விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு கிராமத்தை சேர்ந்தவர். தந்தை முருகவன். சிறு விவசாயியாக இருக்கிறார். தாயார் முல்லைக்கொடி. எளிய குடும்பத்தில் பிறந்து வளர்ந்த பிரதாப், முதல் பட்டதாரி என்ற பெருமையை பெற்றார். அதுமட்டுமின்றி அவரது குடும்பத்தில் முதல் அரசு ஊழியர் என்பது கவனிக்கத்தக்கது. சிறுவயது முதலே ஆட்சியராக வேண்டும் என்ற கனவு கண்டார். விடாமல் அதற்கான வேலைகளையும் செய்தார். கல்லூரி பருவத்திலேயே பயிற்சியை தொடங்கினார். அண்ணா பல்கலைக்கழகத்தில் பி.டெக் கெமிக்கல் எஞ்சினியரிங் படித்தவர்.
ஆட்சியராக வேண்டும் என்ற தீராத ஆர்வம் பயிற்சியில் அதிக ஈடுபாட்டை செலுத்தியது. இதன் விளைவாக முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்று அசத்தினார். 2017 தமிழ்நாடு பேட்சில் பணியில் சேர்ந்தார். அப்போது வெளிவந்த தேர்வு முடிவுகளில் தமிழகத்திலேயே முதலிடம் பிடித்தார். 2017-18ஆம் ஆண்டுகளில் உத்தரகாண்ட் மாநிலத்தில் பயிற்சி அதிகாரியாக பணியாற்றினார். 2018-19 காலகட்டத்தில் திருவண்ணாமலை மாவட்டத்தில் துணை ஆட்சியராக பயிற்சி பெற்றார். இதையடுத்து 3 மாத காலங்கள் மத்திய அரசின் கிராமப்புற மேம்பாட்டுத் துறை துணைச் செயலாளராக பணியாற்றினார்.
2019 தர்மபுரி மாவட்டம் அரூரில் துணை ஆட்சியராக பதவி கிடைத்தது. இங்கு தான் பிரதாப் ஐஏஎஸ் அவர்களின் ஆட்சியர் பதவிக்கான அச்சாரம் போடப்பட்டது. மக்களுடன் மக்களாக பழகினார். 1,500க்கும் மேற்பட்ட மக்களுக்கு பட்டா கிடைக்க நடவடிக்கை எடுத்தார். அரூரில் இருந்த மலை கிராம மக்களுக்கு மின் இணைப்பு வழங்கினார். இதனால் தர்மபுரி மாவட்ட மக்களிடையே பெரிய அளவில் கவனம் பெற்றார். பின்னர் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறையில் கூடுதல் ஆட்சியராக பணியாற்றினார்.
ஒரே மாதத்தில் 1,000 குளங்களை வெட்டுவதற்கான ஆணையை பெற்று, அதில் வெற்றியும் கண்டார். இது கின்னஸ் சாதனை புத்தகத்தில் பிரதாப் ஐஏஎஸ் பெயரை பொறிக்க வழிவகுத்தது. இதன்மூலம் முதலமைச்சர் விருது பெற்று தமிழக அளவில் கவனம் பெறும் அதிகாரியாக மாறினார். 2022ஆம் ஆண்டு ஜூன் மாதம் கோவை மாநகராட்சி ஆணையராக பொறுப்பேற்றார். மேலும் கோவை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மேலாளராகவும் பதவி வகித்தார்.
வார்டு வார்டாக நேரில் சென்று மக்கள் குறைகளை கேட்டறிந்து தீர்வு காண முயன்றது, மாநகராட்சி வளர்ச்சி பணிகளை முடுக்கி விட்டது, புதிய திட்டங்களை விரைவாக செயல்படுத்தியது என தனது செயல்பாடுகள் மூலம் கவனம் பெற்றார். எல்லாவற்றுக்கும் மேலாக கோவை மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண நடவடிக்கை எடுத்தது பாராட்டுகளை பெற வைத்தது.
2023ஆம் ஆண்டு தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி கழகம், சிறப்பு திட்ட செயலாக்கத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றினார். 2024-25 காலகட்டத்தில் தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டத்தின் இயக்குநராக பதவி வகித்தார். இந்நிலையில் தான் கடந்த ஜனவரியில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக பிரதாப் ஐஏஎஸ் பொறுப்பேற்றார். இங்கேயும் மக்கள் பணிகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார்.
