தேர்தலுக்குப் பின் இவிஎம் இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள மையங்களைத் தினசரி 5 முறை போலீசார் ஆய்வு செய்ய வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் ஒரே கட்டமாகக் கடந்த ஏப்ரல் 6ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில் நின்று மக்கள் ஆர்வமாக வாக்களித்தனர். இந்தத் தேர்தலில் ஒட்டுமொத்தமாக 72.78% வாக்குகள் பதிவாகியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் அதிகபட்சமாக 83.92% வாக்குகள் பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாகச் சென்னையில் 59.06% வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தலுக்குப் பின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனைத்தும் பாதுகாப்பான இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகள் 24 மணி நேரமும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகிறது. இந்த சிசிடிவி காட்சிகளை 24 மணி நேரமும் வெளியில் இருப்பவர்கள் பார்க்கும் வகையில் எல்இடி திரைகளும் வைக்கப்பட்டுள்ளது.
மேலும், இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைகளைச் சுற்றிலும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. உள்ளூர் போலீசாருடன் இணைந்து துப்பாக்கி ஏந்திய துணை ராணுவப் படையினரும், ஆயுதப்படை காவல்துறையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இவிஎம் இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் தினசரி குறைந்தபட்சம் 5 முறையாவது போலீஸ் அதிகாரிகள் சோதனை நடத்த வேண்டும் என டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.
வாக்குப்பதிவு இயந்திரங்கள் சேமித்து வைக்கப்பட்டுள்ள அறை பூட்டின் சீல் சேதம் அடையாமல் இருக்கிறதா, சிசிடிவி கேமரா காட்சிகள் சரியாக உள்ளனவா என்பது குறித்து ஆய்வு செய்ய டிஜிபி உத்தரவிட்டுள்ளார். மேலும், பாதுகாப்புப் பணியில் உள்ள போலீசார் பணியைச் சரியாக மேற்கொள்கிறார்களா என்பது குறித்தும் ஆய்வு செய்ய டிஜிபி தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளார்.