சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.ஆ.அருண், இ.கா.ப., அவர்கள் உத்தரவின் பேரில் சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சட்ட விரோதமாக மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வரும் நபர்களையும், வலை பின்னல்களை காவல் குழுவினர் தகுந்த புலன் வைத்து கண்காணித்து கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு உதவி ஆணையாளர் (வடக்கு) மற்றும் பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் லாரிகளில் பார்சல்கள் மூலம் வெளி மாநில மதுபாட்டில்களை கடத்தி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில், காவல் குழுவினர் (02.10.2025) காலை, கொருக்குப்பேட்டை, பிட்டி முனுசாமி தெருவில் கண்காணித்து ஒரு கடையை சோதனை செய்த போது, அங்கு வெளி மாநில மது பாட்டில்களை சட்டவிரோத விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.
அதன்பேரில், பூக்கடை மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து, சட்டவிரோதமாக வெளி மாநில மதுபாட்டில்களை வைத்திருந்த அலாவுதீன், வ/43, மண்ணடி, சென்னை என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து சுமார் ரூபாய் 3.5 இலட்சம் மதிப்புள்ள 160 வெளி மாநில மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட அலாவுதீன் டெல்லி மாநிலத்தில் விற்பனை செய்யப்படும் Duty Free மதுபாட்டில்களை குறைந்து விலைக்கு வாங்கி வந்து சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இருமடங்கு விலை வைத்து சட்ட விரோதமாக விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. மேலும் இவர் குழுவாக செயல்பட்டு வெளிநாட்டு மதுபாட்டில்களை விற்பனை செய்து வந்ததும், ஏற்கனவே இக்குழுவை சேர்ந்த சுனில் மற்றும் பிரபு ஆகியோர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
அலாவுதீன் மீது மது பாட்டில்கள் விற்பனை செய்த குற்றத்திற்காக ஏற்கனவே 2 வழக்குகள் உள்ளதும் தெரியவந்தது.
கைது செய்யப்பட்ட எதிரி அலாவுதீன் விசாரணைக்குப் பின்னர் (03.10.2025) நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.
