புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடியில் சார்பதிவாளர் அலுவலகம் இடிந்து விழும் அவலநிலை உள்ளதால் ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
கச்சேரி வீதி, கறம்பக்குடியில் 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சார்பதிவாளர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு பதிவாளர் உட்பட 10க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். இந்த அலுவலகத்தில் கறம்பக்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் முக்கிய ஆவணங்கள் பதிவு செய்வது மட்டுமின்றி பாதுகாக்கப்பட்டும் வருகின்றது.
இந்நிலையில் தினமும் பத்திரப்பதிவு, திருமண பதிவு என பதிவுத்துறை சம்பந்தமாக நாள் ஒன்றுக்கு 100க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். தற்போது அலுவலக கட்டிடமானது பழுதடைந்து ஆங்காங்கே இடிந்து விழுந்து வருகின்ற நிலையில் அங்கு பணிபுரிகின்ற ஊழியர்களும் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களும் உயிரை கையில் பிடித்துக் கொண்டு பணிகளை கவனிக்க வேண்டிய சுழல் நிலவுகிறது. மழைக்காலத்தில் இங்கு பராமரிக்கப்பட்டு வரும் ஆவணங்கள் நனைந்து வீணாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அடிப்படை வசதிகளான குடிநீர் வசதி, கழிப்பறை வசதி இல்லாமல் அரை கி.மீ தொலைவில் உள்ள பேருந்து நிலையத்தில் உள்ள கழிப்பறையை ஊழியர்கள் பயன்படுத்தி வரும் நிலையில், அலுவலகத்திற்கு வரும் முதியவர்கள், பெண்கள் என வெவ்வேறு தரப்பினர் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர். எனவே இந்த சார்பதிவாளர் அலுவலகத்தை அகற்றி, அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய சார்பதிவாளர் அலுவலகம் கட்டித்தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
40 ஊராட்சிகள் மற்றும் ஒரு தேர்வு நிலை ஊராட்சி மற்றும் நகராட்சியாக தரம் உயர்த்த அரசு அறிவித்து உள்ளது. ஒரு நாளைக்கு பொதுமக்கள் டோக்கன் முறைப்படி 50க்கும் மேற்பட்ட பத்திரப்பதிவு நடைபெறுகிறது. இதன் மூலம் கோடிக்கணக்கான ரூபாய்கள் அரசுக்கு வருமானம் கிடைக்கிறது. பத்திரப்பதிவுக்கு வரும் பொதுமக்கள் ஒரு நாள் பொழுது ஆகிறது. இதனால் அவர்களின் சுகாதார நிலை என்னாவது அரசு கவனத்தில் கொண்டு நடவடிக்கை எடுக்குமா?
