நாகையில் ஓய்வு பெற்ற நடத்துநரிடம் வருமான வரித்துறை அதிகாரிகளை போல நடித்து பண மோசடி செய்த வழக்கில் ஒரே குடும்பத்தை சேர்ந்த எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாகை அடுத்துள்ள பால்பண்ணை சேரி பகுதியில் ஓய்வு பெற்ற நடத்துநர் சுப்ரமணியன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அதே பகுதியில் உள்ள விநாயகர் கோயிலை பராமரித்து வந்துள்ளார்.
அப்போது தினமும் கோவிலுக்கு வரும் நாகை ஆண்டோ சிட்டி பகுதியைச் சேர்ந்த ராமகிருஷ்ணன் மற்றும் அவரது மகள் ராஜேஸ்வரி ஆகியோர் பேசி பழக்கம் ஆகியுள்ளனர். சுப்ரமணியனிடம் பணம் இருப்பதை தெரிந்து கொண்ட ராஜேஸ்வரி குடும்பத்தினர் திட்டமிட்டுள்ளார்.
இதனால் ராஜேஸ்வரி, தன்னுடைய பூர்வீக சொத்தை பல கோடி ரூபாய்க்கு விற்று இருப்பதாகவும், வருமான வரித்துறை கைவசத்தில் பல கோடி இருப்பதாகவும் அதனை மீட்க 45 லட்சம் தேவை படுவதாகவும் கூறியுள்ளார். மனிதாபிமானத்தில் உதவி செய்ய முடிவெடுத்த சுப்ரமணியன் 45 லட்சம் ரூபாய் ரொக்கம் கொடுத்துள்ளார். அதனை வாங்கி கொண்ட ராஜேஸ்வரி மேலும் 20 லட்சம் பணம் கேட்டுள்ளார். இதனை சுப்ரமணியன் நம்பும் வகையில் வருமான வரித்துறை அதிகாரிகள் போல தனது நண்பர்கள் ராகுல் உள்ளிட்டவரை வீட்டிற்கு அழைத்து வந்தும் ஏமாற்றியுள்ளார்.
மேலும் வருமான வரித்துறை சீல், அதிகாரிகள் கையெழுத்து என போலியான ஆவணங்களை காட்டி ஏமாற்றி 60 பவுன் நகைகளையும் வாங்கி சென்றுள்ளார். பல மாதங்கள் ஆகியும் பணம் வராததால், சந்தேகம் அடைந்த சுப்ரமணியன் நாகை எஸ்.பி. ஓம் பிரகாஷ் மீனாவை சந்தித்து புகார் மனு அளித்தார்.
அதனை தொடர்ந்து போலிசார் நடத்திய விசாரணையில் வருமானவரித்துறை அதிகாரிகளை போல நடித்து 45 லட்சம் ரூபாய் பணம் மற்றும் 60 பவுன் நகைகளை அபகரித்த எட்டு பேர் மீது நாகை குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். பின்னர் வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாக இருக்கும் ராஜேஸ்வரி, ராமகிருஷ்ணன், சாந்தா, நந்தினி, முருகன், வெங்கட பாலாஜி, ராகுல், ராமு, ராஜா ஆகியோரை போலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.