தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்க எதிர்ப்பு தெரிவித்து ரிப்பன் கட்டிடம் முன்பு தூய்மை பணியாளர்கள் பந்தல் அமைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை மாநகராட்சியில் ராயபுரம், திரு.வி.க.நகர் மண்டலங்களில் தூய்மைப்பணியை தனியார் வசம் ஒப்படைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. அதனை கண்டித்து அந்த மண்டலங்களில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் பணி பாதுகாப்பு வழங்க வேண்டும்.


தூய்மை பணியை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது என்பதை வலியுறுத்தி உழைப்போர் உரிமை இயக்கத்தைச் சேர்ந்த தூய்மை பணியாளர்கள் சென்னை மாநகராட்சி ரிப்பன் கட்டிட அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, வளாகம் முன்பு குவிக்கப்பட்டிருந்த போலீசார் அவர்களை வெளியேற்றினர். இதையடுத்து ரிப்பன் மாளிகையின் பிரதான நுழைவு வாயில் நடைபாதையில் அமர்ந்து குடியேறும் போராட்டத்தை நடத்துவதாக அறிவித்தனர்.
இதையடுத்து துணிகளால் ஆன பந்தல்களை அமைத்து போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர். இதனால், ரிப்பன் கட்டிட அலுவலகத்தின் அனைத்து வாயில் கதவுகள் மூடப்பட்டு போலீசாரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது. ரிப்பன் கட்டிட அலுவலக முன்பகுதியில் தடுப்புகள் அமைக்கப்பட்டு யாரும் நுழையமுடியாத அளவுக்கு பாதுகாப்பு போடப்பட்டது.
போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், தூய்மைப்பணியை தனியாரிடம் ஒப்படைக்க மாட்டோம் என்று உறுதி அளித்தால் மட்டுமே கைவிடப்படும் என திட்டவட்டமாக தெரிவித்தனர்.
