திருப்பூர் மாநகரம் – திரு.R.இராமசாமி, மாவட்ட பதிவாளர் அவர்கள் திருப்பூர் மாநகரக் காவல் ஆணையர் திரு.க.கார்த்திகேயன் அவர்களிடம் புகார் மனு ஒன்றை அளித்தார்.
அதில், 1.திருப்பூர் இணை சார்பதிவாளர் எண்.1, 2.திருப்பூர் இணை சார்பதிவாளர் எண்.2, 3.தொட்டிபாளையம் சார்பதிவாளர் மற்றும் 4.நல்லூர் சார்பதிவாளர் அலுவலகத்திலிருந்து அரசுக்கு செலுத்த வேண்டிய பத்திரப்பதிவுத் தொகையை கையாடல் செய்ததாக அந்தந்த சார்பதிவாளர்கள் தன்னிடம் புகார் அளித்துள்ளதாகவும் அந்த வகையில் மேற்படி சார்பதிவாளர் அலுவலகங்களில் 47 பத்திரப்பதிவிற்காக பொதுமக்கள் அரசிற்கு இணைய வழியில் கட்டிய பணம் மொத்தம் ரூ.68,93,432/-ஐ சார்பதிவாளர் அலுவலகங்களில் வேலை செய்யும் அலுவலர்கள், தனியார் ஒப்பந்த கணினி அலுவலர்கள், பத்திர எழுத்தர்கள் ஆகியோர்கள் கூட்டு சதி செய்து கையாடல் செய்திருப்பதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறும் கோரியிருந்தார்.
திருப்பூர் மாநகர காவல் ஆணையர் திரு.க.கார்த்திகேயன்- இ.கா.ப மற்றும் காவல் துணை ஆணையர் சட்டம் & ஒழுங்கு திரு.K.சுரேஷ்குமார் அவர்களின் உத்திரவுப்படி அந்தப்புகாரின் பேரில் 409, 120(B), 468, 471, 477(A) IPC 66(c) of IT Act 2000 ஆகிய சட்டப்பிரிவுகளின் படி எதிரிகளின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, மத்திய குற்றப்பிரிவு காவல் உதவி ஆணையர் க.பாலமுருகன் அவர்களின் தலைமையில் காவல் ஆய்வாளர் ப.சொர்ணவள்ளி, உதவி ஆய்வாளர் வே.குணசேகரன், உதவி ஆய்வளார் ப.செல்வராஜீ, தலைமை காவலர் செ.வசந்தகுமார், தலைமை காவலர் கௌரிநாதன், தலைமை காவலர் வினோ ஆனந்தன், இரண்டாம் நிலை காவலர் ஜெ.சரவணக்குமார் மற்றும் ஆயுதப்படை காவலர் ச.கருணாசாகர் ஆகியோர்களை கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படையினர் சார் பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு நடைமுறைகளை பார்வையிட்டும், பதிவு செய்த பொதுமக்கள், பத்திர எழுத்தர்கள், கணினி அலுவலர்கள் ஆகியோர்களை விசாரணை செய்தும், வங்கி கணக்குகளின் ஆவணங்களை திரட்டியும் முதற்கட்ட விசாரணை செய்தார்கள். விசாரணையில் இணை சார்பதிவாளர் எண்.1 அலுவலகத்தில் உதவியாளராக வேலை செய்யும் சங்கர் மற்றும் VB Online Typing office நடத்திவரும் ஜெய்சங்கர் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்தனர்.
கைதான சங்கர் என்பவர் கடந்த 2012-ம் வருடம் TNPSC Group-2தேர்வில் தேர்ச்சி பெற்றவர். இவர் கையாடல் செய்த பணத்தில் தனது பெற்றோர்கள் பெயரில் ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் ஒரு அசையா சொத்து வாங்கியுள்ளார். அந்த பத்திரப்பதிவிற்கான கட்டணம் ரூ.39,300/-ஐயும் மற்றொரு நபர் பத்திரப்பதிவு செய்ய அரசுக்கு செலுத்திய கட்டணத்தை சட்ட விரோதமாக ரத்து செய்து அந்த பணத்தின் மூலம் தன் பெற்றோர் பெயரில் பதிவு செய்துள்ளதையும் ஒப்புக்கொண்டுள்ளார்.
VB Online Typing office சென்டர் நடத்தி வரும் ஜெய்சங்கர் என்பவர் பொதுமக்கள் முறையாக செலுத்திய தொகைகளுக்கு பத்திரப்பதிவு செய்து கொடுத்தும், அதே தொகையை சார்பதிவாளர் அலுவலக அலுவலர்கள் மூலம் இரத்து செய்தும் அந்த 15 இலக்க REG குறியீட்டு எண்ணை மற்றொரு நபருக்கு பத்திரப்பதிவிற்கு பயன்படுத்தி பதிவு செய்து கொடுத்துள்ளார். இரண்டாவது நபர் பத்திரப்பதிவிற்காக அரசுக்கு கொடுக்கும் பணத்தை ரொக்கமாக பெற்று அதை பத்திரப்பதிவு அலுவலக அலுவலர்கள், கணினி அலுவலர்கள் ஆகியோர்கள் பங்கு போட்டுக்கொண்டதாக ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும் இந்த மோசடியில் ஈடுபட்டுள்ள மற்ற நபர்கள் குறித்தும் அவர்கள் சம்மந்தமான விவரங்களை தனிப்படையினர் விசாரணை செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கைதானவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டனர்.