டிட்வா சூறாவளியின் பின்னர் தொடர்ந்த கனமழை டெல்டா பகுதிகளில் மிகப்பெரிய அழிவை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை மற்றும் மதுக்கூர் சுற்றுவட்டாரங்களில் கடந்த சில ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பயிர்கள் சேதம் பதிவாகியுள்ளது. வயல்கள் அனைத்தும் நீரில் மூழ்கி, ஒரு வாரத்திற்கு முன்பு பசுமையாக இருந்த விவசாய நிலப்பரப்பு இன்று பரந்த ஏரிகளைப் போல காட்சி தருகின்றன.
பட்டுக்கோட்டை வட்டாரத்தில் உள்ள நடுவிக்கோட்டை, செம்.பாலூர், சென்டான்காடு, சூரப்பள்ளம் போன்ற கிராமங்களில் 5,700 ஹெக்டேர் வேளாண் நிலங்கள் பாதிப்படைந்துள்ளன. இதில் சுமார் 75 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட சாம்பா–தாலடி நெற்பயிர்கள் முழுமையாக அழிந்த நிலையில் உள்ளன. பல நாட்களாக நீர் இறங்காததால், இப்பயிர்கள் எந்தவித பயனுக்கும் பயன்படுத்த முடியாத அளவுக்கு சிதைந்துவிட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர். தானியத் தொகுப்புகள் கரைந்து, நாற்றுப்புதர்கள் விரிந்தோட, பலர் தங்கள் ஆண்டுதோறும் கிடைக்கும் நம்பிக்கையையே இழந்துள்ளனர்.


மதுக்கூர் சுற்றுவட்டத்தில் நிலை மேலும் கவலைக்குரியதாக உள்ளது. இங்கு உள்ள 4,171 ஹெக்டேர் நிலங்களில் சுமார் 1,200 ஹெக்டேர் பயிர்கள் முழுமையாக சேதமடைந்துவிட்டன. கடற்கரை அருகாமையில் அமைந்துள்ள இந்த belt தொடர்பான பகுதிகளில், இன்னும் நீர் சேர்க்கை அதிகரித்தால் மேலும் நாசம் ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது. வயல்கள் நீர்நிலையாக காட்சியளிப்பதால், இயல்புநிலை திரும்ப பல வாரங்கள் ஆகும் என அதிகாரிகள் மதிப்பிடுகின்றனர்.
சேத மதிப்பீட்டுப் பணிகளில் வட்டாட்சியர் தர்மேந்திரா, மண்டல துணை வட்டாட்சியர் உமர், உதவி இயக்குநர்கள் அப்சரா மற்றும் திலகவதி ஆகியோர் தன்னலமின்றி ஈடுபட்டு வருகின்றனர். SIR பணி சுமையிருந்து பம்பரம் போல் சுற்றி வருகிறார் வட்டாட்சியர் தர்மேந்திரா. நீர் நிறைந்த பண்ணை வழித்தடங்கள், அணுக முடியாத நிலப்பரப்புகள் உள்ளிட்ட பல சவால்களை எதிர்கொள்ளும் நிலையிலும், அவர்கள் நேரடி ஆய்வுகளை மேற்கொண்டு விவசாயிகளின் பிரச்சினைகளை தொடர்ந்து அரசு கவனத்திற்கு கொண்டு சென்று வருகின்றனர்.
விவசாயிகள் வலியுறுத்தும் முக்கிய கோரிக்கை, 33% சேதத்திற்கு மேல் ஏற்பட்டவர்களுக்கு மட்டும் அல்லாமல், குறைவாக சேதம் அடைந்தவர்களுக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்பதே. “இழப்பு என்பது எவ்வளவு இருந்தாலும் அது இழப்பே; குறைந்தபட்சம் அடிப்படை நிவாரணத் தொகை எல்லா பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் வழங்கப்பட வேண்டும்” என்று அவர்கள் வேண்டுகின்றனர்.
பெரும் இடரின் நடுவே நம்பிக்கையைத் தாங்கி நிற்கும் இந்த டெல்டா மக்கள், அரசு உரிய நடவடிக்கை எடுத்து விரைவான நிவாரணம் வழங்கும் என எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
