நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், சென்னை மாவட்டத்தில் தான், மாநிலத்திலேயே மிகக்குறைவாக ஓட்டுகள் பதிவாகியுள்ளன. சென்னையில், 16.6 லட்சம் பேர், ஓட்டு போடவில்லை. அதற்கு காரணம், கொரோனா பயமா அல்லது வேட்பாளர்கள் மீதான வெறுப்பா என்பது தெரியவில்லை.
சென்னை மாவட்டத்தில், 16 சட்டசபை தொகுதிகள் உள்ளன. இதில், 40 லட்சத்து, 57 ஆயிரத்து, 61 வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்திலேயே, அதிக வசதிகள் உடையதும், எழுத்தறிவு பெற்ற வாக்காளர்கள் அதிகம் வசிக்கும் மாவட்டமாகவும், சென்னை உள்ளது. மேலும், அதிக வாக்காளர்கள் உடைய மாவட்டமாகவும் உள்ளது. ஆனால், ஒவ்வொரு தேர்தலிலும், மாநிலத்திலேயே மிகக்குறைந்த ஓட்டுப் பதிவாவது, இங்கு தான். அதன்படி, தற்போது நடந்து முடிந்துள்ள சட்டசபை தேர்தலிலும், 59.06 சதவீத ஓட்டுகள் மட்டுமே பதிவாகியுள்ளன.
வசதி, வேலை வாய்ப்பு, ஆடம்பரம், அடிப்படை கட்டமைப்பு போன்ற பலவற்றிலும், முதல் மாவட்டமாக உள்ள சென்னை, ஓட்டுப்பதிவில் மட்டும், கடைசி இடத்திலேயே உள்ளது. நேற்று நடந்த ஓட்டுப்பதிவில், 23 லட்சத்து, 96 ஆயிரத்து, 961 பேர் மட்டுமே ஓட்டு போட்டுள்ளனர்.
அதிகபட்சமாக, ஆர்.கே.நகர் தொகுதியில், 66.57 சதவீதம் பேரும், குறைந்தபட்சமாக, வில்லிவாக்கம் தொகுதியில், 55.52 சதவீதம் பேரும் ஓட்டுப்பதிவு செய்துள்ளனர். இதில், 16 லட்சத்து, 60 ஆயிரத்து, 100 பேர், தங்கள் ஜனநாயக கடமையை செய்ய தவறி விட்டனர்.இதற்கு, பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன. குறிப்பாக, ஒரு தொகுதியில் இருந்து, மற்றொரு தொகுதிக்கு இடம்பெயர்ந்த பலர் ஓட்டளிக்க முன்வரவில்லை.
அதேபோல, சொந்த ஊரிலும், சென்னையிலும், இரண்டு ஓட்டு வைத்திருப்போர், சொந்த ஊருக்கு சென்றதால், சென்னை மாவட்டத்தில், ஓட்டுகள் குறைந்துள்ளன.ஆனாலும், மிக முக்கியமாக, பணக்காரர்கள், ஐ.டி., போன்ற நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள், அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போர் என, 30 சதவீதம் பேர், தங்களது ஓட்டுகளை பதிவு செய்யவில்லை.அதற்கு காரணம், கொரோனா பயம் என, கூறப்படுகிறது.
ஓட்டுச் சாவடிகளில், கொரோனா பரவலை தடுக்க, சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தபோதிலும், வாக்காளர்கள் மத்தியில் அச்சம் நீங்கவில்லை.அதேபோல, பல வாக்காளர்களின் பெயர்கள், அடையாள அட்டை மற்றும் ‘பூத் சிலிப்’பில் மாறுபட்டு இருந்தன. அவர்களாலும் ஓட்டு போட முடியவில்லை. பல தொகுதிகளில், வேட்பாளர்கள் மீதான வெறுப்பு காரணமாகவும், ஓட்டளிக்க மக்கள் முன்வரவில்லை என, தெரிகிறது.
இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: வேலை நிமித்தமாக, சென்னையில் இருக்கும் பலர், பல மணி நேரம் பயணித்து, சொந்த ஊர்களுக்கு சென்று ஓட்டளித்தனர்.ஆனால், வீட்டின் மிக அருகாமையில் இருக்கும் ஓட்டுச்சாவடிகளில் செல்வதற்கு தயக்கம் காட்டி, சென்னைவாசிகள் பலர், தங்களது ஓட்டுகளை பதிவு செய்யவில்லை என்பது வேதனை தருகிறது. எனவே, சென்னையில் ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க, கெடுபிடிகள் அவசியம்.
குறிப்பாக, தொடர்ந்து மூன்று தேர்தல்களில் ஓட்டளிக்காதவர்களை கணக்கெடுத்து, வாக்காளர் பட்டியலில் இருந்து, அவர்களின் பெயர் நீக்கம் செய்யப்படும் என, தேர்தல் கமிஷன் எச்சரிக்க வேண்டும். வரும் காலங்களில், கெடுபிடிகள் அதிகரித்தால் மட்டுமே, வரும் தேர்தல்களிலாவது, ஓட்டு சதவீதத்தை அதிகரிக்க முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.