ஒருவரிடம் நிலம் உரிமையாகி இருக்கின்றது என்றால் இரண்டு ஆவணங்கள் முக்கியமாக இருத்தல் வேண்டும்.
ஒன்று பத்திரம், இன்னொன்று பட்டா.
பத்திரம் – பதிவுத்துறை சார்ந்த ஆவணம், பட்டா – வருவாய்த்துறை சார்ந்த ஆவணம்.
இதில் பட்டாவை பற்றி இப்பகுதியில் காண்போம்!
பட்டா என்பது நில உரிமை ஆவணம்! அதில் தற்பொழுது யார் பெயரில் இருக்கிறதோ அவரே தற்போதைய உரிமையாளர்.
பட்டா ஆவணத்தில் மாநிலம், மாவட்டம், வட்டம், கிராமம், நிலத்தின் சர்வே எண், என்ன வகையான நிலம், வரிதொகை எவ்வளவு, இடத்தின் விஸ்தீரணம், உரிமையாளர் பெயர் மற்றும் அவரின் தந்தை பெயர் இருக்கும்.கூடுதலாக ஏதாவது நிலத்தை பற்றி குறிப்பு தேவைப்படின் அந்த குறிப்பு இருக்கும்.
அடுத்ததாக முக்கியமாக அறிந்து கொள்ள வேண்டிய பட்டாக்களின் வகைகளை கீழே பார்க்கலாம்!!
- யு.டி.ஆர் பட்டா:
மேனுவலாக கண்டபடி இருந்த நில உரிமை ஆவணங்களை முறைபடுத்தி ரீசர்வேக்கள் செய்து அனைத்து கிராமத்து நிலங்களுக்கும் சென்று (நத்தம் நிலங்கள் தவிர) நேரடி கள விசாரனை செய்து (வீட்டில் உள்ள ஆவணங்களை புத்தகங்கள் எல்லாம் தேவையுள்ளது தேவையற்றது என பிரித்து நம்முடையது பிறருடையைது என ஒமுங்குபடுத்தும் வேலையை போல்) மிக பெரிய அளவில் 1979 முதல் 1989 வரை தமிழகம் முழுவதுமாய் யு.டி.ஆர. பட்டா (Updating Data Registry ) தந்து அதனை கம்ப்யூட்டரில் ஏற்றினார்கள்.
அதாவது மேனுவல் ஆவணங்கள் கணினி மயமானது முதல் இப்பொழுது வரை இதனை தான் பட்டா ஆவணமாக பயன்படுத்தி வருகிறோம், தற்பொழுது இவை எல்லாம் ஆன்லைனில் ஏற்றப்பட்டு விட்டது.
மேனுவல் பட்டா
இப்பொழுது நடக்கும் சொத்து பரிவர்த்தனைகளுக்கான பட்டா பெயர் மாற்றங்கள் சர்வே எண் உட்பிரிவுகள் பெரும்பாலும் இந்த பட்டாவில் தான் நடக்கிறது. பட்டாவில் பெயரை சேர்த்தல், பட்டாவில் பெயரை மாற்றுதல், பட்டாவில் சர்வே எண் உட்பிரிவு செய்தல், போன்ற வேலைகளுக்கு இன்னும் பலர் அரசு,எந்திரத்துடன் போராடி வருகின்றனர்.
இன்னும் பலர், பட்டாவில் தந்தை பெயர் பிழை, தன் பெயர் பிழை, சர்வே எண் பிழை, அளவு பிழை என்று அதனை திருத்துவதற்கும் அலைந்து கொண்டு இருக்கிறார்கள். இன்னும் நிறைய இளம் தலைமுறையினர் தன் பூட்டன், தாத்தா, பங்காளி, அப்பா பெயரில் இருக்கும் பட்டாவை மாற்றாமல் நிலுவையில் வைத்து இருக்கிறார்கள். இவர்கள் பட்டாவை கிராம கணக்கரிடம் கொண்டு சென்றால் தான் பல நிதர்சனங்கள் புரியும்.
- நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா:
யூ.டி.ஆர் பட்டாவில் நத்தம் நிலத்தை தவிர மீதி நிலங்களை பட்டியல் இட்டார்கள், அளந்தார்கள்! நத்தம் என்பது பொதுமக்களுக்கு குடியிருப்பு தேவைக்காக வெள்ளைகாரன் காலத்திலேயே வகைபடுத்தப்பட்டு ஒதுக்கப்பட்டது.
பெரும்பாலும் நத்தம் நிலம் பழைய ஊர்களிலேயே அமைந்து இருக்கும். அந்த நத்தம் நிலத்திற்குதான் தோராய மற்றும் தூய பட்டா வழங்கினர்.
தோராய பட்டா என்பது நத்தம் நிலத்தில் உள்ள ஏரி, குளம், வீடு, தெரு என பிரித்து வரைபடம் உருவாக்கி, புதிய சர்வே எண்களை கொடுத்து நத்தம் நிலவரித்திட்ட பட்டா அதில் குடியிருந்தவர்களுக்கு வழங்கியது.
நத்தம் நிலவரித்திட்ட தோராய பட்டாவில் (பிழைகள், தவறுகள் இருக்கலாம்) அதில் ஏதாவது சிக்கல்கள், பெயர் பிழைகள் அளவு பிழைகள் இருப்பதை மக்கள் தெரிவித்தால் அதனை திருத்துவதற்க்கு கால அவகாசம் கொடுத்து கொடுக்கும் பட்டா, “தோராய பட்டா” இது ஒரு தற்காலிகமான பட்டா!
முழுமை விவரம் பெற்று தவறு எல்லாம் களைந்து மக்களுக்கு கொடுப்பது நத்தம நிலவரி திட்ட தூயப்பட்டா ஆகும். அதாவது கல்யாண பெண் மேக்கப்க்கு முன் மேக்கப்புக்கு பின் என்பதில் இருக்கும் வித்தியாசம்தான் தோராய பட்டாவுக்கும் தூயபட்டாவுக்கும் உள்ள வித்தியாசம். பெரும்பாலும் இரண்டு பட்டாவும் மேனுவலாகவே இருக்கும். பட்டா ஆவணத்தின் பின்புறம் நிலத்தின் வரைபடம் அளவுகளுடன் வரையபட்டு இருக்கும்.
ஒரு சிலர் தோராய பட்டா வாங்கியதும் பட்டா வாங்கிவிட்டாடோம் என்ற சந்தாதோஷத்தில் இருந்து விடுவார்கள். அதில் அளவு பிழைகள் இருக்கிறதா என நிலத்தை அளந்து ஒப்புமைபடுத்தி சரி பார்த்துகொள்ள வேண்டும்.
ஏனென்றால் நத்தம் நிலத்தில் இதுவரை இவ்வளவு இடம் நீ அனுபவிக்கிறாய் என ஆவணபடுத்தபடவில்லை, தோராய பட்டா வழங்கும் போது நீங்கள் அனுபவிக்கும் இடம் ஆவண படுத்தப்படுகிறது என்பதை நினைவில் கொள்ளவும்.
தூய பட்டா:
நத்தம் நிலத்திறகு அரசு பட்டா வழங்குவது பொதுமக்களுக்கு என நினைக்க வேண்டாம். வரி விதிக்காமல் நீங்கள் அனுபவிக்கும் நிலத்தை வரி விதிப்புக்குள் கொண்டு வரவும், சாலை, குளம், பாதை இடங்களை ஆவணப்படுத்தி ஆக்கிரமிப்புகள் ஆகாவண்ணம் தடுக்கவும் நத்தம் நிலவரி திட்டத்தினை செயல்படுத்தபடும் போது பை புராடக்டாக தங்களுக்கு பட்டா வழங்கபடுகிறது.
எனவே நிலவரிதிட்ட தோராய பட்டா வழங்கும் போது நிலத்தின் அளவுகளை கட்டாயம் சரி பார்க்கவும். இன்னும் பலர் தோராய பட்டா வாங்கியதுடன் நின்று விடுவர். தூயபட்டா அடுத்த ஆறுமாதத்துக்குள் கொடுத்து இருப்பர். அதனை அணுகி வாங்காமலேயே தோராய பட்டாவையே நிரந்தரபட்டா என்று நினைத்து கொண்டு இருப்பர்.
- ஏ.டி கண்டிசன் பட்டா :
ஏ.டி.கண்டிசன் பட்டா என்பது வட்ட ஆதிதிராவிடர் நலன் தாசில்தார் அவர்கள் வீட்டுமனைகள் இல்லாத பழங்குடியினர் & ஆதிதிராவிடர் மக்களுக்கு கிராமத்தில் உபரியாக இருக்கும் புறம்போக்கு நிலத்தில் மனைகளாக பிரித்து அம்மக்களுக்கு ஒப்படைப்பர்.
மேலும் மத்திய மாநில அரசு நிதி ஒதுக்கும் பட்சத்தில் தனியார் இடம் உள்ள நிலத்தை கிரைய பேர பேச்சு மூலம் ஆதிதிராவிடர் நலத்துறை கிரயம் வாங்கி, பழங்குடி ஆதிதிராவிடர் மக்களுக்கு மனைகளாக பிரித்து ஒப்படைப்பார்.
அப்படி ஒப்படை செய்யும் போது, கொடுக்கும் பட்டா ஏ.டி.பட்டா ஆகும். அது பெரும்பாலும் மேனுவல் பட்டாவாகவே இருக்கும். பெண்கள் பெயருக்கு தான் வழங்குவது மரபாக இருக்கிறது.
பட்டா ஆவணத்தில் பட்டா பெறுபவரின் புகைப்படம் ஒட்டி தனிவட்டாட்சியர் கையெழுத்து இட்டு இருப்பார். இதில் பல கண்டிசன்கள் இடம் பெற்று இருக்கும்.
முக்கியமாக மேற்படி இடத்தை பெறுபவர் வேறு யாருக்கும் குறிப்பிட்ட காலத்திற்கு விற்க கூடாது. விற்றாலும் பழங்குடியினர் அல்லது ஆதிதிராவிடராக இருத்தல் வேண்டும் என்ற கண்டிசன்கள் முக்கியமானதாக இருக்கும்
இதே தன்மையில் பயிர் செய்ய நிலமில்லாத ஆதிதிராவிட பழங்குடியின மக்களுக்கு 50 சென்டில் இருந்து ஒரு ஏக்கர் வரை விவசாய நிலங்கள் ஒப்படைக்கப்படும்.
- நில ஒப்படை பட்டா:
வீட்டு மனைகள் ! விவசாய நிலங்களை அரசு இலவசமாக ஒப்படைப்பது ஒப்படை பட்டா ஆகும். !
முன்னாள் ராணுவ வீரர்கள், பிற்படுத்தப்பட்ட ஏழை மக்கள், நலிவுற்றவர்கள், அரவாணிகள், போன்றோர்களுக்கு அரசு நிலங்களை இலவசமாக கொடுக்கும். அதனை நில ஒப்படை பட்டா என்பர். இவற்றிலும் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு பின் பிறருக்கு விற்க கூடாது என்று கண்டிசன்கள் இருக்கும். இதனை டி.கார்டு கண்டிசன் பட்டா என்றும் சொல்லுவர்.
- டி.எஸ்.எல்.ஆர் பட்டா:
டி.எஸ்.எல்.ஆர் பட்டா என்பது டவுன் சர்வே லேன்ட் ரெகார்ட் ஆவணம். இது நகராட்சி மற்றும் மாநகராட்சி பகுதிகளில் நகர் சர்வேயர்களை கொண்டு நிலங்களை மிக துல்லியமாக சர்வே செய்து உருவாக்கபடும் ஆவணகளில் இருந்து பொதுமக்களுக்கு ஒரு EXTRACT எடுத்து கொடுப்பார்கள். இந்த TSLR EXTRACT என்பது பட்டாவுக்கு இணையான ஆவணம் ஆகும்.
கிராம பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும் நகர பகுதிகளில் இருக்கும் பட்டாவிற்கும், இருக்கும் வித்தியாசம் என்னவென்றால், நகர பகுதிகளில் ஒவ்வொரு சதுர அடியும் மதிப்பு மிக்கது, அதனால் ERRORமிக மிக குறைந்தே இருக்கும்.
ஆனால் கிராம பகுதி சர்வேகளில் ஏக்கருக்கு 5 சென்ட் கூடுதல் குறைதல் இருக்கலாம். அதனால் அதிக துல்லியமும், எச்சரிக்கை உணர்வுடனும் நகர பகுதி சர்வேக்கள் செய்யபடுகிறது.
- தூசி பட்டா:
கிராம கணக்கில் 2 ம் நம்பர் புக்கில் “சி” பதிவேட்டில் கொடுக்கும் பட்டா 2சி பட்டா ஆகும். ஆனால் பேச்சு வழக்கில் தூசி பட்டா என்று அழைக்கபடுகிறது.
அரசு நிலத்தின் மேல் இருக்கும் (புளியமரங்கள், பனை மரங்கள், கனி தரும் மரங்கள்) மரங்களை அனுபவிக்க பராமரித்து கொள்ள , மேற்படி மரங்களுக்கு உரிமையளித்து கொடுக்கப்படும் பட்டா 2சி பட்டா இதனை மர பட்டா என்றும் அழைப்பர்.
- கூட்டு பட்டா:
தனிப்பட்டாவுக்கு நேர் எதிர் கூடுப்பட்டா, கூட்டுபட்டாவில் நிலத்தின் அளவு, சர்வே எண் உட்பிரிவு, திவிஙி – சப்டிவிசன் தனி தனியாக யார் யாருக்கு எவ்வளவு என்று குறிப்பிட்டு இருக்காது, உதாரணமாக ஒரு பெரிய கேக்கை (யார் யாருக்கு எத்தனை துண்டு, எந்த பக்கம் என்று சொல்லாமல்) நான்கு மகன்களிடம் கொடுத்து நீங்களே பிரித்து கொள்ளுங்கள் என்று சொல்வது போல் தான்.
நிலத்தில் நான்கு பேரோ, மூன்று பேரோ, இரண்டு பேரோ, அல்லது பல பேரோ ஒவ்வொரு மூலையில் நின்று அனுபவிப்பர். அவர்கள் பெயர்கள் எல்லாம் பட்டாவில் இருக்கும் ஆனால் சர்வே எண் உட்பிரிவு, அளவு பிரிவு, FMB உட்பிரிவு, செய்யப்பட்டு இருக்காது, பட்டாவே இல்லாமல் இருப்பதற்கு கூட்டு பட்டா சிறந்தது, கூட்டு பட்டவை விட தனிப்பட்டா சிறந்தது.
- தனிபட்டா:
தனிபட்டா என்பது தனி நபர் ஒருவர் பெயரில் இருக்கும். மேற்படி நிலத்தின் சர்வே எண்ணில் தனியாக சப் டிவிசன் செய்யப்பட்டு இருக்கும். பேச்சு வழக்கில் பட்டா உடைந்து இந்த நபர் பெயருக்கு மாறி இருக்கும் என்று சொல்வோம்.
புல எண் வரைபடத்திலும் இவருடைய நிலத்துக்கு உட்பிரிவு வரைபடம் வரையப்பட்டு இருக்கும். தனிபட்டாவில் பெயர், நில அளவு, புல எண் உட்பிரிவு, FMB சப் டிவிசன், ஆகியவற்றில் 100% தெளிவாக இருக்கும்.
யு.டி.ஆர் பட்டா, நத்தம் நிலவரி திட்டம் -தோராய பட்டா & தூய பட்டா ஏ.டி.கண்டிசன் பட்டா , நில ஒப்படை பட்டா , டி.எஸ்.எல்.ஆர் பட்டா, தூசி பட்டா, ஆகிய 6 பட்டாவும் யாருக்கு எத்தன்மையில் வழங்கபடுகிறது என பிரிக்கப்பட்டு இருக்கிறது.
தனிபட்டா கூட்டுபட்டா என்பது பட்டா ஆவணத்தின் தன்மையை பொறுத்தது என்பதை புரிந்து கொள்ளலாம்.