வருவாய்த்துறையால் பாதிக்கப்பட்ட சாமானிய மக்களின் குற்றச்சாட்டு பொதுவாக சொத்து ஆவணங்கள் பத்திரப்பதிவு துறையால் பதிவு செய்யப்பட்டாலும் அதன் உண்மைத் தன்மை மற்றும் உரிமை பராமரிப்பு வருவாய்த்துறை வசம் உள்ளது. விலைக்கு வாங்கப்பட்ட சொத்து மற்றும் பூர்விக சொத்துக்களுக்கான ஆவணங்கள் வாரிசு அடிப்படையில் பட்டா மாறுதல், அ.பதிவேடு, சிட்டா அடங்கல் மற்றும் புல வரைபடம் என பலதரப்பட்ட ஆவணங்கள் கிராம நிர்வாக அலுவலகங்கள் மூலம் பராமரிக்கப்படுகிறது. இதில் தவறுதலாகவோ அல்லது ஏதேனும் எதிர்பார்த்தது முறைகேடாகவோ சம்பந்தப்பட்ட அலுவலரால் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட்டிருந்தால் சம்பந்தப்பட்ட நிலஉரிமையாளர் ஏதேனும் சான்றிதழ் தேவைக்காக கிராம நிர்வாக அலுவலகத்தை அணுகும்போது இந்த சொத்து உங்களது இல்லை. அப்படி உங்களது என்றால் மூல ஆவணங்களை கொண்டு வாருங்கள் என கூறுகின்றனர். ஆவணங்களை தேடி அதே கிராம நிர்வாக அலுவலகம் தொடங்கி வட்ட அலுவலகம் சார் ஆட்சியர் அலுவலகம் மற்றும் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வரை செல்ல வேண்டி உள்ளது.
சாதாரண கூலி வேலை செய்யும் ஒருவரால் மாத கணக்கில் அலைய முடியுமா? அலுவலர்கள் செய்த தவறினால் எங்களுக்கு கூலி இழப்பு, போக்குவரத்து செலவு, இடைத்தரகர் செலவு மற்றும் கடுமையான மன உளைச்சல் என சாமானியன் பாதிக்கப்படுகிறான். எந்த அலுவலரோ செய்த தவறுக்கு (அ) முறைகேட்டிற்கு நாங்கள் ஏன் பாதிக்கப்பட வேண்டும். அய்யா நாங்கள் சட்டம் பேசவில்லை. அப்படியே எங்கள் அடிப்படை உரிமையை சட்டப்படி கேட்டாலும் மேலும் பாதிக்கப்படுவோம். நாங்கள் கைகட்டி உங்களிடம் கேட்பது எந்த நிலை அலுவலரால் ஆவணங்களில் தவறான பதிவு ஏற்பட்டதோ அந்த நிலை அலுவலர் தான் தவறை நிவர்த்தி செய்து தீர்வு வழங்க வேண்டும். அதைவிடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று RSR எனப்படும் மூல ஆவணங்கள் கொண்டுவா என ஏன் எங்களை அலையவிட வேண்டும். இந்த வேதனை ஒருபுறம் என்றால் ஒரு கிராமத்தில் பணிபுரியும் விஏஓ என்பவர் பெரும்பாலும் வெளியூரை சேர்ந்தவராக இருப்பார். கிராம உதவியாளர் உள்ளூரை சேர்ந்தவராக இருப்பார். அப்படி இருக்கையில் கிராம உதவியாளர் நில உரிமையாளர் மீது உள்ள தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை மனதில் வைத்து விஏஓவை தவறாக வழிநடத்தி செல்வதும் ஒரு காரணம். மேலும் அந்த அலுவலகத்திலோ அல்லது அந்த துறையிலோ பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்கள் அலுவலக ஆவணங்களில் திருத்தம் செய்ய பதவியில் இருக்கும் அலுவலர்கள் அனுமதிக்க கூடாது. கிராம நிர்வாக அலுவலகங்களில் உள்ள ஆவணங்களை திருத்த அதிகாரம் உள்ள அதிகாரியாக இருந்தாலும் அவர் செய்யும் திருத்தங்கள் சரியானதுதானா என விஏஓ சரிபார்க்க வேண்டும். குறைந்தபட்சம் நில உரிமம் சம்பந்தமான அடிப்படை மற்றும் அவசியமான மற்றும் விஏஓவின் கடமைகள் குறித்த தகவல்களை பொதுமக்கள் அறியும்வண்ணம் தகவல்பலகையில் வைக்க வேண்டும். இது உங்கள் அலட்சியத்தாலோ அல்லது எதிர்பார்ப்பினாலோ பாதிக்கப்பட்ட சாமானியனின் வேண்டுகோள் மட்டும்தான். நீங்கள் வழங்கும் சான்றிதழ்கள் தான் நீதிமன்றம் வரை பேசுகிறது. எனவே உங்களது பொறுப்பை உணர்ந்து செயல்படுங்கள். வருவாய்த்துறை அலுவலர் செய்யும் சிறுதவறு கூட ஒரு சாமானியனை வாழ்நாள் முழுதும் பாதிக்கச் செய்து அவர் வாரிசு காலத்திலும் தீர்வு கிடைக்காமல் அல்லல்பட வேண்டி உள்ளது.
உதாரணத்திற்கு சோ.மாரி என்பவருக்கு சொந்தமான நிலத்தின் ஆவணங்கள் காலப்போக்கில் சோமாரி என ஆகிவிடுகிறது. சோ.மாரி ஏதேனும் தேவைக்காக கிராம நிர்வாக அலுவலரை அணுகும்பொழுது உங்கள் பெயரில் நிலம் இல்லை. மூல ஆவணங்கள் இருந்தால் எடுத்து வாருங்கள் என்கிறார்கள். இதற்கு அவர் வருடக்கணக்கில் அலைய வேண்டி உள்ளது. இதில் சோ வுக்கும், மாரிக்கும் இடையில் புள்ளி வைக்காமல் விட்டது யார் தவறு?.
முறையாக பட்டா மாறுதல் இத்தனை நாட்களுக்குள் வழங்க வேண்டும் என விதி இருந்தாலும் பல மாதங்கள் ஆனாலும் பட்டா மாறுதல் கிடைக்கப்படுவது இல்லை.
அதிக அளவில் லஞ்ச முறைகேடுகள் நடப்பது இதனால்தான். பிர்கா எனப்படும் வருவாய் கிராமங்கள் வாரியாக உயர் அதிகாரிகள் முறையாக ஆய்வு நடத்தினால் பல முறைகேடுகள் வெளிச்சத்துக்கு வரும். இதுபோன்ற முறைகேடுகள் பெரும்பாலும் பாமரர்கள் அதிகம் உள்ள தஞ்சாவூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களை சேர்ந்த கிராமப்புறங்களில் தான் நடக்கிறது. அய்யா நாங்கள் சட்டம் பேசவில்லை. இது பாதிக்கப்பட்ட பாமரனின் குரல் மட்டுமே
மேலும் ஒரு நபர் தனக்கு சொந்தமான நிலத்தில் ஒரு பகுதியை விற்பனை செய்யும் பொழுது பட்டா மாறுதல் நிலத்தை வாங்கியவர் செய்துகொள்ள வேண்டும். அப்படி செய்யாமல் கிராம நிர்வாக அலுவலகத்தில் பத்திரபதிவை காட்டியவுடன் கிராம நிர்வாக அலுவலர் கூட்டு பட்டா என்று நிலத்தை விற்றவர் பெயரால் உள்ள ஆவணத்தில் வாங்கியவர் பெயரையும் சேர்த்து விடுகிறார்கள். இதனால் நிலத்தின் சொந்தக்காரர் மீதம் உள்ள அவரது நிலத்திற்கு தனியாக அடங்கல் மற்றும் அ.பதிவேடு போன்ற ஆவணங்கள் கிடைக்கப் பெறாமல் பல வகையிலும் அவதிக்கு உள்ளாக நேரிடுகிறது.
கவனிக்குமா வருவாய்த்துறை? கண்டுகொள்வாரா மாவட்ட ஆட்சியர்கள்..