பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் அவர்கள் தஞ்சை மாவட்ட மக்களுக்கு கிடைத்த ஒரு நல்ல ஆட்சியர். எவ்வளவோ அரசு உயர் அதிகாரிகள் இருந்தாலும் இவரைப்போல் மக்கள் மனம் கவர்ந்தவர் வேறு எவரும் இல்லை. மக்களிடம் அவர் அனுகுமுறை, எளிமை அறிவுள்ள எவரையும் கவரக்கூடியதுதான் “கற்றாரை கற்றாரே காமுறுவர்” தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில் பணியாற்றி அனுபவம் பெற்றவரை 2024ம் ஆண்டு தஞ்சை மாவட்ட கலெக்டராக தமிழ்நாடு அரசு அறிவித்தது.
இந்திய நிர்வாகப் பணியின் தமிழ்நாடு பிரிவைச் சேர்ந்த பொறியாளராக இருந்து அரசு ஊழியராக மாறிய இவர், பொது சேவை வழங்கலில் மக்களை மையமாகக் கொண்ட மற்றும் நிலையான தீர்வுகளைக் கண்டறிவதில் உறுதியாக நம்பிக்கை கொண்டவர் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையில் முக்கிய நற்பண்புகளாக இரக்கம், பச்சாதாபம் மற்றும் கருணை ஆகியவற்றை நிலைநிறுத்துகிறார். கலெக்டராக பொறுப்பேற்றதுமே, தஞ்சை மாவட்ட மக்களிடம் கலெக்டர் பிரியங்கா பேசிய வார்த்தைகள் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது பொதுமக்களிடம் பிரியங்கா சொல்லும்போது, “தஞ்சை மாவட்டம் விவசாயப் பகுதியாகும்.. எனவே, விவசாயிகளுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் அனைத்தையும் பெற்று தர பாடுபடுவேன், ”விவசாயம் நிறைந்த தஞ்சாவூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் அனைத்தும் ஒவ்வொரு விவசாயிக்கும் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும்.. குறைதீர்க்கும் கூட்டத்தில் பெறப்படும் மனுக்கள் மீது உடனடியாக உரிய தீர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பொதுமக்கள் வழங்கும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என்றும் கூறினார். “பொதுமக்கள் கொடுக்கும் ஒவ்வொரு மனுக்களையும் தீர்த்து வைக்க போதிய அறிவுரைகள் வழங்கப்படும்” என்று வெறும் பேச்சளவில் மட்டும் இல்லாமல் அதிகாரிகளிடம் ஒவ்வொரு கோரிக்கை மனுக்கள் மீதும் பொதுமக்களின் ஆயிரம் கண்ணீர் துளிகள் இருப்பதால், அதை அனைவரும் சிரித்த முகத்துடன் பணிகளை செய்ய வேண்டும்… மறுபடியும் மறுபடியும் ஒரே மனுக்கள் வருவதை தடுக்கவேண்டும்” என்று அறிவுறுத்தினார் என்றும் தெரிய வருகிறது.
கலெக்டராக பொறுப்பேற்றதுமே, முதல் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.. இதில், இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, ரேஷன் கார்டு, உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 410 மனுக்களை மாவட்ட மக்கள் கலெக்டரிடம் வழங்கினார்கள். அவைகளை பெற்றுக்கொண்ட கலெக்டர், அதன்மீது உரிய நடவடிக்கையை உடனடியாக எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அரசின் நல திட்டங்கள் எல்லாருக்குமே உடனடியாக கிடைக்க நடவடிக்கை, சட்டத்துக்கு புறம்பாக செயல்படுபவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை, முக்கியமாக விவசாயத்துக்கும், கிராமப்புற மக்கள் முன்னேற்றத்துக்கும் முக்கியத்துவம் என அசத்தி வருகிறார். அதேபோல, தஞ்சை மாவட்டத்தில் 40 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டாவது முறையாக பெண் ஆட்சியராக பொறுப்பேற்ற பிரியங்கா அதே மண்ணைச் சேர்ந்தவர் என்பது கூடுதல் பெருமையான விஷயமான இருப்பதால் டெல்டாவின் துயரை நன்கு அறிந்து வைத்திருப்பார், நிச்சயம் அனைத்து சவால்களையும், சிக்கல்களையும் சமாளிப்பார் என்று மாவட்ட மக்களின் உறுதியான நம்பிக்கையை பெற்றுள்ளார்.
ஒரு முறை மனு கொடுக்க வந்த பெண் காலில் செருப்பை கழட்டி விட்டு நின்ற போது, ‘எதற்காக செருப்பை கழட்டினீர்கள்? போடுங்கள்…’என்று சொல்லி சமத்துவத்தை கற்றுத் தந்தார். இப்படி, தான் செய்யும் ஒவ்வொரு செயல்களிலும் அறத்தை முன்நிறுத்தும் பிரியங்கா பல குறைதீர்க்க முகாம்களில் பங்கு பெற்று வெகுவான பொதுமக்களின் கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற பல நடவடிக்கைகள் எடுத்து இருப்பது குறிப்பிடத்தக்கது. அதிலும் குறிப்பாக ஒரத்தநாடு அருகே மூதாட்டி இருவருக்கு ஒரு மணி நேரத்தில் பட்டா ஏற்பாடு செய்து அவர்களுக்கு வீடு வழங்கும் திட்டத்தில் வீடு ஒதுக்கீடு போன்ற பல நெகிழ்ச்சிகரமான சம்பவம் பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. கலை ஆர்வம் மிக்க இவர் கலைப் படைப்புகளை பாராட்டுவதில் எப்போதும் தவறியதில்லை. கலை பண்பாட்டு துறை மூலம் நடத்தப்படும் கண்காட்சியில் பங்கு கொண்டு அனைத்து கடைப்படைப்புகளையும் கண்டு கலை படைப்பினர்களை பாராட்டியதோடு மட்டுமல்லாமல் தனது உருவப் படத்தை ஓவியமாக கொண்டு வந்த இருவரை பாராட்டி அவர்களின் ஓவியத்தை பெற்று மகிழ்ந்தார்.
பேச்சில் மரியாதை, மக்களின் கோரிக்கைகளை கேட்டு தீர்வு காண்பதில் கண்ணியமிக்கவர் என்று தஞ்சாவூர் மாவட்ட மக்களை தன்னுடைய செயல்பாடுகளால் மகிழ்ச்சியடை வைத்துள்ளார் பிரியங்கா பங்கஜம்.
பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துவதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர் இவர், தஞ்சாவூர் மாவட்டப் பள்ளி மாணவர்களுக்கு முன்மாதிரியாக திகழ்கிறார். மக்கள் குறை தீர்வு கூட்டத்திற்கு சாலை மற்றும் பேருந்து வசதி கோரி கவனத்தை ஈர்ப்பதற்காக பள்ளிச் சீருடையில் மாணவர்களை அழைத்து வந்தவர்களை கடுமையாக சாடினார். பள்ளி செல்லும் மாணவர்களிள் நேரத்தை வீணடித்தால் FIR போட்டு வழக்கு பதிந்துவிடுவேன் என்று பெற்றோரையும், கவுன்சிலரையும் எச்சரித்ததோடு மட்டும்மல்லாமல் ஆளும் கட்சியாக இருந்தாலும் யோசிக்காமல் செய்த தவறுக்காக நோட்டீஸ் அனுப்புவேன் என்று கூட்டத்திலேயே கூறினார். இதுபோன்று தஞ்சையை சார்ந்த நாடளுமன்ற உறுப்பினர் முரசொலி அவருக்கு தேவைப்பட்ட அனுமதிகள் உரிய வரைமுறைக்கு உட்படாமல் இருந்ததன் காரணத்தால் மறுக்கப்பட்டது. இதனால் ஆத்திரமடைந்தவர் அதிகாரிகளை ஒருமையில் சாடினார். இருப்பினும் உருட்டல் மிரட்டலுக்கு அடிபணியாமல் கட்சி வேறுபாடு இன்றி அனைவரிடத்திலும் நேர்மையாக நடந்து கொண்டதன் விளைவாக இவர் மீது கவர்னர் அலுவலகத்தில் நடவடிக்கை எடுக்க கூறி மனுக்கள் பெறப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் அவற்றை கருத்தில் கொள்ளாமல் தொடர்ந்து நேர்மையான பணியாற்றுவதோடு தனக்கு கீழ் தனது கட்டுப்பாட்டில் உள்ள கோட்டாட்சியர்கள் மற்றும் வட்டாட்சியர்களை தொடர்ந்து ஊக்கப்படுத்தி அவர்கள் திரம்பட செயலாற்ற முக்கிய காரணமாக மாவட்ட ஆட்சியர் திகழ்கிறார்.
மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நடத்தப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று பேசிய ஆட்சியர் பிரியங்கா “நகையை அடமானம் வைத்து என்னுடைய அம்மா என்னை படிக்க வைத்தார். என்னுடைய அம்மாவை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள வேண்டும், அவரை பெருமைப்பட வைக்க வேண்டும் என்பதே என்னுடைய விருப்பமாக இருந்தது. சின்ன வயசுலேருந்து என்னவாக வேண்டும் என்கிற திட்டம் எல்லாம் எனக்கு இருந்தது இல்லை. எங்க அம்மா சந்தோஷப்படவேண்டும், அவங்க பொண்ணு நான்னு எல்லோரும் சொல்றத அவங்க கேட்கனும்னு நெனைச்சேன். ஐஏஎஸ் ஆனதுக்கு அப்புறம் என்னோட பேருக்கு பின்னாடி ‘பங்கஜம்’ எனும் அவருடைய பெயரை சேர்த்துக் கொண்டேன். பிரியங்கா ஐஏஎஸ் என்று போட்டுக் கொள்வதை விட என்னுடைய பெயரை ‘பிரியங்கா பங்கஜம்’ ஐஏஎஸ் என்று அம்மாவின் பெயரையும் சேர்த்து போட்டுக் கொள்வதே அவருக்கு நான் என்னுடைய நன்றிக்கடனை திரும்ப செலுத்தும் ஒரு வாய்ப்பாக கருதுகிறேன், என்று தெரிவித்து இருந்தார்.“ தொடர்ச்சியாக சத்துணவு மற்றும் மாணவர்களின் கல்வித்தரம் என எதையும் விட்டு வைக்காமல் சுழன்று வரும் இவரை சிறிவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் பிடித்திருப்பது ஆச்சரியம் இல்லை.
சமீபத்தில் முதலமைச்சர் திரு. மு க ஸ்டாலின் அவர்கள் மேடையில் பேசிய போது “தாயின் பெயரையும் சேர்த்து தாய்க்கு பெருமை தேடித்தந்த கலெக்டர் ‘பிரியங்கா பங்கஜம்’ ஐஏஎஸ் எளிமையான குடும்பத்தில் பிறந்து கடினமாக படித்து முன்னேறி சிறப்பாக பணியாற்றும் அவர்களுக்கும் அவரது கீழ் வேலை செய்யும் அனைத்து அரசு துறை அதிகாரிகளுக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாக’ கூறியது இவர் மகுடத்தில் சேர்க்கப்பட்ட மற்றொரு வைரமாகும்.
மாணவர்கள் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும், கல்வி மட்டுமே ஒருவரின் நிலையை உயர்த்தும் என்பதை இளம் தலைமுறையினருக்கு உணர்த்தும் விதமாக தொடர்ந்து ஊக்கம் அளித்து தனது பணியை சீரும் சிறப்புமாக செய்து வரும் பிரியங்கா பங்கஜம் ஐஏஎஸ் அவர்களுக்கு சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவிப்பது போல நமது குடும்பத்தின் சார்பாக நாமும் மென்மேலும் இவரது பணி சிறக்க வாழ்த்துக்களையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
