சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற ஆதிதிராவிடர், பழங்குடி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிப் பாராட்டினார் முதல்வர் ஸ்டாலின்.
தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலப் பள்ளிகளில் பயின்று IIT, NIT போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர்ந்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கி பாராட்டு தெரிவித்தார்.
தொடர்ந்து, உயர்கல்வி நிறுவனங்களில் சேர்க்கை பெற்ற 136 அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்று, மடிக்கணினிகள் வழங்கி வாழ்த்து தெரிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
IIT சேர்க்கை போட்டி
IIT எனப்படும் மத்திய அரசால் நிர்வகிக்கப்படும் இந்தியன் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜி நிறுவனங்களில் சேர்வதற்காக ஆண்டுதோறும் சுமார் 15 லட்சம் மாணவர்களுக்கு மேல் JEE எனப்படும் நுழைவுத் தேர்வு எழுதுகின்றனர். அதில் சுமார் 16 ஆயிரம் மாணவர்கள் மட்டுமே இந்தியா முழுவதும் உள்ள 23 IIT களில் படிப்பதற்காக தேர்ச்சி பெறுகின்றனர்.
குறிப்பாக இந்தியாவில் மொத்தம் உள்ள அனைத்து IIT களில் தரவரிசைப் பட்டியலில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முதலிடம் பிடிக்கும் IIT மெட்ராஸில் படிப்பதற்காக கடும் போட்டி நிலவுவதால், முதல் ஆயிரம் நபர்களுக்குள் வந்தால் மட்டுமே இங்கு படிப்பதற்கான இடம் கிடைக்க வாய்ப்பு உள்ளது.
மாற்று வாய்ப்புகள்
இந்த வாய்ப்புகளைத் தவறவிடும் பட்சத்தில் மாணவர்களுக்கு மேலும் ஒரு வாய்ப்பாக IIT நிறுவனங்களில் B.S டேட்டா சயின்ஸ் மற்றும் B.S எலக்ட்ரானிக்ஸ் சிஸ்டம் என்ற இரு படிப்புகளுக்கு JEE போன்ற தேர்வுகள் ஏதும் இல்லாமல் IIT நிறுவனமே தனியாக தகுதித் தேர்வு ஒன்று நடத்துகிறது. இதற்கான நான்கு வாரப் பயிற்சியும் அவர்களே வழங்குகிறார்கள்.
குறிப்பாக இதில் தேர்ச்சி பெறும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களுக்கான மொத்த கல்விக் கட்டணத்தையும் டாட்கோ நிறுவனத்துடன் இணைந்து IIT யே ஏற்றுக்கொள்கிறது. மேலும் இந்த படிப்புக்கு வயது வரம்பு கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
உயர்கல்வி வழிகாட்டு மையங்கள்
எனவே பள்ளி மாணவர்களுக்கு JEE, NEET உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்குப் பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகப் பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.
சுற்றறிக்கை விவரம்
இது குறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குப் பள்ளிக் கல்வி இயக்குநர் ச.கண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கை விவரம்:
உயர்கல்விக்கான NEET, JEE உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதுதவிர, போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்துவதற்காக இந்த ஆண்டு 38 மாவட்டங்களில் இருந்து உயர் தொழில்நுட்ப ஆய்வக வசதியுள்ள 236 வட்டாரங்களில் உயர்கல்வி வழிகாட்டி மையங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.
இங்கு மாணவர்களின் உயர்கல்வி விருப்பத்துக்கு ஏற்ப சனிக்கிழமைகளில் உரிய பயிற்சிகள் வழங்கப்படும். அதில் உயர்கல்வி சேர்க்கைக்கான ஆலோசனைகள், வழிகாட்டுதல்களைப் பெறலாம்.
பயிற்சி ஏற்பாடுகள்
இந்த மையங்களில் பயிற்சி தர முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சுழற்சி முறையில் நியமிக்கப்பட்டுள்ளதை உறுதி செய்ய வேண்டும்.
அதேபோல், பயிற்சிகள் தடையின்றி நடைபெறும் வகையில், சார்ந்த வட்டாரத்தின் பொறுப்பு பள்ளித் தலைமை ஆசிரியர் ஒவ்வொரு வாரமும் பணி புரிவதை உறுதி செய்ய வேண்டும்.
பயிற்சி அளிக்கும் ஆசிரியர்கள், தலைமை ஆசிரியர்களுக்கு மதிப்பூதியம் ₹1,000 வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
