சாதனைக்கு வயதோ, ஊனமோ தடையில்லை என்பதை மெய்ப்பிக்கும் வகையில் சிவகங்கை மாவட்டம், பிள்ளையார்பட்டி அருகே பார்வை யில்லாத முதியவர் (73) தச்சு வேலையில் அசத்துகிறார்.
பிள்ளையார்பட்டி அருகே மருதங்குடியைச் சேர்ந்தவர் பெருமாள். இவரது குடும்பம் பரம்பரையாக தச்சு வேலை செய்து வருகிறது. திருமணமான சில ஆண்டுகளிலேயே அவருக்குப் பார்வை பறிபோனது. மூளை நரம்பு பிரச்சினையால் பார்வையை சரி செய்ய முடியாது என மருத்துவர்கள் கைவிரித்து விட்டனர்.
இதனால் சோர்ந்துவிடாத அவர், மனைவி உதவியோடு தச்சுத் தொழிலை கைவிடாமல் தொடர்ந்தார். இன்றும் தள்ளாத வயதிலும் தச்சு வேலை செய்து வருகிறார். அவரது தொழில் நேர்த்தியால், பலரும் விரும்பி அவருக்கு வேலை கொடுத்து வருகின்றனர். கதவு, ஜன்னல் வேலைகளோடு கலப்பை, பறம்பு, மண்வெட்டி கணை, இடியாப்பக் கட்டை, தயிர் மத்து, கலைப்பொருட்கள் போன்ற நுணுக்கமான பொருட்களையும் தரமாகச் செய்து கொடுக்கிறார்.
இதுகுறித்து பெருமாள் கூறியதாவது: ஏழாம் வகுப்பு முடித்ததும் குடும்பச் சூழ்நிலையால் தச்சுத் தொழிலுக்கு வந்துவிட்டேன். அந்தக் காலத்தில் சைக்கிளில் 100 கி.மீ. வரை சென்று வேலை பார்ப்பேன். திடீரென ஒருநாள் பார்வை தெரியாமல் போனது. அதை சரிசெய்ய முடியாது என மருத்துவர்கள் கூறினாலும் நான் வீட்டில் முடங்கிவிடவில்லை.
முதலில் வேலை செய்வதற்குச் சிரமமாகத் தான் இருந்தது. விடாமுயற்சியால் எளிதாக வேலை செய்ய கற்றுக்கொண்டேன். தற்போது நானும், எனது மகனும் தச்சு வேலை செய்கிறோம். எனக்கு கணக்கு நன்றாக தெரியும் என்பதால் ஒவ்வொரு பொருளையும் நேர்த்தியாக செய்ய முடியும். இதைப் பார்த்து ஒரு பொறியாளர் போல் வேலை செய்வதாக நண்பர்கள் கூறுவர் என்றார்.