்களில் நீர் நிரம்பினால் கால்நடைகள் அல்லது கால்நடைகளை மேய்ப்பவர்களும் தவறி விழுந்து இறந்தால் யார் பொறுப்பேற்பது? மணல் கடத்தலை தடுப்பதற்கு அந்த பகுதி பொதுமக்களோ? அல்லது விவசாயிகளோ? போலீஸ் 100-க்கு தகவல் சொன்னால் அடுத்த நிமிஷமே மணல் கடத்தல்காரருக்கு யார் தகவல் சொன்னார்கள் என்ற செய்தி தெரிந்து விடுகிறது, எங்களைப் போன்ற சமூக ஆர்வலர்கள் இந்த மணல் கடத்தலை ஊடகங்கள் மூலம் வெளியே கொண்டு வந்தால் 10 மாட்டுவண்டிக்காரர்களை பிடித்து வந்து வழக்கு போட்டு ‘போலீஸ் நடவடிக்கைகளை பார்த்தீர்களா’ என பொதுமக்களிடம் மார்புதட்டி கொள்கிறார்கள்.. சில சமயங்களில் மண் அல்லாமல் வீட்டில் சும்மா கிடக்கும் மாட்டு வண்டிகளை பிடித்து வந்து காவல் நிலையத்தில் வைத்து வழக்கு போட்டு ரிமாண்ட் செய்த சம்பவம் உண்டு.
தினந்தோறும் இதே ஆற்றில் டிப்பர் லாரிகள் மூலம் மணல் அள்ளி வெளியில் 70 ஆயிரத்துக்கு மிகாமல் விற்பனை செய்யப்படுகிறது, இவர்களை சும்மாத்துக்கும் கூட காவல்துறை விரட்டியதில்லை ஏனென்றால் இவர்கள் ஐஏஎஸ், ஐபிஎஸ் மந்திரி, மாவட்டம் என எல்லோரையும் சரி செய்து விட்டுதான் ஆற்றுக்குள் ஹிட்டாச்சியை இறக்குகிறார்கள். இந்த நிலை தொடர்ந்து நீடித்தால் சுடுகாடு மட்டுமல்ல ஊரையே சுடுகாடா மாற்றி விடுவார்கள். இது திராவிட மாடல் அரசுக்கே வெளிச்சம்..?

