மக்கள் தம்மை சிங்கம், புலி போன்ற விலங்குகளிடம் இருந்து காத்துக்கொள்ளக் கையாண்ட முறையே சிலம்பம் எனப்படும் கலையாக வளர்ந்துள்ளது என்பர். தமது கைகளில் எப்போதும் இருக்கக் கூடிய சிறிய ஆயுதங்களான கம்பு (தடி), சிறு கத்தி, கோடரி போன்ற ஆயுதங்களைப் பயன்படுத்தி விலங்குகளிடம் இருந்து தற்காத்துக் கொள்ள இந்தக் கலையைப்பயன்படுதினர்.
தமிழர்கள் ஆயுதம் ஏந்திப் போராட ஆரம்பித்த காலத்தில் முதலில் எடுத்தது கம்பு எனப்படும் ஆயுதமே ஆகும். இதுவே பின்னர் சிலம்புக் கலையாக வளர்ச்சி பெற்றது. ஆதிகாலத்தில் மனிதர்கள் சண்டை செய்ய ஈட்டி, கத்தி, வேல், வாள், கம்பு போன்ற பலவிதமான ஆயுதங்களைப் பயன்படுத்தினர். அவற்றுள் மிகவும் பழமை வாய்ந்த ஆயுதம் கம்பு எனப்படும் ‘சிலம்பு’ ஆகும். முற்காலத்தில் இக்கலையை வீர மறவர்கள் பயன்படுத்தினர். தற்போது இது ஒருசில பள்ளிகளிலும், தனியார் அமைப்புகளாலும் கற்றுத்தரப்படுகிறது. விளையாட்டுப் போட்டிகளில் வீர விளையாட்டாகவும் இடம்பெறுகிறது. சிலம்பம், தமிழர்களின் வீரத்தின் அடையாளமாகவும், பண்பாட்டு சின்னமாகவும் கலாசார புதையலாகவும் விளங்குகிறது. “சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது. சிலம்பச் சுவடிகளில் குறிப்பிடப் படும் தொன்மையான சிலம்பச் சுவடு மற்றும் அடிவரிசைகள், தமிழக மூவேந்தர்களின் ஆட்சி முடிவுற்று, தமிழகம் அன்னியர்களுக்கு அடிமைப்பட்ட பின் கால மாற்றத்தால் அதன் பெயர்களும் ஆடும் முறைகளும் சிறு மாற்றமடைந்தன. வடக்கன் களரி, தெக்கன் களரி, சுவடு அடி முறை, கர்நாடகச் சுவடு, சிரமம், சைலாத், தஞ்சாவூர் குத்து வரிசை, நெடுங்கம்பு என்ற பெயர்களில் இன்றும் தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட பகுதிகளில் ஆடப்பட்டு வருகின்றன.
சிலம்பம் பற்றிய ஆய்வுகள்-
சிலம்பக் கலை பற்றிய அகழ்வாய்வுச் சான்றுகள் மிகத் தொன்மையானவை. கி.மு.2000க்கும் முற்பட்ட ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வில், 32வகையான சிலம்ப ஆயுதங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சென்னை அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. பிரிட்டனில் உள்ள அருங்காட்சியகம் ஒன்றில் எகிப்திய போர் வீரர்கள் பயன்படுத்திய நான்கு அடி நீளமுள்ள கம்பு வைக்கப்பட்டுள்ளது. அவர்கள் அந்த கம்பினைப் பயன்படுத்திய முறை சிலம்பத்தை ஒத்திருப்பதால் தமிழக எகிப்திய கலாச்சாரப் பரிமாற்றத்தின் ஒருபகுதியாக சிலம்பக்கலையும் பரவியதாக கருதப்படுகிறது.
பெயர் தோற்றம்-
சிலம்பம் என்ற பெயர் சிலம்பு என்ற வார்த்தையில் இருந்து உருவானது. சிலம்பு என்பதற்கு ஒலித்தல் என்று பொருள். சிலம்பம் ஆடும் பொது உருவாகும் ஒலிகளை குறிக்கும் விதமாக சிலம்பம் என்ற பெயர் சூட்டபட்டதாகச் சொல்லபடுகிறது. “சிலம்பம்’ என்ற சொல் “சிலம்பல்’ என்ற வினையின் அடியாகப் பிறந்தது. மலைப்பகுதிகளில் அருவி விழும் ஓசை, பறவைகளின் கீச்சொலி, மரங்களின் இலைகள் காற்றில் அசையும் ஓசை, விலங்குகளின் இரைச்சல் போன்ற பல ஓசைகள் ஒலித்துக் கொண்டே இருப்தால் மலைக்கு, “சிலம்பம்’ என்ற மற்றொரு பெயரும் உண்டு. எனவே, மலை நிலக்(குறிஞ்சி) கடவுளான முருகனுக்கும், “சிலம்பன்’ என்ற பெயருண்டு. கம்பு சுழலும்போது ஏற்படும் ஓசை மற்றும் ஆயுதங்கள் ஒன்றோடொன்று மோதும் ஓசை போன்று இருப்பதால், தமிழரின் தற்காப்புக் கலைக்கு “சிலம்பம்’ என்ற பெயர் ஏற்பட்டது. நெல்லை மாவட்டத்தில் கடையநல்லூருக்கு மேற்கே உள்ள மலைப்பகுதிகளில் வாழும் பழங்குடியினருள் “சிலம்பரம்’ என்ற பெயரும் வழக்கில் உள்ளது.
சிலம்பத்தடி-
சிலம்பம் ஆட்டத்திற்கான கம்பு அல்லது தடி, மூங்கில் இனத்தைச் சேர்ந்த சிறுவாரைக் கம்பு, பிரம்பு போன்ற மரங்களில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இதில் சிறு வாரைக் கம்பு என்பது நன்கு வளைந்து கொடுக்கக்கூடியது. சிலம்பத்திற்கான தடி, நிலத்தில் இருந்து ஓர் ஆளின் நெற்றிப் புருவம் வரையான உயரமுடையதாக இருக்க வேண்டும்.
சிலம்பம் சுமார் 5000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படுகிறது. 2500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அகத்திய முனிவர் 64 கலைகளில் ஒன்றாக சிலம்பத்தை குறிப்பிடுகிறார். சிலம்பம் பற்றி தமிழ் இலக்கியத்தில், குறிப்பாக சிலப்பதிகாரத்தில் சிலம்பம் ஆடுவதற்கான கம்பு, கத்தி போன்றவை ஒருகடையில் விற்கப்படுவதாகவும் அவற்றை வெளிநாட்டினர் மிக ஆர்வமுடன் வாங்கிச் செல்வதாகவும் குறிப்புகள் உள்ளன. திருக்குறளில் “கோல்’ என்ற பெயரிலும், கலிங்கத்துப்பரணியில், “வீசு தண்டிடை கூர்மழு ஒக்குமே’ என்ற வரிகள் மூலம், “தண்டு’ என்ற பெயரிலும் கம்பு குறிப்பிடப்பட்டுள்ளது. திருவிளையாடற் புராணத்திலும், சிலம்ப விளையாட்டு பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
சிலம்பம் பிறநாடுகள் வரை பரவி, அந்நாடுகளில் மெருகேற்றபட்டு காரத்தே ஆனது என்று சொல்பவர்களும், அதன் காரணமாக தான் “கராத்தே” என்ற பெயர் கரம் என்ற பொருள் தருவதாக உள்ளது என்று வாதிடுவோரும் உள்ளனர்” கராத்தே கலையின் முன்னோடி குங்பூ. இக்கலையை கி.பி.522ல் சீனா சென்ற பல்லவ இளவல் புத்திவர்மன், (போதி தர்மன்) புத்த துறவிகளுக்கு கற்றுக் கொடுத்தார். எனவே கராத்தே கலையின் முன்னோடி சிலம்பம் என்ற கருத்தும் உள்ளது.
சிலம்பத்தில் பல வகைகள் உண்டு.அவையாவன,
துடுக்காண்டம், குறவஞ்சி, மறக்காணம், அலங்காரச்சிலம்பம், போர்ச்சிலம்பம், பனையேறிமல்லு, நாகதாளி, நாகசீறல், கள்ளன்கம்பு ஆகியனவாகும்.
சிலம்பத்தின் வகைகள் :
சுவடு, தெக்கன்சுவடு, வடக்கன்சுவடு, பொன்னுச்சுவடு, தேங்காய்சுவடு, ஒத்தைச்சுவடு, குதிரைச்சுவடு, கருப்பட்டிச்சுவடு, முக்கோணச்சுவடு, வட்டச்சுவடு, மிச்சைச்சுவடு, சர்சைச்சுவடு, கள்ளர் விளையாட்டு, சக்கர கிண்டி, கிளவி வரிசை, சித்திரச் சிலம்பம், கதம்ப வரிசை, கருநாடக வரிசை
கி.பி. 15-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த “பதார்த்த குணசிந்தாமணி’ என்ற நூலில் சிலம்பம் விளையாடுவதால் வாதம், பித்தம், கபம் ஆகியவை நீங்கும் எனக்கூறப்பட்டுள்ளது. இவைகளைத் தவிர கம்பு சூத்திரம், குறுந்தடி சிலம்பம், நடசாரி போன்ற ஓலைச்சுவடிகளும் உள்ளன. இச்சுவடிகளில் உள்ள பாடல்கள் அகத்திய முனிவர் சிலம்பம் பயின்ற பிறகே யோகக் கலை, மருத்துவம் போன்ற கலைகளைப் பயின்றதாகத் தெரிவிக்கின்றன. சிலம்பாட்டம் என்பது சிறந்த உடற் பயிற்சியாகும். கம்பு எடுத்து சுழற்றும் போது உடம்பில் உள்ள ஒவ்வொரு நாடி, நரம்பும், தசைகளும் இயக்கப்படுகின்றன. கம்பைக்கைகளால் பிடித்து, தன்னைச் சுற்றிலும் சுழற்றிச் சுற்றும்போது தம் உடலைச் சுற்றிலும் ஒருவேலி போன்ற அமைப்பை உருவாக்கிட முடியும். ஒரே ஒரு கலத்தைக் (தடியை) கொண்டு அமைக்கும் இதுபோன்ற வேலிக்குள் வேறு ஆயுதங்களைக் கொண்டு யார் தாக்க முற்பட்டாலும் அதனை சுழற்றும் கம்பால் தடுத்திட முடியும். உடலின் வலிமை, ஆற்றல், விரைவுத்திறன், உடல் நெகிழ்தன்மை (flexibility) ஆகியவற்றை அடைய சிலம்பப் பயிற்சி உதவுகிறது.
இன்னைக்கு வெகு சிலரே சிலம்பக்கலையை கற்கின்றனர். இந்தியாவில் தமிழ்நாடு, கேரளா மற்றும் மலேசியா, பிரான்ஸ் போன்ற இடங்களில் சிலம்பம் பயிற்றுவிக்கப்படுகிறது. தமிழகரசு சிலம்பத்தை பள்ளி விளையாட்டாக அங்கீகரித்துள்ளது. மனோன்மணியம் சுந்தர னார் பல்கலைக்கழகத்தின் அங்கீகாரத்துடன் வெங்காடம்பட்டி சமுதாயக் கல்லூரியில் சிலம்பம் பட்டய படிப்பாக சிலம்பம் நடத்தப்படுகிறது.