தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை வட்டத்தில் உள்ள ஒட்டங்காடு ஊராட்சிக்கு உட்பட்ட நடுவிக்குறிச்சி கிராமத்தில் செயல்பட்டு வரும் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளி, கடந்த நாற்பது ஆண்டுகளாக கல்வி ஒளியைப் பரப்பி வருகிறது. கடந்த காலங்களில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்துவந்ததையடுத்து, பள்ளி ஆசிரியர்கள் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழுவை அணுகி, பள்ளி மாணவர்களுக்கு தேவையான வசதிகள் செய்து தர வேண்டினார்கள்.
குழுவின் முயற்சியால், நன்கொடையாளர்களின் உதவியுடன் ரூ.35,000 செலவில் ஒரு வாகனம் வாடகைக்கு இயக்கப்பட்டு, அதன் மூலம் மாணவர்களின் வருகை கணிசமாக உயர்ந்தது. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் பெரும்பான்மையான கோரிக்கையான வாகன வசதி நிரந்தரமாக வழங்கப்பட வேண்டியதென பெற்றோரும் ஆசிரியர்களும் கோரினர்.

இந்த கோரிக்கையை கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையராக உள்ள திரு. சிவகுரு பிரபாகரன், ஐ.ஏ.எஸ் அவர்களுக்கு முன்வைத்த போது, அவர் அளித்த ஊக்கமும் வழிகாட்டுதலும் முக்கியமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து, ஏ.பி.ஜே. அப்துல் கலாம் கிராம வளர்ச்சி குழு பள்ளிக்கு புதிய வாகனம் ஒன்றை வழங்கும் திட்டத்தை குழு தலைவர் திரு.ஆசீர்வாதம் பொருளாளர் திரு.நேரு மற்றும் நிற்வாகிகள் இணைந்து நிறைவேற்றினர்.
இந்த புதிய வாகனத்தைத் துவக்கும் விழா, 2025 செப்டம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை அன்று, பள்ளி வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்வின் முக்கிய சிறப்பு அம்சம் என்னவென்றால், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி பிரியங்கா பஞ்சஜம், ஐ.ஏ.எஸ் அவர்கள். அவரே தலைமை விருந்தினராக கலந்து கொண்டு, புதிய வாகனத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்த பள்ளிக்கு நாற்பது ஆண்டுகளில் முதன்முறையாக மாவட்ட ஆட்சியர் வருகை தந்தார் என்பது சிறப்பு.
அவருடன் இணைந்து, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக உள்ள திரு. எம். ரவிச்சந்திரன் மற்றும் பட்டுக்கோட்டை வட்டாட்சியர் திரு.தர்மேந்திரா அவர்கள் விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று விழாவினை சிறப்பு செய்தனர்.
இந்த விழா, மாணவர்களிடமும் பெற்றோர்களிடமும் பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. இனி இந்த பள்ளி மேலும் பல மாணவர்களுக்காக கல்வி ஒளியைப் பரப்பும் மையமாக மாறும் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உருவாகியுள்ளது.
