புதிய ஓய்வூதிய நிதியை தவறாகக் கையாள்வதால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்படுவதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தெரியவந்துள்ளது.
மன்மோகன்சிங் பிரதமராக இருந்தபோது, 2003 முதல் அரசு பணியில் சேரும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு புதிய பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. இத்திட்டத்தில் அரசு ஊழியர்களிடம் பிடித்தம் செய்த தொகை ரூ.36 ஆயிரம் கோடி உள்ளது. புதிய ஓய்வூதிய திட்டத்தை நடைமுறைப்படுத்த டில்லியில் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையத்தில் மாநில அரசுகள் புரிந்துணர்வு ஒப்பந்தம் (எம்.ஓ.யு.,) செய்ய வேண்டும்.
மேற்கு வங்கம், தமிழகம் தவிர அனைத்து மாநிலங்களும் இந்த ஆணையத்தில் ஒப்பந்தம் (எம்.ஓ.யு.,) செய்துள்ளன. புதிய ஓய்வூதிய திட்டத்தில் பிடித்தம் செய்த ரூ.36 ஆயிரம் கோடியை தமிழக அரசு மத்திய ரிசர்வ் வங்கியின் கருவூல பட்டியலில் 91 நாள் முதலீடாக செய்துள்ளது. அத்தொகை முதிர்வடைந்தபின் பெற்று எம்.ஓ.யு., செய்துள்ள ஆணையத்தில் வேண்டும். அவ்வாறு செய்யாமல், தமிழக அரசு மீண்டும் மீண்டும் ரிசர்வ் வங்கியின் கருவூல பட்டியலிலேயே மறுமுதலீடு செய்கிறது.
இந்தத் தொகைக்கு தமிழக அரசு 7.1 சதவீதம் வட்டியாக கணக்கிட்டு ஊழியர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கிறது. இத்தொகையை ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று ஆணையத்திற்கு வழங்காததால், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.1500 கோடி இழப்பு ஏற்படுகிறது. என தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் தெரியவருகிறது. இத்தகவலை திண்டுக்கல் பிரெடரிக் ஏங்கல்ஸ் என்பவர் தமிழக அரசின் நிதித் துறையிடம், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பித்து பெற்றுள்ளார்.