K-10 கோயம்பேடு காவல் நிலைய போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட சசிகுமார் என்பவருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் அபராதம் மகிளா நீதிமன்றத்தில் தீர்ப்பு பெற்றுத் தந்த K-10 கோயம்பேடு காவல் குழுவினரை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்.
சென்னை, கோயம்பேட்டைச் சேர்ந்த 16 வயது சிறுமி கருவுற்றிருந்த நிலையில், 16.10.2017 அன்று ஆசிட் குடித்து தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், 7 மாத கரு இறந்து பிறந்துள்ளதாகவும், கிடைத்த தகவலின்பேரில், W-8 திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி பாலியல் பலாத்காரம் செய்தும், அதன்பின் கருவுற்ற சிறுமியை திருமணம் செய்து கொள்ள மறுத்த விழுப்புரம் மாவட்டம் சசிகுமார் என்பவரை 17.10.2017 அன்று போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, கைது செய்து, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார். இவ்வழக்கு K-10 கோயம்பேடு காவல் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்பட்டு, வழக்கு விசாரணை கண்காணிக்கப்பட்டு வந்த நிலையில், மேற்படி சிறுமி 02.10.2018 அன்று உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார்.
இவ்வழக்கு தொடர்பாக, உயர்நீதிமன்ற வளாகத்திலுள்ள மகிளா நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் முறையாக சாட்சிகளை ஆஜர்படுத்திவந்த நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகளின் படி வழக்கு விசாரணை முடிவடைந்து 20.03.2021 அன்று குற்றம் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளி சசிகுமாருக்கு ஆயுள்தண்டனை மற்றும் ரூ.50,000/- அபராதமும் விதித்து, கனம் நீதிபதி அவர்கள் தீர்ப்பு வழங்கினார்.
மேற்படி வழக்கில் சிறப்பாக செயல்பட்ட காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து பாராட்டி, வெகுமதி மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கினார்.
