கடந்த மார்ச் மாதம் தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாசில்தார் அலுவலகத்தில் புதிய தாசில்தாராக யுவராஜ் பதவியேற்றார். பதவியேற்ற நாள் முதல் இந்து சமய அறநிலையத்துறையின் அறிவிப்பைப் பின்பற்றி, ஜாதிப் பெயரோ குறிப்பிட்ட பெயர்களோ இல்லாமல் கோவில்களில் அச்சிடப்படும் அழைப்பிதழ்கள் மற்றும் பெறப்படும் நன்கொடைகளில் பதியப்படும் பெயர்கள் ஆகிய அனைத்தையும் கண்காணிக்க ஏற்பாடு செய்து சிறப்பாகத் தனது செயல்பாடுகளைத் தொடங்கினார்.
கல்வி மற்றும் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு
தனியார் பள்ளிகளில் காடுகள் குறித்த விழிப்புணர்வு பேரணியைத் துவக்கி வைத்து, பள்ளி மாணவர்களிடையே விளக்க உரை ஆற்றிக் காடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது வரவேற்பைப் பெற்றது.
அரசால் நடத்தப்படும் ஜமாபந்தி முகாமைச் சிறப்பாக ஏற்பாடு செய்து, 150 மரக்கன்றுகளை மாவட்ட ஆட்சியர் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி, மரங்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியது மக்களின் நெஞ்சைத் தொடும் நிகழ்வாக அமைந்தது.


குழந்தைகள் நலன் மற்றும் கல்வி உதவி
தாய் தந்தை இழந்த பள்ளி மாணவ மாணவியர் 43 நபர்களை மாவட்ட ஆட்சியர் அவர்கள் தத்தெடுக்க கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் ஒரத்தநாடு வட்டத்தில் சார்பாக 43 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு அவர்களுடைய அடிப்படைத் தேவைகள் கல்வி உதவிகள் ஆகியவற்றை ஒரத்தநாடு வட்டாட்சியர் மூலமாக செய்யப்பட்டு வருகிறது அவற்றில் மிகவும் அடிப்படை வசதிகள் இல்லாத ஐந்து மாணவ மாணவியருக்கு தலா ஐந்தாயிரம் வீதமும் ஒரே குடும்பத்தில் தாய் தந்தை இழந்த மூன்று மாணவ மாணவிகளுக்கு பத்தாயிரம் ரூபாயும் இதே போல் கல்வி கட்டணம் செலுத்த இயலாத ஒரு கிருபாளனி என்கின்ற மாணவிக்கு 45 ஆயிரம் ரூபாய் பள்ளி தாளாளரை கேட்டுக் கொண்டதன் பேரில் தள்ளுபடி செய்யப்பட்டது என்பதும் இவரின் சிறப்பான சேவையை உணர்த்துகிறது.
மேலும் கடந்த 30 வருடமாக இல்லாத நிகழ்வாக ஒரத்தநாடு வட்டத்தில் கடந்த மே மாதம் நடந்த மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் நடந்த ஜமாபந்தி விழாவில் அனைத்து கிராம கணக்குகளும் தணிக்கை முடிந்த இறுதி நாளன்றே மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் கையெழுத்து பெற்றது வரலாற்று சாதனையாகும் ஒரத்தநாடு வட்டத்தை பொருத்தவரை ஜமாபந்தி தணிக்கைக்கு அவ்வளவு எளிதாக கிராம நிர்வாக அலுவலரிடம் இருந்து கணக்குகள் வராது என்பது எல்லோரும் அறிந்தது ஆனால் இவர் ஒரத்தநாடு வட்டாட்சியராக பணியாற்ற பிறகு கிராம நிர்வாக அலுவலர்களிடமும் வட்ட அலுவலக பணியாளர்களிடம் மிகவும் இனிமையாக அணுகி இவ்வளவு சிறப்பாக இந்த பணியை முடித்தார் என்பது தஞ்சாவூர் மாவட்டமே அறியும்.
மேலும் தினந்தோறும் குறைகளுடன் வரும் மக்களை கனிவுடன் பேசி உடனுக்குடன் உரிய எழுத்தர்களிடம் கோப்புகளை கேட்டு விரைவாக குறைகளை களைவதில் மக்களிடம் சிறப்பான பெயரை பெற்றுள்ளார்.
இறுதியாக கடந்த ஜூன் மாதம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் வருகையின் போது 385 இலவச வீட்டு மனை நத்தம் பட்டாக்களை இணைய வழியில் பதிவேற்றம் செய்து அவர்களுக்கு பட்டா வழங்கி அனைவர் மனதிலும் இடம் பிடித்துள்ளார்.


மூதாட்டிகளுக்கு உடனடி உதவி
கடந்த மே மாதம் நடந்த ஜமாபந்தியில் கைவிடப்பட்ட மூதாட்டிகளுக்கு ஒரு மணி நேரத்தில் வீட்டுமனை வழங்கி நெகிழவைத்த சம்பவம் குறிப்பிடத்தக்கது. மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் ஜமாபந்தி வரிசையில் நின்ற மூதாட்டிகளை அழைத்து அவர்களுக்கு என்ன பிரச்சினை என்று கேட்டபோது, இருவருக்கும் தங்குவதற்கு வீடு இல்லை, வீட்டுமனை இல்லை என்று இரண்டு மூதாட்டிகளும் கோரிக்கை வைத்தனர். இரண்டு மூதாட்டிகளையும் பார்க்கக் கலெக்டர் கண்கலங்கி, ஒரத்தநாடு தாசில்தார் யுவராஜை அழைத்து, “ஒரு மணி நேரத்தில் இந்த இரண்டு மூதாட்டிகளுக்கும் இலவசமாக அரசு வீட்டுமனை வழங்க முடியுமா?” என்று கேட்டார். மாவட்ட ஆட்சியர் கேட்டவுடன் உடனடியாக இரண்டு வீட்டுமனைகளை அரை மணி நேரத்தில் தயார் செய்து கொடுத்த சம்பவமும் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
கிராமப்பகுதி மேம்பாடு மற்றும் கல்வி
கிராம நரிக்குறவர் பகுதியில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் துறையின் தமிழக அரசின் தொல்குடித் திட்டம் சிறப்பு முகாம் நடைபெற்றது. பத்தாம் வகுப்பு படித்த மாணவன் அதிக விடுப்பு எடுத்து பள்ளியிலிருந்து நிறுத்தப்பட்ட நிலையில், மீண்டும் தன்னைப் பள்ளியில் அனுமதிக்கக் கோரி கொடுக்கப்பட்ட மனு மீது, வட்டாட்சியர் நேரடியாகப் பள்ளிக்குச் சென்று அம்மாணவரை மீண்டும் பள்ளியில் மாற்றுச் சான்றிதழ் வழங்கிச் சேர்த்தார். இதேபோல் மற்றொரு மாணவி ஆறாம் வகுப்பில் பாதியில் படிப்பை நிறுத்தியதைத் தொடர்ந்து மீண்டும் பள்ளியில் சேர்க்கப்பட்டார். மேலும் இதேபோல் படிப்பைப் பாதியில் நிறுத்திய முப்பது மாணவர்களின் பெற்றோரிடம் பேசி மீண்டும் பள்ளியில் சேர்ப்பதற்கான முயற்சிகளைச் சிறப்பாகச் செய்து பொதுமக்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார்.
அதோடு மட்டுமல்லாமல், அதிகம் படித்த மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக அவர்களுக்குப் புத்தகங்கள் மற்றும் ஊக்கத்தொகை என ஏழு குழந்தைகளுக்கு வழங்கி, நரிக்குறவர் இனச் சமூக மக்களிடம் கல்வியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தியதோடு, அவர்களை மேலும் தொடர்ந்து படிக்க ஊக்குவித்தார்.


நீர்நிலை மேம்பாடும் ஊழல் ஒழிப்பும்
இதேபோல் பல ஏரி மற்றும் குளங்களைத் தூர்வாரச் சிறப்பான முறையில் நடவடிக்கை எடுத்தார். பொதுப்பணித்துறை மற்றும் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்வதற்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகளை அகற்றுவது தொடர்பாகவும் நடவடிக்கை மேற்கொண்டார்.
அலுவலகம் என்றால் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதாகவும், கையெழுத்துக்குக் காசு வேண்டும் என்றும் பரவலாகப் பேசப்பட்டு வரும் கருத்துகளுக்கு மத்தியில், தனது பணியை நேர்மையாகவும் சிறப்பாகவும் செய்து வரும் வட்டாட்சியர் யுவராஜ் அவர்களுக்கு, இதேபோன்று மென்மேலும் நேர்மையாகவும் நியாயமாகவும் பணியில் சிறந்து விளங்க நமது குழுவின் சார்பாக வாழ்த்துகள்.

வரலாற்று சிறப்புமிக்க சாதனை
மேலும் மிகப்பெரிய வரலாற்றுப் பதிவாக, தாசில்தார் அலுவலகத்தில் 1435ஆம் ஆண்டு பசலித் தொடக்க விழாவாகப் பொதுமக்கள் உடனடியாகப் பசலிக்கான வருவாய்த்துறை ஆவணங்களைப் பெறுவதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. 1435ஆம் ஆண்டு கணக்குகள் நிறைவடைந்து மீண்டும் தொடங்கியது பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
இதுபோல் தொடர்ந்து தனது பணியைச் சிறப்பாகச் செயல்படுத்தி வரும் தாசில்தார் யுவராஜ் அவர்களை மாவட்ட ஆட்சியர் பாராட்டிச் சான்றிதழ் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
