சென்னை, சைதாப்பேட்டை, புஜங்காரா வீதி, எண்.12/19 என்ற முகவரியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 2 வது தளத்தில் ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியர் தியாகராஜன், வ/58, த/பெ.நாகராஜன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கடந்த 08.09.2025 அன்று காலை வீட்டை பூட்டிவிட்டு ஆந்திர மாநிலம் புத்தூரில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டு மாலை வீட்டிற்கு வந்து பார்த்தபோது, வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீட்டில் பீரோவில் வைத்திருந்த சுமார் 32 சவரன் தங்க நகைகள் மற்றும் சில வெள்ளிப்பொருட்கள் திருடு போயிருந்தது தெரியவந்தது.
இது குறித்து தியாகராஜன் J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவில் புகார் கொடுத்ததின்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். உதவி காவல் ஆணையர் சீனிவாசன் மேற்பார்வையில்
J-1 சைதாப்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து சம்பவயிடத்தில் கிடைத்த கண்காணிப்பு கேமரா பதிவுகளுடன் தேடுதலில் ஈடுபட்டு, இவ்வழக்கில் தொடர்புடைய 1.ஷாம்முகமது, வ/35, உத்திரப்பிரதேச மாநிலம், 2.நூர் இஸ்லாம், வ/32, உத்திரப்பிரதேச மாநிலம் ஆகிய 2 நபர்களை கைது செய்தனர். 1 இரும்பு ராடு, 1 செல்போன் மற்றும் ATM கார்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் எதிரி ஷாம் முகமது மீது உத்திரப்பிரதேச மாநிலத்தில் 6 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

மேலும் விசாரணையில் மேற்படி நபர்கள் அவர்களது நண்பர்கள் இருவருடன் சேர்ந்து உத்திரப்பிரதேச மாநிலத்திலிருந்து சென்னை வந்து சென்ட்ரலில் உள்ள தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி, சென்னையில் பல்வேறு இடங்களுக்கு டெலிவரிபாய் போல சென்று பூட்டியிருக்கும் வீடுகளை நோட்டமிட்டு, பூட்டை உடைத்து தங்க நகைகளை திருடியது தெரியவந்தது. அவ்வாறு மேற்படி தியாகராஜன் வீட்டில் 08.09.2025 அன்று திருடிய தங்க நகைகளை எதிரிகள் டெல்லியில் உள்ள தங்க கடையில் விற்பனை செய்து பணம் பெற்று பங்கு பிரித்துள்ளது தெரியவந்தது.
மேற்படி வழக்கில் தொடர்புடைய மற்ற குற்றவாளிகளையும், திருடிய தங்க நகைகளை மீட்க தனிப்படை போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கைது செய்யப்பட்ட எதிரிகள் இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.
