கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரத்தின் போது நேரிட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியான சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழுவை அமைத்துள்ளது சென்னை உயர் நீதிமன்றம்.
கரூர் கூட்ட நெரிசல் தொடர்பான வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் வழிகாட்டு நெறிமுறைகள் வகுப்பது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட மனு மீது விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார், விஜய் பிரசாரம் செய்த வாகனம் இடித்து, விபத்து நேரிட்டுள்ளதே, அந்த சம்பவத்தில், இடித்துவிட்டு ஓடியதாக விஜய் வாகனம் மீது ஏன் வழக்குப் பதிவு செய்யவில்லை. அவ்வாறு செய்யாவிட்டால் மக்களுக்கு எப்படி நம்பிக்கை ஏற்படும் என்று நீதிபதி கேள்வி எழுப்பியிருக்கிறார்.
தொடர்ந்து வாதங்களைக் கேட்ட நீதிமன்றம், கரூர் பலி சம்பவம் குறித்து காவல்துறை ஐ.ஜி. அஸ்ரா கர்க் தலைமையில் சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்படும் என உத்தரவிட்டது.
மேலும், அனைத்து ஆவணங்களையும் சிறப்புப் புலனாய்வுக் குழுவிடம் கருர் காவல்துறையினர் ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
தவெக கட்சியினருக்கு கடும் கண்டனம் தெரிவித்திருக்கும் சென்னை உயர் நீதிமன்றம், கடும் கூட்டம் சேர்வதை முன்கூட்டியே கணித்திருக்க வேண்டாமா? இந்த இடத்தை காவல்துறைதான் அனுமதித்திருக்கிறது? பிறகு, இங்கு இவ்வளவு கூட்டம் சேரும்போது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டாமா? காவல்துறை வேடிக்கைப் பார்க்கிறது, ஆனால் நீதிமன்றம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காது. விஜய் வந்த வாகனம் ஏன் பறிமுதல் செய்யப்படவில்லை.
கட்சித் தலைவர்கள், நிர்வாகிகள், கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தவர்கள் எல்லாம் சம்பவம் நடந்ததும் அங்கிருந்து தப்பியோடிவிட்டார்கள். ஒருவர் கூட பொறுப்பேற்கவில்லை. தலைவர்கள் பலரும் தலைமறைவாகிவிட்டார்கள். விஜய் பிரசாரம் செய்த வாகனம் ஏன் இன்னமும் பறிமுதல் செய்யப்படவில்லை.
இது குறித்து அரசு தரப்பில் விளக்கம் கூறியிருப்பதாவது, தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்த இதே இடத்தில்தான் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்தார். விஜய் பிரசாரப் பயணத்துக்கு 500க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
காவல்துறை அனுமதி வழங்கிய நேரத்தைக் காட்டிலும் மிகக் கால தாமதமாகவே விஜய் பேச வந்தார். மாலை 3 மணிக்கு விஜய் பேசுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 12 மணி முதலே மக்கள் கூடத் தொடங்கிவிட்டனர். இரவு 7 மணிக்கு மேல்தான் விஜய் அங்கு வந்தார். அரசு மீது மிக எளிதாக குற்றச்சாட்டுகளை சொல்லிவிடலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறது.
யார் இந்த ஐ.ஜி. அஸ்ரா கார்க்?
பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவை பூர்வீகமாகக் கொண்ட அஸ்ரா கார்க், ஒரு பொறியியல் பட்டதாரி. சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்று, 2004ம் ஆண்டு தமிழ்நாடு கேடர் ஐ.பி.எஸ். அதிகாரியாக பணியில் சேர்ந்தார். திருப்பத்தூரில் உதவி காவல் கண்காணிப்பாளராக தனது பயணத்தை தொடங்கிய அவர், குறுகிய காலத்திலேயே தனது செயல்திறனால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். 2008 முதல் 2010 வரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி.யாக பணியாற்றியபோது, கந்துவட்டி கொடுமையை ஒழிக்க கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டார். இது பொதுமக்களிடையே அவருக்கு பெரும் நற்பெயரை பெற்று தந்தது.
2010ல் மதுரை மாவட்ட எஸ்.பி.யாக பொறுப்பேற்றபோது, உத்தபுரம் கிராமத்தில் தலித் மக்கள் நுழைய முடியாதபடி எழுப்பப்பட்டிருந்த தீண்டாமைச் சுவரை அகற்றுவதில் முக்கிய பங்காற்றினார். சமூக நீதிக்கான அவரது இந்த நடவடிக்கை, மாநிலம் முழுவதும் பெரும் பாராட்டுகளை பெற்றது. மேலும் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டு, குற்றவாளிகளை கண்டறிந்தார். 2021ல் மதுரையில் நடந்த இரட்டை கொலை வழக்கில் திறம்பட செயல்பட்டு குற்றவாளிகளை விரைவாக கைது செய்ததற்காக உயர்நீதிமன்றத்தால் நேரடியாக பாராட்டப்பட்டார். இப்படி பல சவாலான வழக்குகளைதிறம்படக் கையாண்ட அனுபவமும், நேர்மையான அதிகாரி என்ற பெயரும் கொண்ட ஐ.ஜி. அஸ்ரா கார்க், கரூர் துயர சம்பவத்தின் விசாரணையை முன்னெடுப்பது, பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
