கடந்த டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பெய்த கனமழையின் காரணமாக தஞ்சை மாவட்டம் ஒட்டங்காடு ஊராட்சி பகுதிகளில் தேங்கிய மழைநீர் சரியான வடிகால் வசதி இல்லாத காரணத்தினால் குடியிருப்பு பகுதிகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தி உள்ளது. 10க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்துள்ளன. மழைவிட்டு மூன்று நாட்கள் ஆகியும் தண்ணீர் வடியாததால் ஒட்டங்காடு ஏபிஜே அப்துல்கலாம் கிராம வளர்ச்சிக்குழு இளைஞர்களின் அழைப்பினை ஏற்று பேராவூரணி கைபா தன்னார்வ அமைப்பு மின்மோட்டார்கள் கொண்டு மழை நீரை வெளியேற்றி கிராம மக்களுக்கு பெரிதும் உதவினார்கள். இவர்களது பணி மிகுந்த பாராட்டுக்குரியது. கிராமமக்கள் இவர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளனர். நாமும் பாராட்டுவோம்.
இந்த இக்கட்டான நிலையிலும் பாதிக்கப்பட்ட மக்கள் ஒட்டங்காடு ஊராட்சி தலைவரிடம் முறையிட்டபோது உங்களுக்கு நிர்வாகம் தெரியுமா? சட்டம் தெரியுமா? என தனக்கே உரிய அகந்தையுடன் பேசியுள்ளார். சட்டத்தையும், நிர்வாகத்தையும் தெரிந்து கொள்ள மக்கள் இவரிடம் செல்லவில்லை. தலைவர் பதவிக்கு உரிய கண்ணியத்தையும் மறந்து தடித்த வார்த்தைகளை பயன்படுத்தி பேசியுள்ளார். இவரின் செயல்பாடற்ற தன்மையால் இந்த கிராமத்தின் வளர்ச்சி பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை யாரிடம் தெரிவிப்பது என வழிதெரியாமல் விழி பிதுங்கி நிற்கிறார்கள். அரசால் அறிவிக்கப்பட்ட மினி கிளினிக்கை கூட இவரால் இந்த கிராமத்திற்கு கொண்டுவர முடியாமல் அரசுக்கு நன்றி தெரிவித்து பேனர் மட்டும் வைத்துள்ளார். தலைவர் பதவிக்கு உரிய கவுரவத்தையும், கண்ணியத்தையும், தனது கடமையையும் உணர்ந்து குறைந்தபட்சம் கிராமத்தின் அடிப்படை வசதிகளையாவது நிறைவேற்றி தரவேண்டும்.
பேராவூரணி ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் இந்த ஊராட்சியின் மீது தனி கவனம் செலுத்தி குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது. நாமும் தஞ்சை மாவட்ட ஆட்சியரிடம் இதே கோரிக்கையை வலியுறுத்துகிறோம்.