தமிழகத்தில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டுள்ளதால் ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தலாம் என்று மாவட்ட கலெக்டர்கள் ஆலோசனை கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவலை தடுக்க கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் சுமார் 10 மாதங்களாக கடைபிடிக்கப்பட்டு வரும் நிலையில் கொரோனா தொற்று பரவலை தடுக்க ஊரடங்கை நீட்டிக்கலாமா? புதிய தளர்வுகள் என்னென்ன அறிவிக்கலாம்? என்பது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி சென்னை தலைமை செயலகத்தில் இருந்தபடி அனைத்து மாவட்ட கலெக்டர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் ஆலோசனை நடத்தினார்.
இந்த கூட்டத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், தலைமை செயலாளர் சண்முகம், உள்துறை செயலாளர் பிரபாகர், டிஜிபி திரிபாதி, மக்கள் நல்வாழ்வு துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது: மாவட்ட ஆட்சி தலைவர்கள், அரசு அவ்வப்போது அறிவிக்கின்ற ஆலோசனைகளை தங்கள் மாவட்டங்களில் பின்பற்றி நடந்த காரணத்தால் கொரோனா வைரஸ் பரவல் பெரும்பாலான மாவட்டங்களில் மிக, மிக குறைந்துள்ளது. கல்லூரிகள், பள்ளிகள் திறக்கப்படுவதால் மாவட்ட நிர்வாகமும், கல்வி துறையும் தொடர்ந்து கண்காணித்து கொரோனா வைரஸ் தொற்று ஏற்படாவண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்வதுடன், விழிப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டும்.
ஒவ்வொரு திங்கட்கிழமை அன்றும் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடத்தப்பட்டு வருவதை, இனி அரசு அறிவித்த வழிமுறைகளை பின்பற்றி மாவட்ட ஆட்சி தலைவர்கள் உரிய பாதுகாப்புடன் தொடரலாம். இவ்வாறு அவர் பேசினார்.
பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் நிவாரணம்
நிவர் மற்றும் புரெவி புயல்களுக்கு பிறகு பெய்த தொடர் மழையின் காரணமாக, அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் மற்றும் சோளம், மக்காச் சோளம், உளுந்து போன்ற மானாவாரி பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுவிட்டது. ஆகவே, பாதிக்கப்பட்ட அனைத்து விவசாயிகளுக்கும் தமிழக அரசு இழப்பீட்டு தொகை தர தயாராக உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், வேளாண்மை துறை அதிகாரிகள், கவனமாக மானாவாரி பயிர் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், நெற்பயிர் விவசாயிகள் பாதிக்கப்பட்டிருந்தாலும், கணக்கீடு எடுத்து அரசுக்கு சமர்ப்பிக்க வேண்டும். டெல்டா மாவட்டம் மட்டுமல்ல, பல்வேறு மாவட்டங்களிலும் அறுவடைக்குத் தயாராகயிருந்த நெற்பயிர்கள் கனமழையின் காரணமாக தண்ணீரில் மூழ்கி நெற்கள் முளைத்து விட்டதால், விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டார்கள்.
அப்படி பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தமிழக அரசால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே, நமது அதிகாரிகள் முழு கவனம் செலுத்தி, பாதிக்கப்பட்ட விவசாயிகளை கண்டறிந்து உடனடியாக அரசுக்கு அது குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று முதல்வர் எடப்பாடி கூறினார்.