தமிழ்நாடு அரசுக்கு வழங்க வேண்டிய கல்வித் தொகையை மத்திய அரசு இன்னும் வழங்கவில்லை. இதை கண்டித்து திருவள்ளூர் காங்கிரஸ் எம்.பி. சசிகாந்த் செந்தில் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்.
இதனால், அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போதும், உண்ணாவிரதத்தைத் தொடர்ந்து வந்தார்.
இந்த நிலையில், தற்போது சசிகாந்த் செந்தில் தற்காலிகமாக தனது உண்ணாவிரதப் போராட்டத்தை வாபஸ் பெற்றுள்ளார்.
இதற்கான காரணத்தை விளக்கி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “ஏழை, எளிய மாணவர்களின் கல்வி உரிமைக்காக நான் மேற்கொண்டிருந்த உண்ணாவிரதப் போராட்டத்தை தலைவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க தற்காலிகமாக வாபஸ் பெறுகிறேன்.
தமிழ்நாட்டில், குறிப்பாக மாணவர்களின் கல்வி உரிமை மற்றும் கனவுகளை கெடுக்கும் விதமாக ஒன்றிய பாஜக அரசு செயல்பட்டு வருகிறது.
இதை மக்களுக்கு வெளிப்படுத்தும் நோக்கில் கடந்த நான்கு தினங்களாக உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தேன்.
தற்போது இந்தப் போராட்டம் பேசுபொருளாகியுள்ளது. பரவலான ஆதரவையும் பெற்றுள்ளது.
இருப்பினும், பாஜக அரசு இன்னமும் தமிழ்நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளை செவிமடுக்க மறுக்கிறது.
ஏழை, எளிய, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் நிலையிலும், பாஜக அரசு தனது அதிகாரத்தையும் அகங்காரத்தையும் தொடர்ந்து வருகிறது.
தமிழர்களுக்கு எதிரான இந்தச் செயல்பாடுகளை தமிழர்கள் கவனித்துக்கொண்டே வருகிறார்கள்.
ஆரம்பத்திலிருந்தே தமிழர்களுக்கு எதிரான நிலைப்பாட்டையே பாஜக கடைப்பிடித்து வருகிறது. இது இந்தப் போராட்டத்தின் தொடக்கத்திலேயே எனக்கு நன்கு தெரிந்தது.
உரிமைகளைப் பாதுகாக்க வரும் நாள்களில் தமிழ்நாட்டு மக்கள் பாஜக அரசுக்கு எதிராக முன்வந்து போராட வேண்டும்.
மக்களின் நலனுக்காக மேற்கொள்ளவிருக்கும் எதிர்காலப் போராட்டங்களுக்கு இந்தப் போராட்டம் முன்னோடியாக இருக்கும்.
மக்களின் பிரச்சினைகளுக்காக போராடுவது, அவர்களின் பிரச்னைகளை எதிர்த்து நிற்பது, சமூக ஏற்றத்தாழ்வுகளை கலைப்பது என்பவை காங்கிரஸ் கட்சியின் அடிப்படை கொள்கைகள் ஆகும்.
வரலாறெங்கிலும் காங்கிரஸ் இப்படியான ஏராளமான போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. காங்கிரஸ் பணியாளராக நான் இந்த உண்ணாவிரதத்தை முன்னெடுத்தேன். நம் முன் நிற்கும் போராட்டம் நீண்டதும், பெரிதுமாக இருந்தாலும், அதை ஒற்றுமையாக முன்னின்று நடத்த வேண்டும்.
என்னுடைய உடல்நிலையை முன்னிட்டு, மருத்துவர்கள், இந்தியா கூட்டணியின் தலைவர்கள், பிற கட்சிகள் மற்றும் அமைப்புகளைச் சேர்ந்த நண்பர்கள், நலன்விரும்பிகள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க, உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளேன்.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளர் K.C. வேணுகோபால் ஆகியோரும் போராட்டத்தை கைவிடுமாறு கேட்டுக்கொண்டனர்.
இவர்களின் கோரிக்கைக்கு ஏற்ப, தற்காலிகமாக உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிடுகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
